Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

சிறு தெய்வ வழிபாடுகள்
மலையக மக்களின் இன அடையாளம் இழக்கப்படுகிறதா?

“பயலுக நல்லாதான் இருந்தாங்க இப்ப நிறையப்பேரு கொழும்புல வேலைக்கு போறாங்க… அங்க அவங்க பழகுற ஆக்கள் அப்டிபோல, வெள்ளி செவ்வா கோயிலுக்கு போறாங்க நல்ல விசயம்தான். ஆனா நம்ம தாத்தா பாட்டிய மறந்துர்ராங்க அதான் கவல“

04.12.2017  |  
பதுளை மாவட்டம்

S.Parththipan

 

“இந்த பயலுக கொஞ்சம் வளந்துடாங்க தீவாளிக்கு அப்பாக்கு சாம்பிராணி (உயிரிழந்த தன் தந்தைக்கு படையல் படைத்து வழிபாடு செய்தல்) போட உடல…… இதெல்லாம் பழைய காலத்து பழக்கம் அப்டினு சொல்லி, ஊர்க் கோயிலுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. இது என்னமோ சரினு படல. ஊர்க் கோயிலில புரியாத மொழில ஐயர் ஏதோ ஓத, பொங்கல சாப்டுட்டு வீட்டுக்கு வந்ததுதான் மிச்சம்“ என கவலைப்படுகிறார் தலவாக்கலையை சேர்ந்த கந்தசாமி சுப்ரமணியம்

மலையக இளைஞர், யுவதிகளின் வாழ்வியல் மாற்றம், அவர்களது சிறு தெய்வ வழிபாடுகள் கைவிடப்பட்டு பெருந்தெய்வ வழிபாடுகளுக்குள் அவர்கள் இழுக்கப்பட்டுள்ளனர். முதியோரால் இவற்றை ஏற்றுக் கொள்ள முடியாதிருப்பது ஒவ்வொரு பண்டிகைக்காலத்தின் போதும் வெளிப்படுகிறது.

“பயலுக நல்லாதான் இருந்தாங்க இப்ப நிறையப்பேரு கொழும்புல வேலைக்கு போறாங்க… அங்க அவங்க பழகுற ஆக்கள் அப்டிபோல, வெள்ளி செவ்வா கோயிலுக்கு போறாங்க நல்ல விசயம்தான். ஆனா நம்ம தாத்தா பாட்டிய மறந்துர்ராங்க அதான் கவல“ என மேலும் தன் கதையை நீட்டித்தார் சுப்ரமணியம்.

அவரது வார்த்தையில் பொதிந்திருக்கும் அர்த்தம் மிகப்பெரியது. விசேட கொண்டாட்டங்களின் போது, அதிலும் குறிப்பாக தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது இறந்த தமது உறவுகளுக்கு படையல் வைத்து வழிபடுவதே மலையக தமிழ் மக்களின் முக்கிய வழிபாடாக இருந்தது. அதை இன்றைய இளைஞர் யுவதிகள் கைக்கொள்வதில்லை.
“இந்த காலத்துல அதெல்லாம் எப்டிங்க சரியாகும். அது முட்டாள்தனம். மனுசன எப்படி சாமினு சொல்ல முடியும். ஆவங்க மேல மருவாத இருக்கு….அதுக்கன்னு அவங்கள கும்பிடணும்னு இல்லையே….”என்கிறார் ஹட்டனைச் சேர்ந்த 23 வயது மூர்த்தி.

 

/ஆனா காலா காலமாக இம்மக்கள் தங்கள் வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்தவர்களையோ தமது வீட்டில் இருந்த வயோதிபர்களையோ விபத்தினில் இறந்த கன்னிப் பெண்களையோ வணங்கும் வழக்கினை கொண்டுள்ளார்கள். இவ்வாறு வழங்கும் முறை வீட்டுத் தெய்வ வழிபாட்டு முறையாகும்.

மலையகத் தமிழர்கள் (இந்திய வம்சாவழித் தமிழர்கள்) இலங்கையை வந்தடைந்து 200 வருடங்கள் ஆகின்றன (1817 – 2017) தமக்கென தனித்துவமான கலை, கலாசாரம் வழிபாட்டு முறைமை, பண்பாடு, பொருளதாரம், வாழ்வியல் முறை, பழக்க வழக்கங்கள் என ஒரு அடையாளத்துடனேயே இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பொருளாதாரம் மற்றும் கல்வி ரீதியில் இவர்கள் இன்னமும் பெரியளவில் முன்னேற்றமடையவில்லை என்பது உண்மையெனினும், கடந்த காலங்களைவிட தற்போதைய சூழலில் அதில் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு, ஏனை சமூகங்களிலிருந்து நாங்களும் சளைத்தவர்கள் என்ற உயரிய எண்ணம் அவர்களுக்குள் கல்வி ரீதியில் பாரிய ஒரு முன்னேற்றத்தை நோக்கி நகர்வதற்கான உந்து சக்தியாக அமைந்துள்ளது.

மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து எதைக் கொண்டுவந்தார்களோ இல்லையோ, தமக்கென ஒரு கலாசாரம், பண்பாடு, சமய வழிபாட்டு முறைமைகளோடுதான் இங்கு வந்தார்கள். சிலவற்றில் காலத்திற்கு ஏற்ற சில மாற்றங்கள் உள்வாங்கப்பட்டாலும் அவைகள் இன்னமும் அழிவடைந்துவிடவில்லை.

“சிறு தெய்வ“ எனப்படுவது இம்மக்களிடையே காணப்படும் வழிபாட்டு முறைமைகளில் மிக முக்கியமானது. கிராமிய கடவுள்கள் என்றும் அழைக்கப்படும் இந்த வழிபாடுகளானது இந்த மக்களின் நம்பிக்கை மற்றும் அவர்களின் முன்னோர்களின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படுகின்றது. உலகில் மிக தொன்மையான வழிபாடு இயற்கை வழிபாடாகும். அதற்கு அடுத்த வழிபாடு சிறு தெய்வ வழிபாடாகும் இவ்வாறான சிறு தெய்வ வழிபாட்டு முறைகள் என்பது வீட்டுத் தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இன தெய்வ வழிபாடு, ஊர் தெய்வ வழிபாபடு, முன்னோர் வழிபாடு என பல வகைகள் காணப்படுகின்றன.

மலையக மக்களை பொறுத்தவரை முனி, ரோத முனி, மலைசாமி, கவ்வாத்து சாமி, காளியம்மா, கொய்னூறான், முனியாண்டி, மகாமுனி, மாடன், மதுரவீரன் மற்றும் மூதாதையர்களை வழிபடல் போன்ற பல வழிபாட்டு முறைமைகளை தமக்கான சமய வழிபாட்டு முறைமைகளாகக் கொண்டுள்ளனர். (இன்னும் பல சிறு தெய்வ வழிபாடுகளும் இருக்கின்றன) எனினும் அவைகள் இன்றும் நடைமுறையில் இருக்கின்றதா என்ற கேள்வி நமக்கு எழுகின்றது.

தேயிலை செழிப்பாக வளர்வதற்காக ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வெட்டுபடுவதை ‘கவ்வாத்து’ என அழைப்பார்கள். இந்த வேலையினை செய்யும் போது ஆண்கள் பெரிய கத்தியினால் தேயிலை மரங்களை வெட்டுவார்கள். அவ்வாறு வெட்டப்படும் போது அவர்களுக்கு ஆயுதத்தாலோ வெட்டப்பட்ட தேயிலைச் செடியினாலோ தீங்கும் ஏற்படா வண்ணம் காத்தருள வேண்டும் என்பதற்காக கவ்வாத்து வேலை தொடங்கும் நாள் காலை கவ்வாத்துசாமி வழிபாடு நடைபெறும்.

“முன்னெல்லாம் கவ்வாத்து சாமினா அப்படி ஒரு விசேசம், கவ்வாத்து முடிஞ்சு மலையெல்லாம் துப்புறவு ஆக்கின பெறகு, பொங்க வச்சு சாமி கும்பிடுவோம் வண்ணாத்தி கோட்டைக்கு (மற்றுமொரு சிறுதெய்வம்) படைச்சி, கத்திக்கெல்லம் மஞ்சல், குங்குமம் தடவி சாமி மாதிரி பாத்துக்குவோம். இப்ப எங்க அதெல்லாம் கொஞ்ச கொஞ்சமாக இல்லாம போச்சு, எளசுங்க கவ்வாத்துக்கு போனாலும், கவ்வாத்து சாமி கும்பிடுறானுங்க இல்ல“ என சலித்துக்கொண்டார் 35 வருடங்களுக்கு மேல் கவ்வாத்து சாமி வழிபாட்டை தலைமை ஏற்று நடத்திய கந்தப்பளையைச் சேர்ந்த இராமநாதன். “இன்னும் கொஞ்ச நாள்ல கவ்வாத்தும் இருக்காது கவ்வாத்து சாமியும் இருக்காது“ எனவும் அவர் ஒரு எச்சரிக்கையும் விடுத்தார். இவ்வாறு கிராமிய வழிபாடுகள் வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கின்றன.

