Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

உள்ளுராட்சி தேர்தல் முடிவு
ஆணாதிக்க அரசியலில் பெண்களுக்கு இடமில்லை????

இலங்கையின்    மொத்த சனத்தொகையில் ஆண்களைவிட பெண்கள் சற்று அதிகமாவே காணப்படுகின்ற போதிலும் இலங்கையில் உள்ளுராட்சி சபைகள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் கடந்த காலங்களில் அவர்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் குறிப்பாக பெண்கள் அமைப்புகளிடமிருந்து பரவலாக எழுந்திருந்தன. நடைபெற்று முடிந்த கலப்பு முறையிலான உள்ளுராட்சித் தேர்தல் முறையில் பெண்ள் பிரதிநிதித்துவம் கட்டாயமாக 25 வீதம் என்று குறிப்பிடப்பட்டாலும். பெண்கள் வெற்றி பெற்ற வீதம் மிக மிகக்குறைவாகவே காணப்பட்டிருக்கிறது. பெண்கள் […]

20.02.2018  |  
மட்டக்களப்பு மாவட்டம்
மீராசாகிபு ஆயிசா உம்மா

இலங்கையின்    மொத்த சனத்தொகையில் ஆண்களைவிட பெண்கள் சற்று அதிகமாவே காணப்படுகின்ற போதிலும் இலங்கையில் உள்ளுராட்சி சபைகள், மாகாண சபைகள் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் கடந்த காலங்களில் அவர்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் குறிப்பாக பெண்கள் அமைப்புகளிடமிருந்து பரவலாக எழுந்திருந்தன.

நடைபெற்று முடிந்த கலப்பு முறையிலான உள்ளுராட்சித் தேர்தல் முறையில் பெண்ள் பிரதிநிதித்துவம் கட்டாயமாக 25 வீதம் என்று குறிப்பிடப்பட்டாலும். பெண்கள் வெற்றி பெற்ற வீதம் மிக மிகக்குறைவாகவே காணப்பட்டிருக்கிறது.

பெண்கள் அரசியலில் ஈடுபடுவதில் காட்டும் ஆர்வமின்மை, தயக்கம் எமது நாட்டு அரசியல் சூழ்நிலை தங்களுக்கு பொருத்தமற்றதாக இல்லை என பெண்களிடம் காணப்படும மனநிலை போன்றன இதற்கு காரணமாகக் கூறப்படுகின்றது. ஆனால் தற்போது மாறிவருகின்ற நவீன சமூக கட்டமைப்பில் அரசதுறை தனியார், துறைகளில், பெண்கள் அதிகளவில் பணியாற்றுகிறார்கள்.

இந்நிலையில் இலங்கையின் சனத்தொகை விதாசாரத்தில் ஆண்களைவிட பெண்களே முன்னிலை வகிக்கிறார்கள். ஆனால் அரசியலில் மட்டும் அவர்கள் முன்னேற்றமடைய தடையாக இருப்பது ஏன் என்ற கேள்வி உண்டு. இது விடமாக அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் அக்கறை கொள்வதில்லை என்ற கருத்தும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

இதே வேளை,உலகில் முதலாவது பெண் (அமரர் சிறிமாவோ பண்டாரநாயக்க)பிரதமரைக் கண்ட நாடு இலங்கையாகும். அது போன்று முதலாவது நிறைவேற்று அரகாரமுறை பெண் ஜனாதிபதியை (சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க) உருவாக்கிய பெருமையும் இலங்கைக்கே உண்டு.
இலங்கையில் பெண்களின் அரசியலைப் பொறுத்தவரை உள்ளுராட்சி சபை மாகாண சபை பாராளுமன்றம் என பெண்கள் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர்களில் அனேகமானோரின் குடும்ப அரசியல் பின்புலமே காரணமாக இருந்திருக்கிறது.

முதலாவது தமிழ் பெண் பாராளுமன்ற உறுப்பினரான ரங்கநாயகி பத்தநாதன் அவரது சகோதரரான மறைந்த பாராளுமன்ற எம்.சி.கனகரெத்தினத்தின் மறைவு காரணமாகவே அரசியலில் நுழைத்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

முதலாவது முஸ்லிம் பெண் பாராளுமன்ற உறுப்பினர் என கூறப்படும் பேரியல் அஷ்ரப் தனது கணவர் எம்.எச்.எம்.அஷ்ரப் மறைவுக்கு பின்னரே தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றார்.

