Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

இலங்கையில் முஸ்லீம்கள்...
கரைந்து வாழத்தேவையில்லை! கலந்து வாழவேண்டும்!

பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு சமூகங்களிடையே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றுக்குப் பின்னால் அரசியல் கரங்கள் செயற்படுவதால் பொது மக்களால் ஒரு சமாதான உடன்பாட்டுக்கு வர முடியாமால் உள்ளது. பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் எட்டப்படாமல் பிரச்சினைகள் அவ்வாறே கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. எனவே இந்தப் பிரச்சினைகளையெல்லாம் தீர்ப்பதற்கு சிறந்த ஒரு பொறிமுறை செயற்பாடு அவசியமாகிறது. அவற்றுக்குத் தீர்வுகாணும் பட்சத்தில் இப்பிரதேசத்தில் மக்களிடையே சகவாழ்வு தோன்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.

25.01.2018  |  
அம்பாறை மாவட்டம்
சர்வ மத சம்மேளனத்தினதும், சமயங்கள் மூலம் சமாதானத்துக்கான அமைப்பினதும்அம்பாறை மாவட்ட தலைவர் டாக்டர் ஏ.எம். ஜெமீல்

இஸட்.ஏ.றஹ்மான்
ஏ.எம்.பாயிஸ்

 

“குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில், 2008 ஆம் ஆண்டு சர்வ சமய சம்மேளனத்தை நாம் ஆரம்பிப்பதற்கு முதல் சமூகங்களிடையே உறவை விட பகைதான் அதிகமாகக் காணப்பட்டது. மக்களிடையே சந்தேகம், வெறுப்பு, உரையாடலின்மை போன்ற நிலைதான் காணப்பட்டது. 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு இனங்களிடையே ஒற்றுமை இல்லாவிடினும் பகை இல்லாமல் போயுள்ளது. அந்த அடைவை இந்த நல்லிணக்க செயற்பாடு மூலமாகத்தான் பெற்றுக் கொண்டோம்.” என்று கூறுகிறார்சர்வ மத சம்மேளனத்தினதும், சமயங்கள் மூலம் சமாதானத்துக்கான அமைப்பினதும்(SLPRC) அம்பாறை மாவட்ட தலைவராக செயற்படும் டாக்டர் ஏ.எம். ஜெமீல் . அவருடனான நேர்காணல்.

கேள்வி: இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாடு. இங்கு வாழும் 
இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் 
பிரச்சினைகள் தொடர்பில் கூற முடியுமா?

புதில்: இன்று இலங்கையில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு அவர்களது மார்க்கமான இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பதில் பல்வேறு பிரச்சினைகளும் சிரமங்களும் ஏற்பட்டுள்ளன.
முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் என்று பார்க்கும் போது முதலாவது குடியுரிமை தாயகக் கோட்பாடு. பெரும்பான்மையினர் சொல்வது இலங்கை எங்களது நாடு, உங்களுக்கு இந்த நாட்டில் உரிமையில்லை, நீங்கள் சவூதி அரேபியாவுக்குப் போங்கள் என்று கூறும் நிலைமையுள்ளது. இது எங்களுக்கு ஒரு பிரச்சினையான விடயமாகும்.
இரண்டாவது, எமது வதிவிடங்கள், விவசாய நிலங்களெல்லாம் மெல்ல மெல்ல பறிபட்டுப் போகின்றதுடன் பறிகொடுத்துவிட்டும் வருகின்றோம். 1950 களில் கல்லோயாத் திட்டம் வந்தபோது ஏ.கே. காரியப்பர் என்பவரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவின் மூலம் அக்காலத்தில் பிரிட்டிஷ் அரசினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு டீ.எஸ். சேனா நாயக்க காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அந்த நேரத்தில் எம்.எஸ். காரியப்பர் எங்களுக்கு 50:50 தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதற்கு அரசாங்கம் உடன்பட்டது. ஆனால் எங்களுடையவர்கள் அங்கு போய் இருக்கவில்லை. ஏனைய சமூகங்கள் தங்களது நிலங்களை ஸ்திரப்படுத்தி வைப்பது போல் எங்களுடைய மக்கள் அவ்வாறு ஸ்த்திரப்படுத்தவில்லை. அங்கிருந்த விவசாய நிலங்கள், மேய்ச்சல் தரைக் காணிகள் எல்லாம் கைவிட்டு விட்டு வந்ததால் அதில் தென்பகுதி சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டார்கள். இதனால் அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையினராக வாழும் முஸ்லிம்களுக்கு தமிழ் பேசக்கூடிய ஒருவரையோ அல்லது முஸ்லிம் ஒருவரையோ அரசாங்க அதிபராக கொண்டுவர முடியாமல் உள்ளது.

