Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

அரேபிய நாடுகளில்…
காணாமல் போகும் இலங்கைப் பெண்கள்!கண்டறிவது யார்?

சிலர் குடும்பத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு சடலமாக நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்வர்களை காணாமல் போனோர் என அவர்களது உறவுகள் கூறுகின்றன. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில மட்டும்; அதிகாரபூர்வ தகவலின்படி 2017 வரை ஆகக் குறைந்தது ஐந்நூறு பேர்வரை தொடர்பு துண்டிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்படுள்ளனர்.

14.10.2018  |  
மட்டக்களப்பு மாவட்டம்
காணாமல் போனவரின்தாய்

“எனது மகள் பணம் ஒண்டும் அனுப்பத் தேவையில்லை அவளது குரலை ஒரு முறையாவது கேட்டால் போதும் நான் நிம்மதியாக இருப்பபேன்” இவ்வாறு மட்டக்களப்பு ஆறுமுகத்தான்குடியிருப்பைச் சேர்ந்த அரியமலர் நிக்கலஸ் பெனார்ன்டோ கூறுகிறார்.

“வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்ற எனது மகள் இன்றுவரை திரும்பி வரவே இல்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன் மகளுக்கும் எங்களுக்குமான தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது” என்கிறார் சின்னலெப்பை ஆஷியா உம்மா (வயது 73).

யுத்தத்தில் காணாமல் போனவர்களைத் தேடிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் வெளிநாட்டு வேலைக்கு என்று சென்று பல பெண்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் இரு பெண்களின் கும்பத்தினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

தற்போது ‘வெளிநாடுகளில் தொழில்வாயப்புக்குச் சென்று காணாமல் போனோர்’ என்ற பட்டியலொன்று தயாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலையில் இலங்கை உள்ளது.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை யுத்தத்திற்குப் பின்னர் தொழில்வாய்ப்பின் நிமிர்த்தம் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள் நோக்கியும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் நோக்கியும் வீட்டுப் பணிப்பெண்களாக பெண்கள் செல்கின்றனர்.

/
யுத்தம் காரணமாக தங்களது குடும்ப பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குடும்பத் தலைவன் இழப்பு பிரதான உழைப்பாளியான ஆண் அங்கவீனமடைந்திருத்தல் போன்ற காரணங்களினால் இழந்துபோன பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பபுவதைப் பிரதான குறிக்கோளாகக் கொண்டுதான் வெளிநாட்டு வேலைவாய்ப்பை அவர்கள் நாடுகிறார்கள்.
சட்ட ரீதியாக தொழில்வாய்பு பெற்று சட்ட ரீதியான ஆவணங்களுடன் இவர்கள் தொழில் பெற்று சென்றிருந்தாலும் இவர்களில் சிலர் காணாமல் போயிருப்பது அவர்களது குடும்பத்தினருக்கு அதிச்சியையும் பேரிடியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஆண்டு காணாமல்போனோர் எண்ணிக்கை
2013 85
2014 120
2015 135
2016 75
2017 45

தகவல் : மட்டக்களப்பு மாவட்ட செயலகம்.

வெளிநாட்டுக்கு தொழில் பெற்றுசென்றவர்கள் பலர் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளார்கள். அந்நாட்டு தொழில் சட்டங்களையும் பொதுவான மனித உரிமை மீறல்களையும் அவர்கள் சந்தித்துக் கொண்டிருக் கிறார்கள்.
அதேவேளை இன்னும் சிலர் குடும்பத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு சடலமாக நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்வர்களை காணாமல் போனோர் என அவர்களது உறவுகள் கூறுகின்றன. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில மட்டும்; அதிகாரபூர்வ தகவலின்படி 2017 வரை ஆகக் குறைந்தது ஐந்நூறு பேர்வரை தொடர்பு துண்டிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்படுள்ளனர்.