இலங்கையில் 51-52 சதவீதம் பெண்களின் தொகை காணப்படுகின்ற போதிலும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, 13 ஆகவே காணப்படுகிறது. ஒட்டுமொத்த பாராளுமன்றத்தில் வெறுமனே 5.77 சதவீதம் ஆகும். மாகாணசபைகளில் 4 சதவீதம் மற்றும் உள்ளுராட்சி சபைகளில் 1.9 சதவீதம் என கடந்த காலத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் காணப்படுகிறது என இலங்கை பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான குழுமம் (Forum Against gender Based Violence) கூறுகின்றது.

ஆனால் தொழில் துறைகளில் 62 சதவீதமும் உயர்கல்வியில் 54 சதவீதமும் பெண்கள் இடம்பிடித்துள்ளதாக அரசசார்பற்ற அமைப்புகளின் கணிப்பீடுகள் மூலம் அறிய முடிகிறது.

பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஆகக்குறைந்தது 25 சதவீதமாக உறுதிப்படுத்தும் வகையில் ஏற்கனவே கலப்பு தேர்தல் திருத்தச் சட்டங்கள் மூலம் வழிவகுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்தச் சட்டம் பெண்களின் பிரதிநிதித்துவத்தைஅதிகரிக்க போதியளவில் துணை புரியவில்லை

இந்த அடிப்படையில் பார்க்கும் போது தேர்தல் சட்டத்தில் பெண்கள் வேட்பாளர்களாக கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும் தகுதியுடைய பெண்களை வேட்பாளர் பொருத்தமான இடங்களுக்கு நியமிக்கப்படாததால் பெண்கள் வெற்றி பெற முடியாமல் போயுள்ளதை அவதானிக்க முடிகிறது. கட்சிகள் பெண்களை பேரளவில் நிறுத்துவதில் ஆர்வம் காட்டினார்களேயல்லாமல் உண்மையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பெண் வேட்பாளர்களை நியமிக்கவில்லை என்பதைக்காணமுடிந்தது.

பிரதான தமிழ் அரசியல் கட்சியொன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 18 வட்டாரங்களைக் கொண்ட ஏறாவூர்ப்பற்று (செங்கலடி ) பிரதேச சபையில் 100 சதவீதம் முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட மூன்று வட்டாரங்களுக்கு (மிச்நகர் மீராகேணி மற்றும் ஐயங்கேணி முஸ்லிம்) தமிழ் பெண் வேட்பாளர்களை நிறுத்தியது. 100 சதவீதம் தமிழ் வாக்குக் கொண்ட வட்டாரத்தில் எந்தவொரு பெண்ணையும் வேட்பாளராக நிறுத்தவில்லை.

இதேபோன்று 14 வட்டாரங்களைக் கொண்ட கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்கான வேட்பு மனுவிலும் 100 சதவீதம் முஸ்லிம் வாக்களர்களைக் கொண்ட நான்கு வட்டாரங்களுக்கு (வாழைச்சேனை முஸ்லிம், பிறந்துறைச்சேனை வடக்கு, பிறந்துறைச்சேனை தெற்கு, செம்மன்ஓடை) பெண்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். பிரதான முஸ்லிம் கட்சியொன்று 100 சதவீதம் தமிழ் வாக்காளர்களைக் கொண்ட சந்திவெளி வட்டாரத்துக்கு முஸ்லிம் பெண் வேட்பாளரை நிறுத்தியிருந்தது.இவர்கள் எவரும் வெற்றி பெறவில்லை.

மட்டக்களப்பு மாவட்டதில் 78 பெணகள் போட்டியிட்டார்கள். இதில் முஸ்லிம்களும் தமிழர்களும் கலந்துவாழும் உள்ளுராட்சி சபைகளில்; தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்களார்களை உள்ளடக்கிய பிரதேச சபைகளுக்கான வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட வட்டாரங்களில் தமிழ் கட்சிகள் தமிழ் பெண் வேட்பாளர்களையும், தமிழ் வாக்காளர்களை மாத்திரம் உள்ளடக்கிய வட்டாரங்களில் முஸ்லிம் கட்சிகள் முஸ்லிம் பெண் வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளன.இது தோல்வியுறுவதற்காகவே நிறுத்தப்பட்டது என்பது வெளிப்படையானது.

இதே போன்று 18 வட்டாரங்களைக் கொண்ட ஏறாவூர்ப்பற்று (செங்கலடி ) பிரதேச சபையில் முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட மிச்நகர் மீராகேணி மற்றும் ஐயங்கேணி வட்டாரங்களுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழ்ர் விடுதலைப் கூட்டணி என்பன தமிழ் பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. இந்த வட்டாரங்களில் ஒரு தமிழ் வாக்களர்கள்கூட இல்லாத நிலையில் வேறு வட்டாரங்களைச் சேர்ந் அல்லது வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களை வேட்பாளராக நிறுத்தியிருந்தனர்.

