Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

கோப்பாய் சிறீஸ்கந்தராஜா நம்பிக்கையின் அடையாளம்
வாழ்க்கையே ஆயுதம்

“நான் என்னுடைய குறைபாட்டைப் பற்றிச் சிந்தித்தோ,கோபம்கொண்டோ நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை. வாழ்க்கையை வாழ்ந்துகொண்டே இருக்க வேண்டும். நான் எனது வாழ்க்கையை வாழ்கிறேன் எனும் திருப்தி இருக்கிறது. குறை சொல்லத் தொடங்கினால் வாழ நேரம் கிடைக்காது” என்கிறார் மாமேதையான மாற்றுத் திறனாளி ஸ்டீவன் ஹாக்கிங்ஸ்.அப்படி தன்னுடைய குறையை நினைத்து முடங்கிப்போகாமல் வாழ்க்கையோடு போராடி தனக்கான பாதையை உருவாக்கி வெற்றிகரமாக நகர்ந்துகொண்டிருக்கிறார் கோப்பாயைச்சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறீஸ்கந்தராஜா. தனது முச்சக்கர வண்டியில் சிறுவர்களுக்கான விளையாட்டுப்பொருட்கள், கோவில் பூஜைக்கான பொருட்களை விற்பனை செய்துவரும் […]

09.06.2018  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்

“நான் என்னுடைய குறைபாட்டைப் பற்றிச் சிந்தித்தோ,கோபம்கொண்டோ நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை. வாழ்க்கையை வாழ்ந்துகொண்டே இருக்க வேண்டும். நான் எனது வாழ்க்கையை வாழ்கிறேன் எனும் திருப்தி இருக்கிறது. குறை சொல்லத் தொடங்கினால் வாழ நேரம் கிடைக்காது”

என்கிறார் மாமேதையான மாற்றுத் திறனாளி ஸ்டீவன் ஹாக்கிங்ஸ்.அப்படி தன்னுடைய குறையை நினைத்து முடங்கிப்போகாமல் வாழ்க்கையோடு போராடி தனக்கான பாதையை உருவாக்கி வெற்றிகரமாக நகர்ந்துகொண்டிருக்கிறார் கோப்பாயைச்சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறீஸ்கந்தராஜா.

தனது முச்சக்கர வண்டியில் சிறுவர்களுக்கான விளையாட்டுப்பொருட்கள், கோவில் பூஜைக்கான பொருட்களை விற்பனை செய்துவரும் சிறிஸ்கந்தராஜாவை கட்டமரனுக்காக அவரது வீட்டில் சந்தித்தேன். மதிய நேரம் வீட்டின் முன்னால் மரநிழலில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தவர் உற்சாகத்தோடு பேசத் தொடங்கினார்.
“நான் உழைச்ச காசில அக்காண்ட பிள்ளையளுக்கு சாண்டில், புத்தகபாக் எல்லாம் வேண்டிக்குடுப்பன் அப்பேக்க எனக்கு நிறைய சந்தோசமா இருக்கும்” சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு சிரித்துக்கொண்டே சொன்னாலும் அந்த சந்தோச உணர்வில் சிறீஸ்கந்தராஜாவின் கண்கள் மெல்ல கசிகின்றன.

பத்துவயதில் திடீரென ஏற்பட்ட மூளைக்காய்ச்சல் நோய் இவரது இரண்டு கால்களையும் செயலிழக்கச்செய்ததோடு சரளமான பேச்சிலும் கோளாறு ஏற்படுத்திவிட பள்ளிச்சிறுவனாக துள்ளித்திரிந்துகொண்டிருந்த சிறீயினுடைய வாழ்க்கை வீட்டோடு முடங்கிப்போனது. ஆனாலும் தன்னுடைய விடாமுயற்சியினாலும் தன்னம்பிக்கையினாலும் இன்று தன்னுடைய உழைப்பினால் முன்னேறியிருக்கிறார்.
“கோப்பாய் தான் என்ர இடம். அப்பாவும் அம்மாவும் இறந்திட்டினம். இப்ப நான் என்ர ரெண்டாவது அக்காவோடதான் இருக்கிறன். அவாவுக்கு என்னால கரைச்சல்தான் ஆனாலும் என்னால முடிஞ்ச அளவுக்கு அவாக்கு கரைச்சல் குடுக்க நான் விரும்புறேல்ல(அக்காவைப் பார்த்து சிரித்தபடி) இருந்தாலும் சில சில வேலைகளை என்னால தனிய செய்யேலாது தானே என்றவர் சிறிதுநேரம் மூச்சை இழுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

