Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

இறக்காமம் மீனவர்...
“விவசாயத்தால் எங்களுக்கு பாதிப்பு….”…!?

வழமையான வரட்சியான காலத்தில் நீர்மட்டம் குறைவடையும் போது அதிகமான மீன்கள் பிடிபடும் சந்தர்ப்பங்கள்தான் அதிகம். ஆனால் இம்முறை அவ்வாறில்லை. விவசாயத்திற்காக வான் கதவுகள் திறக்கப்படும்போது அதனூடாக மீன்கள் அதிகளவில் வெளியேறுகின்றன.

08.09.2017  |  
அம்பாறை மாவட்டம்

“இப்பெல்லாம் மீன் படுதில்ல…குளம் வத்திபோயிற்றிருக்கு… மீன்கள் நிக்கிறதுக்கு ஆழம் இல்ல. அதனால மீன்களெல்லாம் சுரியில போய் (சேற்றில்)படுக்குதுகள். அதனால வலையில அதுகள் அகப்படுதில்ல…இந்த தொழிலை நம்பித்தான் நாங்க இருக்கோம். சரியான கஸ்ரம்..” என்கிறார்,குளத்தில் சுமார் 35 வருடங்களாக மீன்பிடித்து வரும் எ.ஸ்.எல். பாரூக்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள இறக்காமம் பிரதேசத்திலுள்ள வில்லுக்குளம் பற்றிதான் எ.ஸ்.எல். பாரூக் குறிப்பிட்டுள்ளார். வில்லுக்குளமானது சுமார் 2500 ஏக்கர் விஸ்தீரனமான பரப்பளவைக் கொண்டது. இது மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இறக்காமம் மக்களின் பூர்வீகம் இக்குளத்திலிருந்துதான் ஆரம்பிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இக்குளத்தின் மீன் பிடியை நம்பி சுமார் 1500 மீனவக் குடும்பங்கள் வாழ்கின்றன. அதுமட்டுமல்லாமல் இந்தக் குளத்து நீரைப்பயன்படுத்தி விவசாயமும் ஓட்டு உற்பத்தியும் இடம் பெறுகிறது.

வில்லுக்குளம்

“நான் 27 வருசமா இங்க மீன்பிடிச்சு வாறன். அக்காலத்தில மீன்பிடியில் ஒரு நாளைக்கு ஆயிரம், ஆயிரத்து ஐநூரு ரூபா வருமானம் இருந்தது. அதை வைச்சுதான் பிள்ளைகளைப் படிப்பிச்சன்;: வீடு கட்டினன். ஆனா இப்ப மீன்படாததால் வருமானம் 100 ருபா 200 ருபாவாக குறைந்து போய்விட்டது.” என்று தனது ஆதங்கத்தைவெளிப்படுத்தும் எஸ்.ஐ. தௌபீக். “மழையில்லாத காலத்தில தேவைப்படுற நீரை தேக்கி வைக்ககூடிய இந்த குளம் தூர்வாராததாலேயே இந்த நிலைக்கானது. அரசு இதில கவனம் செலுத்தியிருந்தா நாங்க இப்பிடி கஸ்ரப்படத் தேவையில்லை” என்கிறார் மன வேதனையுடன்.
ஒரு குடும்பத்தில் 5,6 பேருக்கு அதிகமாக வாழும் இந்தக் குடும்பங்கள் தமது வருமானத்திற்கு மாற்று வழிகளை நாடுகின்றனவா?