 

/புதுவருடத் தினத்தன்று (ஜனவரி முதலாம் திகதி) தேயிலை மலைகளில் தேயிலை செழிப்பாக காணப்பட வேண்டும் என ‘பொலிக்கொழுந்து’பறித்து காளியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவார்கள். சிறுதெய்வ வழிபாட்டில் காளியம்மா பலியேற்கும் கடவுளாகவும் சிலர் வணங்கி வருகின்றனர். இரத்தப்பலி கொடுப்பதும் வழமை. அதேபோல், காவல் தெய்வமாக வழிபடப்படும் சுடலைமாடன் கோயில்கள் சுடுகாட்டிற்கு அருகிலேயே அமைந்திருக்கும். சுடலைமாடனுக்கான கொடை விழா மூன்று நாட்கள் வெகு சிறப்பாக நடத்தப்படும். சுடலைமாடன் வழிபாடு இரவிலேயே நிகழும். ஆடு, சேவல், பன்றி ஆகியவை பலி கொடுக்கப்படும். பூசாரி குருதி கலந்த உணவைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று குருதிச் சோற்றை வானை நோக்கிச் சூறையிடும் சடங்கு தவறாது இடம்பெறும். இதனால் தாம் எல்லா வழிகளிலும் காக்கப்படுவோம் என மக்கள் நம்புகிறார்கள்.மேலும்,

 

முனி எனப்படும் தெய்வம் மலையகத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் ஒரு காவல் தெய்வமாக பார்க்கப்படுகின்றது. ஆறுகளை அண்மித்த இடங்களில் வேலைகைளை ஆரம்பிக்கும் போது முனி வழிபாடு நடைபெறும். அதில் ரோத முனி வழிபாடு இந்த மக்களிடையே மிகவும் பிரசித்தமானது. அதாவது தேயிலை தொழிற்சாலைகளில் காணப்படும் சில்லுகளின் சுழற்சியால் கொழுந்து தேயிலை தூளாக மாறுகின்றது. இந்த சுழற்சி மனித உயிர்கள் காவுகொள்ளாமல் இருக்க ரோத முனிக்கு இரத்தப்பலி கொடுத்து வழிபாடு நடைபெறும்.

“கவ்வாத்துக்கு போறவர்களும், கொழுந்து பறிக்க போகிறவர்களும், சாமிக்கு நேர்த்தி வைத்தவர்களும், அதனை மறந்து பெருங் கோயில்களுக்கு மட்டுமே போறாங்க” என்கிறார் இராமநாதன்.


கவ்வாத்துக்கு போனாலும், கவ்வாத்து சாமி கும்பிடுறானுங்க இல்ல“

“மதுரவீரன் கோயில் உடஞ்சு கெடக்கு, குதிரயில வாள காணோம். எனக்கு வயசு போச்சு, பயலுக அத கண்டுகிறாங்க இல்ல. ஊர் கோயில கட்ட காசு சேர்த்த திரியுறாங்க“ என்கிறார் ஹட்டனைச் சேர்ந்த முருகையா மதுரைவீரனை கவனிக்கத் தவறும் அவரது வாரிசுகள் ஊரக் கோயிலை (அந்த ஊரில் உள்ள முருன் ஆலயம்) அமைக்ககும் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுகின்றார்கள். இதனூடாக அவர்கள் பரம்பரையாக வழிபட்டு வந்த மதுரைவீரன் இன்று கவனிப்பார் அற்று கிடக்கின்றார். பெரு தெய்வ வழிபாடு மீதான ஆர்வம் மற்றும் அதன் ஆதிக்கம் சிறு தெய்வங்களை மறக்கடிக்கச் செய்திருக்கின்றது. என்பது அவரது ஆதங்கம்.

 

/

இப்படி பல காரணங்களுக்காகவும் பல தலைமுறைகளாகவும் தொடர்ச்சியாக நடைமுறையில் இருந்த வழிபாடுகள் இல்லதாதொழிந்துபோவது அந்த மக்களின் அடையாளத்தை தொலைத்தமைக்கு சமமானதாகவே பார்க்க வேண்டியிருக்கின்றது.

“இந்தக் கிராமிய சிறுதெய்வ வழிபாடுகள் மக்கள் தாமாகவே இயற்றிக்கொண்ட வழிபாட்டு முறைகளுடனும் கலைகளுடனும் பின்னிப்பிணைந்துள்ளது. ஆனால் ஆகமவிதிப்படி கோயில் கட்டி பெருந்தெய்வ வழிபாட்டை நிகழ்த்தும் போது அது மக்களிடம் இருந்து அன்னியமாகிப்போவதை உணர முடிகிறது” என்கிறார் பத்தனையைச் சேர்ந்த ந.கவிதா (இவர் பல்கலைக்கழக மாணவி) அவர் தொடர்ந்து கூறுகையில், “ தவிர்க்கமுடியாத இந்த மாற்றங்களை நாம் உள்வாங்கினாலும், கலைகளுடன் இணைந்த எமது சிறுதெய்வ வழிபாட்டு முறைகளை அழியாது மீட்டெடுத்து பதிவுசெய்யவேண்டிய கடப்பாட்டில் நாம் உள்ளளோம். அதுதான் எமது இன அடையாளங்களில் ஒன்றாகவும் இருக்கும்” என்கிறார்.