இவ்வாறு தொடரப்பு துண்டிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் மட்டக்களப்பு – ஆறுமுகத்தான் குடியிருப்பிலிருந்து சவுதியரேபியா நாட்டுக்குச் சென்ற நிக்கலஸ் பெனார்ன்டோ றீட்டா. குடும்பத்தில் இரண்டாவது மகளாக பிறந்த நிக்கலஸ் பெனார்ன்டோ றீட்டா (தற்போது வயது 34) தனது முதலாவது வயதிலே தந்தையை இழந்தவர். தாயின் கூலித்தொழில் ஊதியத்தில் வளர்ந்த பிள்ளை. அவருக்கு ஒரு தங்கையும் உண்டு.
“கலியாணம் செய்யிரத்துக்கு ஒரு வீடாவது தேவை நாம இருக்கிற சூழ்நிலையில் வீடு கட்ட முடியாது வெளிநாட்டுக்கு போய் வீடு ஒன்ட கட்ட போறன் என மகள் றீட்டா என்னிடம் அடிக்கடி கூறிவந்தார். அவரை வெளிநாட்டுக்கு அனுப்புறத்துக்கு எனக்கு விருப்பமே இல்ல. எனது


2015 சித்திரை மாத்தில்தான் மகளுடன் இறுதியாகப் பேசினேன்.

விருப்பத்துக்கு மாறாக பிடிவாதமாக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் செய்து, 2010ஆம் ஆண்டு தை மாதம் 07ஆம் திகதி ஏறாவூரிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஊடாக சவுதி அரேபியாவிற்கு பணிப்பொண்ணாக சென்றார். அவர் போய் ஓரிரு மாதங்களிலிருந்தே 40 ஆயிரம் ரூபாய் வீதம் ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்பி வந்தார். நாங்கள் அவளை நான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் நாட்டுக்கு வருமாறு அழைத்தோம். கொஞ்ச காலம் அங்க வேலை செய்தா குறையோட இருக்கிற வீட்டினை முடிச்சிருவன் இங்க வந்து கல்லாணம் பண்ணலாம் என கூறி தொடர்ந்த அங்கேயே தொழில் புரிந்தார். எனக்கும் வருத்தாக உள்ளது நீ நாட்டுக்கு வந்து கல்லாயம் பண்ணு என 2015ஆம் ஆண்டு மீண்டும் வருமாறு அழைத்தோம் நோன்பு பெருநாள் முடிந்தவுடன் வருகிறேன் என கூறினார் நோன்பு பெருநாள் முடிந்தவுடன் ஹஜ் பெருநாள் முடிந்தவுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம் என எனது மகள் வேலை செய்த வீட்டின் உரிமையாளர் கூறினார். ஹஜ் பெருநாள் முடிந்தவுடன் வீடு திருப்புவாள் என் எதிர்பார்ப்புடன் இருந்தோம். 2015 சித்திரை மாத்தில்தான் மகளுடன் இறுதியாகப் பேசினேன். அதன் பின் அந்த தொலைபேசி இலக்கமும் துண்டிக்கப்பட்டு விட்டது. அன்றிலிருந்து எனது மகளுக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை.” என்று அழுகிறார் தாய்.

/

இது சம்பந்தமாக அவரை அனுப்பி வைத்த முகவரிடம் கேட்டுள்ளனர். ‘நாங்கள் அனுப்பிய இரண்டு வருட ஒப்பந்த காலம் முடிந்துவிட்டது இதற்கு மேல் எங்களால் ஒன்றுமே செய்ய முடியாது’ என முகவர் நிலையம் கூறியுள்ளது. அத்துடன் விடாது, இலங்கை வெளிநாட்டு பணியகத்திற்குச் சென்று 2016 ஆவணி 08 ஆந் திகதி முறையிட்டுள்ளனர். அவர்கள் சவுதி அரேபியாவிலுள்ள பணியகத்தினைத் தொடர்பு கொண்டு நடவடிக்கையெடுப்பதாக கூறியிருக்கிறார்கள்.

அவ்வாறு அவர்கள் நடவடிக்கை எடுத்தும் உள்ளனர் என தெரியவருகிறது. வெளிநாட்டுப் பணியகம் காணாமல் போன பெண்ணின் தாயார் கொடுத்த முகவரியை ஆராய்ந்து பார்த்ததாகவும் அந்த முகவரிக்குரிய வீட்டில் யாரும் இல்லை, வீடு பூட்டி இந்ததாக இந்தத் தாய்க்கு ஒரு மாதத்தின் பின் தகவல் அனுப்பியுள்ளது. இதன்பின் என்ன செய்வதென்று தெரியாது இருக்கிறார் இந்த தாய். அவர் தன் அடுத்த மகளைக் காப்பாற்றுவதற்காக வீடுவீடாகச் சென்று துணிகளைத் துவைத்து வருகிறார்.