சர்வ மத சம்மேளனத்தினதும், சமயங்கள் மூலம் சமாதானத்துக்கான அமைப்பினதும்அம்பாறை மாவட்ட தலைவராக செயற்படும் டாக்டர் ஏ.எம். ஜெமீல்

அதிகாரம், நிர்வாகம், தொழில், வளங்கள் போன்றவற்றில் நியாயமான பகிர்வு இல்லாமையும் மேலாதிக்கமும் பக்கசார்பான தீர்மானங்களும் எடுக்கப்படுவதால் முஸ்லிம்கள் இவ்விடயங்ளிலிருந்து பின்தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுடைய அபிவிருத்தி இதனால் தடுக்கப்படுவதுடன் பொது வசதிகள் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தது சமய சுதந்திரத்துக்கான தடைகள். உதாரணமாக பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் சமய கிரியைகள் மீது பலத்த எதிர்ப்புக்கள் காட்டப்படுகின்றன. 20 வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான பிரச்சினைகள் இந்நாட்டில் இருக்கவில்லை.
சமய கலாச்சார விடயங்களில் தவறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு அதற்கு எதிர்ப்புக் காட்டப்படுகின்றன. அதாவது முஸ்லிம்களின் ஹலால் உணவுப் பழக்கம், முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா ஆடை ஆகியற்றுக்கு எதிராக சில கடும்போக்கு அமைப்புக்கள் தவறான பிரச்சாரங்களை முன்னெடுத்து மக்கள் மத்தியில் தப்பபிப்பிராயங்களை வளர்த்து வருகின்றன.
தொழில் முயற்சிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. 1957 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் புறக்கோட்டைப் பகுதிகளில் முஸ்லிம்கள் நிறைய வணிக ஸ்த்தலங்களை வைத்திருந்தனர். ஆனால் இன்று அவ்வாறு வணிக ஸ்தலங்களை விஸ்தரிக்கவோ, புதிதாக உருவாக்கவோ முடியாமல் உள்ளது.
இலங்கையிலும் சில முஸ்லிம் நாடுகளிலும் ஒரு சில முஸ்லிம் சமூக விரோதிகளால் செய்யப்படும் சட்ட விரோத செயற்பாடுகளை பெரிதுபடுத்தி முழு முஸ்லிம் சமூகத்தையும் இழிவுபடுத்த முயலும் சந்தர்ப்பவாத ஊடகங்களின் செயற்பாடுகளாலும் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்றன. உலகத்தில் எங்கு தவறு நடந்தாலும் அது முஸ்லிம்கள் செய்திருப்பார்கள் என்ற பிரம்மையை இவ்வாறான தவறான ஊடகப் பிரச்சாரம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விடுகிறது.
இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான பல பிரச்சினைகள் இங்கு இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகள் முஸ்லிம்களின் அமைதியான, சுதந்திரமான வாழ்வுக்கு அச்சுறுத்தலாகவும் தடையாகவும் இருக்கின்றன.

 கேள்வி: இப்படி சமய ரீதியான முரண்பாடு இலங்கைச் சமூகங்களுக்கு 
மத்தியில் தோன்றியமைக்கான அடிப்படைக் காரணங்கள் என்னவென்று 
நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: இந்தப் பிரச்சினை 2010 ஆம் ஆண்டிலிருந்து துளிர் விடத் துவங்கியது. அதாவது பிரச்சினை தென்பகுதியில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில்தான் ஆரம்பித்தது. அளுத்கமவில் முஸ்லீம்கள் தாக்கப்படமை (http://www.bbc.com/news/world-asia-27864716) போன்ற பிரச்சினைகளை இதற்கு பெரிய உதாரணமாகக் கூறலாம். இப்பிரச்சினைக்கு மூல காரணமானவர்கள் ‘பொதுபலசேனா’ என்ற பௌத்த அமைப்பினர்.;.( http://edition.cnn.com/2014/07/17/world/asia/sri-lanka-bodu-bala-sena-profile/index.html) முஸ்லீம்கள் மீது கொண்ட காழ்ப்புணர்வே இப்பிரச்சினைகள் உருவாக முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

கேள்வி: இந்த சர்வமத சம்மேளத்தினூடாக இவற்றுக்கு எந்தளவில் 
தீர்வுகாண முடிந்திருக்கிறது?