முதல்ல இந்தச் சயிக்கிளும் இல்லை சும்மா ஒரே இடத்தில வீட்டிலதான் இருக்கிறது. அப்பேக்க எல்லாம் பேசாம சாவமோ எண்டுகூட நினைப்பன். என்ர சினேதப்பெடியள் படிச்சு வேலையளுக்கெல்லாம் போறத பாக்கேக்க சரியான கவலையாக்கிடக்கும். பிறகு எனக்கு ஊனமுற்றோர் நலன்புரிச்சங்கத்தால இந்த சயிக்கிள் கிடைச்சவுடன வீட்டில இருக்காம வெளியால போய்த்திரிய வெளிக்கிட்டன். அப்பத்தான் ஏன் சும்மா திரிவான் ஏதாவது வேலை செய்யலாம்தானே எண்டு யோசிச்சன்(சிரித்தவாறு) என்னால ஒரு வேலையும் செய்யேலாதுதானே. அப்பதான் எனக்குத்தெரிஞ்சவர் ஏதாவது சின்ன யாவாரம் செய்துபார் சிறீ எண்டார். அது சரியா இருக்குமெண்டு யோசிச்சன். ஆனா என்னட்ட அப்ப ஒரு காசும் இல்லை. பிறகு ஒரு நூறுரூபா கிடைச்சது அதுக்கு ஒருபெட்டி கற்பூரம் வாங்கி நல்லூர் கோயில் வீதியில நிண்டு வித்தன். கொஞ்சநேரத்திலயே அது விலைப்பட்டுட்டுது அது எனக்கு பெரிய சந்தோசம். உடனயே பக்கத்து கடையில் திருப்பியும் கற்பூரம் வாங்கி வித்தன் அதுவும் விலைப்பட்டது. அண்டைக்குதான் எனக்கு என்னில பிடிப்பும் நம்பிக்கையும் வந்தது.( தொடர்ந்து பேசியதில் சிறிதுநேரம் மூச்சு வாங்கியது).ஆனா கொஞ்சநாளில் கற்பூரத்தால பெரிய லாபம் கிடைக்காது வேற ஏதாவது விக்கலாம் எண்டு யோசிச்சன். தெரிஞ்ச ஒராளக்கொண்டு ரவுணுக்குள்ள உள்ள கடைய பழக்கம்பிடிச்சு கிளிப்பு, பூள்பாண்ட, சின்னப்பிள்ளையளிண்ட விளையாட்டுச்சாமான் எல்லாம் வாங்கி விக்க தொடங்கினன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையளிலயும் திருவிழாக்காலங்களிலயும் நல்லூருக்கு வந்து யாவாரம் செய்வன். சும்மா நாளில இரண்டாயிரம் கிட்ட யாவாரம் நடக்கும் திருவிழா காலமெண்டா நிறைய வரும். கூடுதலான ஆக்கள் என்னட்ட வாங்கோணும் எண்டதுக்காகவும் வாங்குவினம். விலையெல்லாம் கேக்க மாட்டினம். சில நேரம் தேங்காயும் விப்பன் அதிலயும் நல்ல லாபம் வரும்./