முகவர் நிலையங்களும் வெளிநாட்டுப் பணியகமும் தம்பங்கிற்கு செய்வேண்டியதைச் செய்துவிட்டோம் என இதை மூடிவிட்டு இன்னொரு புதிய பிரச்சினைக்கு சென்றுவிட்டன. ஆனால் இந்த தாய்க்கு இது தீராத பிரச்சினை.

இலங்கையின் வருமானம் ஈட்டுதலில் வெளிநாடுகளில் தொழில் புரிவோரின் வருமானம் அதிகளவு செல்வாக்குச் செலுத்துகின்றது. அதிலும் சவுதி அரேபியா, கட்டார், குவைத், டுபாய், போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்குச் மட்டக்களப்பிலிருந்து சென்று வருமானம் ஈட்டித்தருவோர் அதிகமானோர் உள்ளனர்.

இதேபோல் இன்னுமொருவருக்கு நேர்ந்தது…..
ஏறாவூர் காயர் வீதியைச் சேர்ந்த முஹம்மது ஹனீபா பிர்தௌஸியா (தற்போது வயது 33) என்ற பெண் 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 02ஆம் திகதி கொழும்பிலுள்ள முகவரினூடாக வீட்டுப் பணிப்பெண்ணாகத் தொழில்வாய்ப்புப் பெற்று சவூதி அரேபியா சென்றுள்ளார். ஆரம்பத்தில் பணம் அனுப்பியுள்ளார்.
கடந்த 4 வருடகாலமாக அவரின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக யுவதியின் தாயார் கூறுகிறார்.
“இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நல்லிணக்கப் பிரிவுக்கு 2013 ஜனவரி 16 ஆம் திகதியன்று முறைப்பாடு செய்தபோது அடுத்த வினாடியிலிருந்தே தமது பணியகம் நடவடிக்கை எடுக்கும் என்று பத்திரம் ஒன்று தரப்பட்டது. ஆனால் இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டு ஐந்து வருடங்கள் கழிந்து விட்ட போதிலும் மகளின் விடயமாக எதுவித பதிலையும் அவர்கள் தரவில்லை” என்கிறார் இந்தத் தாய்.

இங்கு மட்டுமல்லாது ஏறாவூர் நகர பிரதேச செயலக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பிரிவு தொடக்கம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் நல்லிணக்கப் பிரிவு, மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழு, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல இடங்களில் முறைப்hபடுகள் செய்யப்பட்ட போதும் சாதகமான எந்தப் பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறார் அந்த ஏழைத்தாய்.
இவ்வாறு தொழிலுக்காக வெளிநாடு சென்று தொடர்பற்று இருப்பவர்களில் பெரும்பாலானோர் பெண்களாவர். இங்கு கடன்தொல்லை, குடும்ப பிரச்சனை, கணவனை இழந்தோர், திருமணமாகாத பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், போன்ற வர்க்கத்தினர்தான் அதிகளவு மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காகச் செல்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகம்,  மாவட்ட மனித உரிமை ஆணைக்குழு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், போன்றவற்றின் உள்ள பதிவுகளின் அடிப்படையில் கடந்த 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டுவரையில் வெளிநாடு சென்றவர்களில் சுமார் 460 பேரின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதில் ஆண் பெண் இருவரும் அடங்குகின்றனர்.

இவற்றில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சிக்கு 350 நபர்களின் விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு முறைப்படு செய்யப்பட்டதென்றும் அவற்றில் சுமார் 250 நபர்களை கண்டறிந்து விபரம் எடுத்து உறவினர்களுக்கு வழங்கப்பட்டதாக பணியகம் தெரிவிக்கிறது.

இதன் அடிப்படையில் 2017 வரை சடலங்களாக 35 பேர் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இவற்றில் 32பேர் பெண்களாவர். இவற்றில் இரண்டு சடலங்கள் மலேசியா நாட்டிலிருந்தும் ஏனையவை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் இலங்கைக் கொண்டுவந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே இந்த காணாமல் போன பணிப்பெண்களின் நிலை என்ன என்பதை குடும்ப அங்கத்தவர்கள் மட்டுமன்றி சமூகமும் அறிய ஆவலாய் உள்ளது. கண்டறிவது யார்?