“எனக்கு இப்ப 55 வயதாகிவிட்டது. இதுக்குப் பிறகு நான் வேறென்ன தொழிலுக்குப் போறது. மௌத்தாகுமட்டும் இதைத்தான் செய்துட்டுக் கிடக்க வேண்டியதுதான்….மழை இப்பவரும் நாளைக்கு வரும் எண்டு கடன வேண்டிக்கிட்டு பாத்துகிடக்கிறம்” என்கிறார் எஸ்.ஐ. தௌபீக்.
இதையேதான் எ.ஸ்.எல். பாரூக்கும் சொல்கிறார். “இந்த தொழிலை விட்டால் வேறு தொழிலும் எங்களுக்குத் தெரியாது. கடனிலதான் எங்களது வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது.”
ஆனால் கே.எல். மீராசாஹிபு காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்கிறார். “இப்ப இங்க விவசாயம் வெட்டு சீசன் என்றதால் பகல்ல நெல்லு மூடை கட்டுவதற்கு போகிறேன். அங்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபா தருவாங்க. சீசன் முடிஞ்சா அந்த வருமானமும் இல்லை….ஆனாலும் பரம்பரை பரம்பரையாக செய்துக்கிட்டு வார தொழிலை விட்டுட்டுப் போகவும் மனம் வருகுதில்லை. ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று கிலோ மீன்பிடிச்சு சமாளிக்கவும் முடியல. குளத்துக்கு மீன்பிடிக்கப் போற செலவை ஈடுசெய்யத்தான் அது காணும். ஆனாலும் சும்மா இருந்து என்ன செய்ய, குளத்துக்குப் போய் எதையாவது பிடித்து வருவோம் என்று அங்கும் போகிறேன்.”
இதுவரை காலமும் இப்படியொரு பிரச்சினையை இவர்கள் எதிர்கொண்டதில்லை. அதனால் இந்த பிரச்சினை இன்று தீரும் நாளைதீரும் என நினைத்து பெருபாலானவர்கள் கடன் வேண்டி சீவியம் நடத்தி வருகின்றனர். காலம் பொய்த்து அந்தக்கடன்கள் அவர்களது கழுத்தை நெரிக்கும் போது அவர்கள் மேலும் சிக்கலுக்குள்ளாகும் நிலை இதுவரை வேளாண்மை செய்தவர்களின் அனுபத்தில் இலங்கை கண்டுள்ளது. ஆனாலும் வரட்சியால் பாதிக்கப்படும்போது அரசின் நிவாரணங்கள் ஓரளவுக்கு மக்களை ஆசுவாசப்படுத்தும். ஆந்த ஆசுவாசமும் இந்த மக்களுக்கு இல்லை என்றும் அவர்கள் வேதனைகொள்கின்றனர்.

“எமக்கு நன்னீர் மீன்பிடித் திணைக்களத்தால் ஒரு வருடத்துக்கு மூன்று தடவைகளில் சுமார் 5 இலட்சத்துக்கு மேற்பட்ட மீன்குஞ்சுகள் தருவார்கள். ஆனால் இந்தத் தடவை மீன்குஞ்சுகள் திணைக்களத்திடமிருந்தும் கிடைக்கப் பெறவில்லை. அது எமக்கு பெரிய இழப்பு. அடுத்தது, வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மானிய உதவிகளை அரசாங்கம் வழங்குகிறது. அதேபோல் இந்த வரட்சியால் நாங்களும் கடந்த ஆறு மாதங்களாக பாதிக்கப்பட்டிருக்கின்றோம். எந்த விதமான உதவிகளையோ, நஸ்டயீடுகளையோ அரசாங்கம் அறிவிக்கவுமில்லை, தரவுமில்லை.” என்கிறார், மீனவரும் கிராமிய நன்னீர் மீனவ சம்மேளனத்தின் செயலாளருமான ரஹீம்.


“ இந்தக் குளத்தின் பராமரிப்பு அபிவிருத்தி என்பன கவனத்தில் கொள்ளப்படவேண்டும். பலநீண்ட வருடங்களாக இந்தக் குளம் தூர்வாரப்படவில்லை.

வரட்சியால் நன்னீர் மீனவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறும் அதே வேளை இந்தக் குளத்தில் இருந்து விவசாயத்திற்கு நீர்வழங்கும் நடவடிக்கை நடந்துகொண்டுதானிருக்கிறது. அதுவும் தங்களைப் பாதிப்பதாக இந்த மீனவர்கள் முறைப்பாடுசெய்கிறார்கள்.
வழமையான வரட்சியான காலத்தில் நீர்மட்டம் குறைவடையும் போது அதிகமான மீன்கள் பிடிபடும் சந்தர்ப்பங்கள்தான் அதிகம். ஆனால் இம்முறை அவ்வாறில்லை. விவசாயத்திற்காக வான் கதவுகள் திறக்கப்படும்போது அதனூடாக மீன்கள் அதிகளவில் வெளியேறுகின்றன. இதைத் தடுக்க வான் கதவுகளில் மீன் தடுப்பு வலைகளைப் போடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மீனவர்கள் கோரியும் அது கவனத்திலெடுக்கப்படவில்லை என்று மீனவர்கள் குற்றஞ்சாட்டுக்கின்றனர்.