புதில்: குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில், 2008 ஆம் ஆண்டு சர்வ சமய சம்மேளனத்தை நாம் ஆரம்பிப்பதற்கு முதல் சமூகங்களிடையே உறவை விட பகைதான் அதிகமாகக் காணப்பட்டது. மக்களிடையே சந்தேகம், வெறுப்பு, உரையாடலின்மை போன்ற நிலைதான் காணப்பட்டது. 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு இனங்களிடையே ஒற்றுமை இல்லாவிடினும் பகை இல்லாமல் போயுள்ளது. அந்த அடைவை இந்த நல்லிணக்க செயற்பாடு மூலமாகத்தான் பெற்றுக் கொண்டோம்.
இன்று தமிழ், சிங்கள, இஸ்லாமிய சமூக மக்கள் ஒருவருக்கொருவர் பழகுகின்றனர், உரையாடுகின்றனர். தொழில் நிமித்தம் பிற இன மக்கள் வாழும் கிராமங்களுக்குச் சென்று பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக இன்று சகவாழ்வுக்கான ஒரு அத்திவாரம் இடப்பட்டிருக்கின்றது. அத்துடன் இஸ்லாமியர் மீது பிற சமூகத்தினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டியது இஸ்லாமியரின் கடமை. அதனூடாக அவர்களிடையே ஏற்பட்டுள்ள சந்தேகத்தை இல்லாமல் செய்ய முடியும். இஸ்லாம் மதத்தைப் பற்றி அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அவர்களுடைய மதம், கலாசாரம் தொடர்பிலும்; இஸ்லாமியர்கள் அறிந்திருக்க வேண்டும். இவ்விடயம் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்.

கேள்வி: பல்லின சமூகம் வாழ்கின்ற அம்பாறை மாவட்டத்தில் சமூகங்களிடையே 
நிரந்தரமான சமாதானத்தைக் கொண்டு வருவதிலுள்ள தடைகள் எவை 
என எண்ணுகிறீர்கள்?

பதில்: அம்பாறை மாவட்டத்திலுள்ள சிங்கள மக்களோடு முஸ்லிம் தமிழ் மக்களுக்கு பெரிய பிரச்சினை இல்லாவிட்டாலும் மொழிரீதியானதொரு தடை காணப்படுகின்றது. இத்தடையால் மக்கள் தங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும், உணர்வுகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள முடியாமலுள்ளனர். அதேபோன்று தமிழ்-முஸ்லிம் மக்களிடையே மொழி ரீதியான வலுவான உறவு காணப்பட்டாலும் அதிகார ரீதியானதொரு பிரச்சினை காணப்படுகின்றது. அதாவது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நிர்வாக அலகுக்குள் தமிழ் மக்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர். அதேபோன்று தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நிர்வாக அலகுக்குள் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர். இதனிடையே இந்த இரண்டு சமூகங்களுக்கிடையிலும் வளப்பகிர்வு மற்றும் அபிவிருத்தி விடயங்களில் அதிகார ரீதியான பிரச்சினை காணப்படுகின்றது. அதாவது கல்முனை, காரைதீவு, சம்மாந்துறை போன்ற பல நிர்வாக பிரதேசங்களிலே இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்றன. அத்தோடு மூன்று சமூகங்களுக்கு மத்தியிலும் காணிப் பிரச்சினைகளும்; காணப்படுகின்றன. மேய்ச்சல் தரை, விவசாயக் காணி, குடியிருப்புக் காணிகள் என்பன யுத்தத்தின் பின்னர் எழுந்துள்ள பிரதான பிரச்சினைகளாகும்.
இவை பெருந்தடைகளாகின்றன. இவற்றைத் தீர்த்துக் கொள்வதற்கு சமூகங்களிடையே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றுக்குப் பின்னால் அரசியல் கரங்கள் செயற்படுவதால் பொது மக்களால் ஒரு சமாதான உடன்பாட்டுக்கு வர முடியாமால் உள்ளது. பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் எட்டப்படாமல் பிரச்சினைகள் அவ்வாறே கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. எனவே இந்தப் பிரச்சினைகளையெல்லாம் தீர்ப்பதற்கு சிறந்த ஒரு பொறிமுறை செயற்பாடு அவசியமாகிறது. அவற்றுக்குத் தீர்வுகாணும் பட்சத்தில் இப்பிரதேசத்தில் மக்களிடையே சகவாழ்வு தோன்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.

