Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

இஸ்லாமியரின் பொல்லடி
மீட்டெடுக்க வேண்டிய கலை!

“இந்தப் பொல்லடிக்கு விப்பனை எனும் கம்பைத்தான் பயன்படுத்துகிறோம். இது உடையாது வளையாது. காட்டில் பூவிப்பனை, கல்விப்பனை, கொடிவிப்பனை என மூன்று வகை மரங்கள் காணப்படுகின்றன. இதில் கல்விப்பனைக் கம்புதான் நல்லா ஒலி எழுப்பக் கூடியது.

19.02.2018  |  
அம்பாறை மாவட்டம்
ஆண்களால் ஆடப்படும் பொல்லடி

யானை கட்டப் போவோம் வாருங்கடா தம்பி…
ஆட்களைக் கொஞ்சம் சேருங்கடா…
ஏக இறையோன் பள்ளியிலே…
ஓன்றாய்க் கூடுங்கடா…
என்று பாடிக்கொண்டிருந்தார் கே.எல். அலியார்.

கிழக்கிலங்கையின் இறக்காமத்தைச் சேர்ந்த ‘பொல்லடி’ எனும் கோலாட்டக் கலைஞர் இவர். கிழக்கில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் வழக்கில் உள்ள ஒரு கலையே ‘பொல்லடி’.

பொல்லடி பழகிய குழுவினர்

“ஒரு காலத்தில் இஸ்லாமியர்  மத்தியில் பெயர்பெற்றிருந்த ‘பொல்லடிக் கலை’ இன்று அருகிப் போய்விட்டது’’ என கவலைகொள்கிறரர் இவர். பொல்லடி என்பது களிகம்பு என்றும் சொல்லப்படுகிறது. கே.எல் அலியார் அருகிவரும் இஸ்லாமியக் கலைகளை உயிர்ப்பிக்க, இஸ்லாமிய கலாச்சார சமூக மரபுரு அமைப்பொன்றை ஆரம்பித்து அதன் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.

“அந்தக்காலத்தில் விவசாயம், விறகு வெட்டுதல், போன்ற தொழில்களில் ஈடுபட்ட ஆண்கள் ஓய்வு நேரங்களில் ஒன்று சேர்ந்து இந்தப் பொல்லடி அடித்து பாட்டுப்பாடி மகிழ்ந்துள்ளனர். இது ஒரு பொழுதுபோக்கு கலையாக அன்றிருந்துள்ளது. எட்டு முதல் இருபத்து நான்கு வரையான எண்ணிக்கையில் ஆண்கள் இதில் பங்குபற்றுவர். ஒன்றாக வேலை செய்வோர் ஒன்று கூடி தமக்குள் ஒரு பிணைப்பினை ஏற்படுத்திக்கொள்ளவும் இக்கலை உறுதுணையாக இருந்துள்ளது” என்கிறர் அலியார். 1934 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்குப் பிரதேசத்தில் பொல்லடி அறிமுகமாகியதாக வரலாறு கூறுகின்றதாம். பொல்லடியானது கிராமத்தில் முக்கிய வைபவங்களிலும் ஆடப்படுவது. ‘பெருநாட்கள், கல்யாணம், கத்னா, காதுகுத்துதல், பிரமுகர் வரவேற்பு’ (நூல் :இஸ்லாமியக் கலைகள்) போன்ற நிகழ்வுகளின்போதும் ஆடப்படுகிறது. ஆண்களால் மட்டுமே ஆடப்படும் இந்தப் பொல்லடியில் மிகப்பிரதானமாக பாவிக்கப்படும் ‘பொல்’ (கம்பு) பற்றி அலியார் சுவாரஸ்யமான கதைகளைக் கூறுகிறார்.

கே.எல் அலியார் அருகிவரும் இஸ்லாமியக் கலைகளை உயிர்ப்பிக்க இஸ்லாமிய கலாச்சார சமூக மரபுரு அமைப்பொன்றை ஆரம்பித்து அதன் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.