இந்த நன்னீர் மீனவர்களின் பிரச்சினைக்கு வரட்சி மட்டுமல்ல அரசின் அசமந்த போக்கும் முக்கிய காரணம் என்கின்றனர் அவர்கள்.
“இந்தத் தொழிலை நல்லமுறையில் செய்ய வேண்டுமாக இருந்தால் இந்தக் குளத்தின் பராமரிப்பு அபிவிருத்தி என்பன கவனத்தில் கொள்ளப்படவேண்டும். பலநீண்ட வருடங்களாக இந்தக் குளம் தூர்வாரப்படவில்லை. எனவே குளத்தைத் தோண்டி ஆழமாக்க வேண்டும். மேலும் குளம் வற்றுகின்ற போது ஆட்கள் குளத்தை மூடி காணி பிடிக்கிறார்கள். தகுந்த முறையில் இவற்றைத் தடுக்க வேண்டும். அரசாங்கம் இவற்றைச் செய்து எமது மீன்பிடி வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்ய முன்வர வேண்டும்.” என்கிறார் கிராமிய நன்னீர் மீனவ சம்மேளனத்தின் தலைவர் ஜே.ஏ. குத்தூஸ். “நன்னீர் மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் யாரும் கவனிக்கிறார்களில்லை. இதற்காக விரைவில் நாம் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளோம்.” என்றும் அவர் கூறுகிறார்.

/

மேலும் அக்கரைப்பற்று நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் தொடர்பு கொண்டு நன்Pர் மீனவர்களின் பிரச்சினைக்கு இந்தக் குளத்தின் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தியில் அரசின் அக்கறையின்மையே முக்கிய காரணமென்கின்றனர் உங்கள்பதில் என்ன என வினாவினோம்,
“இறக்காமம் வில்லுக் குளத்தின் சுற்றளவு வரையறுக்கப்பட்டு எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. அவ் எல்லையைத் தாண்டி காணிபிடிக்க வருபவர்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன் குறித்த இடங்களில் மக்களின் பார்வைக்காக நோட்டீஸ்களும் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் இக்குளத்தை சுற்றி அணைக்கட்டுடனான பாதை அமைப்பதற்கு தீர்மாணித்துள்ளோம். இவ் வேலையை ஆரம்பிப்பதற்கு முன்னர் பிரதேசத்துக்கும் குளத்துக்குமான இணைப்பை ஏற்படுத்தக் கூடிய வடிகாலமைப்பு ஏற்படுத்தப் பட வேண்டியுள்ளது. ஏனென்றால் இக்குளம் மழைக்காலங்களில் நீரைத் தேக்கி வைக்கக்கூடிய வெள்ளத் தடுப்புக் குளமாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இதற்காக இறக்காமம் பிரதேச சபை வடிகாலமைப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். அவ்வாறு தரும் பட்சத்தில், இந்த வேலைத்திட்டத்தை விரைவாக ஆரம்பிக்கலாம். அத்தோடு நீர்ப்பாசனத்தின் போது அணைக்கட்டினூடாக மீன்கள் வெளியேறுவதைத் தடுக்கவும் தடுப்பு வலை இடுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்தால் அவ் வேலைத் திட்டத்தை அப் பிரதேச மீனவர் சங்கங்களினூடாக விரைவாக முன்னெடுக்கவுள்ளோம். குளத்தை தூர்வாரி ஆழப்படுத்துவதற்காக 10 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்ட முன்மொழிவொன்றை அமைச்சுக்கு ஏன்கனவே        வழங்கியுள்ளோம். அந்நிதி கிடைக்கப்பெற்றால் குளத்தை தூர்வாரும் வேலையும் ஆரம்பிக்கப்படும்” என்று எல்லா பிரச்சினைகளையும் கவனத்தில் எடுத்திருப்பதாக அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர் ரி. மயூரன் தெரிவிக்கிறார்.