எங்க கோயில் திருவிழா எண்டாலும் நான் சயிக்கிள்ல வெளிகிட்டுடுவன். பருத்தித்துறை, நல்லூர், மானிப்பாய், காரைநகர் வல்வெட்டித்துறை எண்டு எல்லா இடமும் போவன் வல்லைவெளிக்குள்ள சயிக்கிள் ஓட கஸ்டமா இருக்கும். ஆனாலும் நான் போகோணுமெண்டு நினைச்சு அடம்பிடிச்சுப்போயிடுவன்(சிரிக்கிறார்)
அக்கா நெடுக பேசுவா நீ ஆருக்கு உழைக்கிற பேசாம இரன் எண்டு ஆனா எனக்கு இதுதான் சந்தோசமா இருக்கு. எனக்கு நொட்டைத்தீன்(நொறுக்குத்தீனி) தின்னுறதெண்டா சரியான விருப்பம் ஆனா அதை ஆரிட்டயும் வேண்டித்தரச்சொல்லி கேக்கேலாதுதானே நான் உழைக்கிற காசில அதுகள வேண்டித்தின்னுவன்.(வெட்கத்தோடு சிரித்துவிட்டு சகோதரியைப் பார்க்கிறார்) எனக்கு உடுப்புகள் எடுப்பன். அக்காண்ட பிள்ளையளுக்கு பள்ளிக்கூடச்சாமன்கள், சாண்டில், புத்தகபாக் எல்லாம் வேண்டிக்குடுப்பன் அப்பேக்க எனக்கு நிறையச் சந்தோசமா இருக்கும்.
என்ர மற்ற சகோதரங்களுக்கு நான் இப்பிடி கோயில்ல யாவாரம் செய்யிறது பிடிப்பில்ல அதை கேவலமா நினைக்கினம். ஆனா எனக்கு இதுதான் சந்தோசமா இருக்கு. நான் ஆரைப்பற்றியும் கவலைப்படுறேல்ல. முந்தி ஒருவா காசெண்டாலும் ஆரும் தருவினமா எண்டு பாப்பன். ஆனா இப்ப நான் அறுபதினாயிரத்துக்கு கிட்ட சேத்துவச்சிருக்கிறன். ஒரு மோதிரமும் செய்தனான். (தனது விரல்களில் உள்ள தங்க மோதிரத்தை தூக்கி காட்டுகின்றார்) சயிக்கிள் பழுதாப்போனா திருத்துற செலவு இருக்கு இப்பிடி என்ர செலவுகள இப்ப நான்தான் பாக்கிறனான். அக்காக்கு கரைச்சல் குடுக்கிறேல்ல.

இனி வாறமாசம் சுதுமலையில் கோயில் கொடியேறுது அங்க போகவேணும். அதுக்கு சாமான் வாங்கவேணும் என தன்னுடைய வெற்றிக்கதையை ஆர்வத்தோடும் சந்தோசத்தோடும் கூறுகிறார் மாற்றுத்திறனாளி சிறீஸ்கந்தராஐh.
தன்னுடைய முச்சக்கரவண்டியில் தன்னுடைய வியாபார பொருட்களை தொங்கவிட்டபடி ஒரு நிழற்குடையின்கீழ் நல்லுரின் வாசலில் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சிறீயை கோவிலுக்கு வருகின்ற எவரும் காணாமல் கடந்திருக்க முடியாது.

மாற்றுத்திறனாளியாக இருந்தும் தன்னம்பிக்கையோடு போராடி வெற்றிபெற்றிருக்கிறீர்கள் இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என கேட்டதற்கு “அவைளுக்கு நான் என்னத்த சொல்லுறது சும்மா இருக்காம எதையெண்டாலும் முதல்ல செய்து பாருங்க அப்பத்தான் பிறகு என்ன செய்யலாம் எண்டு ஐடியா வரும்” என்று ஒரு வாழ்க்கைத்தத்துவத்தை தனது திக்கும் குரலால் கூறிவிட்டுச் சிரிக்கிறார் சிறீ.

வெறும் நூறு ரூபாய் முதலீட்டில் ஒரு கற்பூரப் பெட்டியுடன் ஆரம்பித்த வியாபார முயற்சி இன்று பல ஆயிரக்கணக்கான முதலீடுகளை நோக்கி முன்னேறியிருக்கிறது. நாளடைவில் அது இலட்சங்களையும் தாண்டி செல்லும் என நம்பிக்கையோடு உழைக்கும் மாற்றுத் திறனாளி சிறீஸ்கந்தராஜா இன்றைய இளைய சக்திக்கு ஓர் நம்பிக்கை அடையாளம் எனலாம்./