கேள்வி : பல்லின சமூகங்கள் வாழும் இந்த நாட்டில், ஆள்மாறாட்டம், 
அடையாளப்படுத்தல் போன்றவற்றில் உள்ள சிக்கல்களைக் காரணங் காட்டியே 
முஸ்லீம் பெண்களின் ஆடைபற்றிய விமர்சனங்களும், மறுப்புகளும் 
முன்வைக்கப்படுகின்றன. இது பற்றி உங்கள் கருத்து?

முன்பு எமது நாட்டில் முஸ்லிம் பெண்கள் ஹபாயா ஆடை அணிவது குறைவாகும் எல்லோரும்போல் அவர்கள் சாரியையே அணிந்தார்கள், சாரியாலேயே முக்காடு போட்டார்கள். காலப் போக்கில் முஸ்லிம்களின் ஆடையான ஹபாயாவை அணிய தொடங்கினர் இது முஸ்லிம்களின் தனித்துவத்தை காட்டும் விடயமன்றி வேறில்லை.
இஸ்லாமிய மார்க்கத்தில் பெண்களின் முகம்,கை தவிர்ந்த ஏனைய உறுப்புக்கள் மறைக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது இதனால் முஸ்லீம்பெண்கள் ‘ஹபாயா’ எனும் ஆடையை அணிகிறார்களே தவிர வேறு எந்த நோக்கமுமில்லை. ஆனாலும் முஸ்லிம் பெண்களின் மிகக்குறைந்த சிலர் முகத்தையும், கையையும் மறைக்கும் ஆடையான ‘நிகாப்’ எனும் ஆடையையும் அணிகிறார்கள். முற்றாக எமது பெண்கள் உடலை மறைத்துக் கொள்வதனால் அலுவலக நடைமுறைகளில் அவர்களது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளால் முடியாமல் போகின்றது. இது எமது பெண்கள் முற்றாக மறைத்துக் கொள்வதனால் ஏற்படுகின்ற பிரச்சினைகளாகும். இவற்றை எமது பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது. அதாவது இஸ்லாம் பெண்களின் உடையணியும் விடயத்தில் அவர்களுக்கு முகம் மற்றும் கரண்டைக் கை போன்றவற்றை தெரியுமளவுக்கு ஆடை அணிவதற்கு அனுமதியளித்திருக்கிறது. இலங்கை ஒரு பல்லின சமூகம் வாழ்கின்ற நாடு என்பதை கவனத்திற்கொண்டு அதற்கேற்றாற் போல் நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். பிற சமூகத்தினர் எம்மால் சிரமப் படும் நிலைமையை நாம் ஏற்படுத்தி விடக் கூடாது. இருந்த போதிலும் மனித உரிமைகள் பிரகடனப்படி ஆடை அணிவது அவரவர் தெரிவுக்குட்பட்டது.

கேள்வி: முஸ்லிம்கள் தங்களுக்கெதிராக முன்னெடுக்கப்படும் பிரச்சினைகளை 
எவ்வாறு கையாளலாம் என்று எண்ணுகிறீர்கள்?

பதில்: முஸ்லிம்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்று மனப்பூர்வமாக நடந்து கொள்ள வேண்டும். வந்தான் வரத்தான் போன்ற மனப்பான்மையுடன் நடந்து கொள்ளாமல் பொது விடயங்களில் பங்கு கொள்ள வேண்டும். சுதந்திர தினம் என்றால் முஸ்லீம்களும் தேசியக் கொடியைப் பறக்க விட்டு அதை சிறப்பித்து மனப்பூர்வமாக அனுஷ்டிக்க வேண்டும். அனர்த்தம், இரத்த நன்கொடை பல்வேறு தேசிய விடயங்களுக்கு பங்களிப்புச் செய்வதுடன் அரச நிறுவனங்களுடன் இணைந்தும் செயற்பட வேண்டும். இவ்வாறு செயற்படுகின்ற போது நாம் வேறானவர்கள் என்ற மனோநிலை பிறருக்கும் ஏற்படாது. நாமும் ஒதுங்கிச் செல்லும் மனோநிலையுடன் இல்லாமல் பங்குதாரர்களாகவும் மாறி விடுவோம். அத்தோடு எல்லா மதத்தவரும் விட்டுக்கொடுப்பு சகிப்புத் தன்மையோடுதான் இந்த நாட்டில் வாழ வேண்டும். முஸ்லீம்களும் அவ்வாறே வாழவேண்டும். அதாவது கலந்து வாழ வேண்டுமே தவிர, கரைந்து வாழத் தேவையில்லை.