தமிழ் வாக்காளர்களைக் கொண்ட பன்குடாவெளி வட்டாரத்துக்கு ஐக்கிய சமாதான கூட்டமைப்பு முஸ்லிம் பெண் வேட்பாளரையும், நல்லாட்சிக்கான தேசிய கூட்டணி சித்தாண்டி மேற்கு, கரடியனாறு,  புல்லுமலை வட்டாரங்களுக்கு முஸ்லிம் பெண் வேட்பாளர்களையும் நிறுத்தியிரந்தனர்.  இவர்களும் தோல்வியையே தழுவியிரந்தனர்.

அதேபோன்று 10 வட்டாரங்களை உள்ளடக்கிய ஏறாவூர் நகரசபையில் முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட ஜாமிஉல் அக்பர், றிபாய்பள்ளி வட்டாரங்களுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ் பெண் வேட்பாளர்களையும், பள்ளியடி வட்டாரத்துக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமிழ் பெண் வேட்பாளரையும் நிறுத்தியுள்ளன. தமிழ் வாக்களர்களை உள்ளடக்கிய கோவில்புரம் வட்டாரத்துக்கு முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் பெண் வேட்பாளரையும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் எல்லை நகர் வட்டாரத்துக்கு முஸ்லிம் பெண் வேட்பாளரையும் நிறுத்தியிருந்தன.இதே நிலை தான் கோறளைப்பற்று (வாழைச்சேனை) மண்முனைப்பற்று (ஆரையம்பதி),  கோறளைப்பற்று மேற்கு (ஒட்டமாவடி) பிரதேச சபைகளிலும் காணப்பட்டன.

“உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தில் பெண்களுக்கு 25 சதவீதமான ஒதுக்கீடு என்பது வரவேற்கத்தக்க விடயம் ஆனால் அரசியலில் ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த பெண்களை வேட்பாளர் உள்ளுராட்சி சபைத் தேர்தல் வேட்பாளர்களாக உள்வாங்கியது மிக மிகக் குறைவதகவே இருந்தது. இது அரசியல் கட்சிகள் செய்த முட்டாள்தனமாக செயலாகும் சில   இடங்களில் தகுதியான பெண்களை விகிதாசார பட்டியலில் வேட்பாளராக நிறுத்தியுள்ளமை பெண்களின் ஆளுமையயை மழுங்கடிக்கும் செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம்.”” என்கின்றார் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி திருமதி இந்துமதி ஹரிகரதாமோதரன்.

இந்துமதி ஹரிகரதாமோதரன்

“அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை தாங்களது அதிகாரத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளில் 25 சதவீத மேயர், நகரபிதா, தவிசாளர் போன்ற தலைமைப்பதவி மற்றும் 25 சதவீத துணைத் தலைமைப் பதவியை பெண்களுக்கு கிடைப்பதன் மூலமே உரிய கௌரவத்தை பெண்களுக்கு வழங்கியிருப்பதாக கருத முடியும்” என்கிறார் மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை ஐக்கிய தேசிய கட்சி விகிதாசார பட்டியல் வேட்பாளர் – திருமதி பாலகிருஸ்ணராஜா மதனா

“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி என்னை தமிழ் வாக்காளர்களை மாத்திரம் உள்ளடக்கிய வட்டாரத்தில் நிறுத்தியுள்ளனர் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் எப்படியாவது போட்டியிட வேண்டும் விருப்பதற்காகவே சம்மதம் தெரிவித்தேன்” என்கிறார் – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோறளைப்பற்று பிரதேச சபை சந்திவெளி (13 ம் வட்டாரம்) வேட்பாளர் நாகூர் சபியா உம்மா

நாகூர் சபியா உம்மா

“பிரசாரத்தின் போது எமக்கு மிரட்டல் விடுத்தார்கள்.இதனால் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது.” என்கிறார் – மஞ்சந்தொடுவாய் (16ம் வட்டாரம்) போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சி மீராசாகிபு ஆயிசா உம்மா.

ஓட்டுமொத்தமாக பார்க்கும் போது வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரை ஏனோதானோ என்ற போக்கில்தான் பெண்களை தேர்தல் வேட்பாளர்களாக நியமித்திருந்தார்கள் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. பெண்களை அரசியலில் பங்காளிகளாக்க ஆணாதிக்க அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் ஆயத்தமாக வேண்டிய காலம் வெகு தூரத்தில்   இல்லை என்பதை மனம் கொள்ள வேண்டும்.

மீராசாகிபு ஆயிசா உம்மா