“இந்தப் பொல்லடிக்கு விப்பனை எனும் கம்பைத்தான் பயன்படுத்துகிறோம். இது உடையாது வளையாது. காட்டில் பூவிப்பனை, கல்விப்பனை, கொடிவிப்பனை என மூன்று வகை மரங்கள் காணப்படுகின்றன. இதில் கல்விப்பனைக் கம்புதான் நல்லா ஒலி எழுப்பக் கூடியது. எனவே அதைத்தான் தேர்ந்தெடுப்போம். அதை சும்மா வெட்டி எடுத்து பயன்படுத்திவிடமுடியாது. இந்தக் கம்பைப்பதப்படுத்தி எடுப்பது என்பது மிகப்பெரிய செயல்முறையாகும்.” ஏன்றவர் அந்த செயல்முறை பற்றி எம்மிடம் விபரித்தார்.
“கம்பை எடுத்து ஆறு, ஏழு மாதங்கள் தண்ணீருக்குள் போட்டு ஊறவைக்க வேண்டும். பின்னர் அதை நன்றாக எறிக்கும் வெய்யிலில் நன்கு காய வைக்கவேண்டும். பல நாட்கள் அது காயும். பின்னர் கம்புகளை அடுக்கி சுடவேண்டும். அதற்காக அதன்மேல் தேங்காய் மட்டைகளைப் போட்டு எரிக்க வேண்டும். நெருப்பில் சுட்ட கம்பு சும்மா இரும்பு மாதிரி இருக்கும். இவ்வாறு முறையாகப் பதப்படுத்தி எடுத்த கம்பு வைரமாக உறுதியாக இருக்கும். நல்ல சத்தமும் வரும்.
இவ்வாறு பண்படுத்தியதன் பின்னர், அழகுபடுத்துவதற்காக ஓடாவிமாரிடம் கொடுத்துக் கடைந்து பண்ணுக்குப் போடும் மஞ்சள், பச்சை, சிவப்பு நிறச் சாயங்களால் வர்ணம் பூசுவோம். அதன் பின்னர் ஓசை எழுப்புவதற்காக சலங்கையை அதில் கட்டுவோம் கோலை வடிவமைப்போம். இப்படித்தான் பொல்லடிக்கான கோலை வடிவமைக்கின்றோம் என்றார்.
பிற்பட்ட காலங்களில் நிகழ்வுகளின் வரவேற்பின் போதும், திருமண வீடுகளிலும், விழாக்களின் போதும் இந்தப் பொல்லடி பயன்படுத்தப்பட்டு வந்தது. நாட்டில் யுத்தம் மூண்டபோது இந்தக் கோலாட்டம் மெல்ல மெல்ல மறைந்து அருகிப்போனது. ஏனென்றால் அக்காலப் பகுதியில் மக்கள் தமது விழாக்களை பகிரங்கமாக, ஆடம்பரமாக செய்ய முடியாத நிலையேற்பட்டதும், தேரச்சிபெற்ற அக்காலத்தைய அண்ணாவிமார்கள் மரணித்துப் போனதும், அவ்வப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் கலை, கலாசார அம்சங்களுக்கு போதியளவு ஊக்குவிப்புக்களை வழங்காததாலும் இக்கலை மங்கிப் போனது என்று கவலையோடு கூறினார் கே. எல். அலியார்.

பொல்லடிக்கு பயன்படும் விப்பனை ‘கம்பு’

“மீண்டும் இந்த கிராமிய நடனத்தை எழுச்சியுற வைப்பதற்காக மிகவும் முயற்ச்சி எடுத்து வருகின்றேன். எனது தந்தையாரும் இவ்வாறான கலைத்துறையில் ஈடுபாடு கொண்டவர் என்பதால் அவரைச் சந்திப்பதற்காக எங்களது வீட்டிற்கு நிறைய கலைஞர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள் எனப் பலர் அடிக்கடி வருவார்கள. அவர்களின் செயற்பாடுகளை அவதானித்த பின்னரே எனக்கும் இதில் அதீத ஈடுபாடு ஏற்பட்டது. இறக்காமத்தைச் சேர்ந்த அண்ணாவியார் பி.ரி. யாசீன்பாவா என்பவரிடம் தான் பொல்லடியைக் கற்றேன். இந்தப் பொல்லடியை மீள உயிர்ப்பிக்க வேண்டும் என்று எனக்குக் கற்றுத் தந்த அண்ணாவியார் அவர்கள் அறிவுரை பகர்ந்தார். அதற்கமைய இதனை வளர்ச்சியடையச் செய்து பரவலாக்க வேண்டும் என்பதற்காக இஸ்லாமிய கலாச்சார சமூக மரபுரு அமைப்பு என்ற இந்த அமைப்பை உருவாக்கி புதியவர்களைப் பயிற்றுவிக்கின்றோம், நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றோம்”என்றார்.
இப்போது திருமண வீடுகள், பொது நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்றவற்றிலும் இந்தப் பொல்லடி நடத்தப்பட்டு வருகிறது. அழிந்து வரும் கிராமியக் கலைகளை மீட்டெடுக்க அரசினதும் அதிகார உதவி தேவைப்படுகிறது.