Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

சிங்கள மக்கள்!
தமிழர்களைப் புரிந்துகொள்ளும் வகையில் இலக்கியமோ, ஊடகமோ பிரச்சினைகளை எடுத்துக் கூறவில்லை.

போர் முடிந்த பின் ஒரு வருடமும் 9மாதங்களும் புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டேன். அங்கு எனக்கு சிந்திப்பதற்கு அதிக நேரம் இருந்தது. பழைய நினைவுகளில் உழன்று உழன்று சம்பவங்களை மீட்டுக்கொண்டிருந்தேன்.

09.05.2017  |  
கிளிநொசசி மாவட்டம்
இன்னும் தளராத ஆர்வத்துடள் உரையாடும் தமயந்தி

“ஆயுதம் ஏந்திய போராட்டம்… கரும்பு சாப்பிடுவது போன்று இனிமையானதோ பூப்பறிப்பது போன்று இலகுவானதோ அல்ல…! ஆனால் அதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்கிற நிலை ஈழமக்களின் தலையில் சம்மணம் கட்டி உட்கார்ந்துகொண்டது. ஆடி முடிந்தால் தான் இறங்கிப் போகும் அந்தப் பாரம் என்றால்… அதை ஆடி முடித்துத்தானே ஆகவேண்டும்…! தமிழ் மக்கள் யாரும் போரை விரும்பி ஏற்கவில்லை என்றும், சந்தர்ப்பமே அவர்களை அதற்குள் தள்ளிவிட்டது என்றும் கருத்து சொன்னார் ‘தழிழ்க் கவி’ என்றறியப்பட்ட தமயந்தி

ஆறு பிள்ளைகளின் தாயான இவர், தனது 45வது வயதில் போராட்டத்தில் இணைந்து செயல்பட்டவர்.இன்று தனது 70ஆவது வயதில் உள்ளார். அரசினால் கலாபூசனம் விருதளித்து கௌரவிக்கப்பட்டுள்ளார். தமிழ் எழுத்தாற்றலுடன் பேச்சாற்றலும் நிரம்பப் பெற்ற இவருக்கு கலையும் மொழியும் இரு கண்களாம்! போர்க்காலம் முழுவதும் தமிழ் மக்கள் பட்ட பாடுகளை படம் பிடிக்கும் வகையில் சிறுகதை, நாவல், கட்டுரை, பத்தி எழுத்து ஆகியவற்றுடன் கவிதைகளும் எழுதி வருகிறார். இறுதிக்கட்ட போரை விபரித்து எழுதிய அவரது ‘ஊழிக்காலம்’ நாவல், பிரபலம்பெற்றது. ‘த கட்டுமரன்’ இணையத்திற்காக அவரைச் சந்தித்தபோது, தனது பார்வையில் போராட்டத்தையும் தற்போதைய நிலையையும் விபரித்தார்.

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவுக்கு செல்வதும் மோட்டர் சைக்கிளில்தான்.

 

த கட்டுமரன் : இல்லற வாழ்க்கையை துறந்து, போராட்டத்திற்குள் 
குதிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏன் ஏற்பட்டது?

தமயந்தி :“எல்லோருக்கும் போலவே எனக்கும் உயிர்ப் பயம் இருந்ததுதான். சண்டை எனக்கு சரிவராது என்றும் தெரியும், குடும்பம் பிள்ளைகள் என்று பந்த பாசங்களுடன் பிணைக்கப்பட்ட சாதாரண பெண்ணாகத்தான் வவுனியாவில் வாழ்ந்துகொண்டிருந்தேன். பல இயக்கங்கள் இருந்த காலம் அது. ஒரு இயக்கத்தில் இருந்ததற்காக இன்னொரு இயக்கத்தில் இருப்பவர்கள் சுட்டுக்கொண்ட காலம் அது. இராணுவமும் தன் பலத்தை காட்டிய காலம். அப்போதுதான் எனது மகன் அநியாயமாக சாகடிக்கப்பட்டான், எந்தவொரு தகவலும் தெரியாமலேயே அவன் கதையை முடித்தார்கள். அடுத்தடுத்து விழுந்த அடிகளால் அடியோடு அமைதி இழந்தேன். என்னுடன் இருந்த கடைசி மகனை அழைத்துக் கொண்டு வவுனியாவில் இருந்து கிளிநொச்சிக்கு குடிபெயர்ந்தேன். அப்போது தான் விடுதலைப் புலிகளின் ஒழுக்கம் மற்றும் நேர்த்தியான செயல்பாடுகளை அறியக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்க அவர்கள் தமது கொள்கையில் மிக உறுதியாக இருப்பதை உணர்ந்தேன். முன்னைய அரசாங்கத்தின் இனப்பாகுபாட்டுக் கொள்கைகளை நன்கு பகுத்தாயத் தெரிந்த அனைவரும் அவர்களின் போராட்டத்தை ஆதரிக்கவே செய்தார்கள். போராளிகளை விடுத்து, பொது மக்களின் வீடுகள் மீது பொழிந்த குண்டுமழை கண்ணுக்கெதிரிலேயே பல உயிர்களை காவு கொண்டது. இதனால் ஏற்பட்ட மனக் கிலேசம், சாதாரண பெண்களுக்கு அப்பால், என்னை வேறொரு முடிவு எடுக்க வைத்தது.

த கட்டுமரன் : ஈழத்தில் மிக நீண்ட காலமாகத் தொடர்ந்த ஆயுதப் 
போராட்டம் வெற்றியைத்தான் ஈட்டித்தரும் என்று நம்பினீர்களா?

தமயந்தி: இல்லை. ஆயுதப் போராட்டம் மூலம் வெற்றி பெறமுடியாது என்பதை நான் நன்கே உணர்ந்திருந்தேன். ஆனாலும், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு, அரசாங்கத்தை பேச்சுவார்த்தை மேசைக்கு இழுக்க முயன்றார்கள். அதற்கு, மாறி மாறி ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் ஆயுதம் மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுக்க அவர்கள் நினைத்திருக்கலாம். அதையே நானும் ஏற்றுக்கொண்டேன்.

த கட்டுமரன் : இந்தப் போராட்ட காலம் ஒரு பெண்ணான உங்களுக்குக் 
கற்றுத் தந்தவை எவை என எண்ணுகிறீர்கள்?

தமயந்தி: இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். குடும்ப வாழ்க்கையில் இருந்தபோதும் நான் வெளியில் சுற்றும் துணிச்சல்பெண்தான். ஆனால், இறப்பு, சடலம் எப்போதும் பயத்தை உருவாக்குவதாய் இருந்தது. ஆனால் போராட்த்தில்; இணைந்தபிறகு, சடலங்கள் அருகில் இருக்க நான் தூங்கியிருப்பேன். உயிருள்ளவர்களுக்கு அளிக்கும் அதே மரியாதையை உயிரற்ற உடல்களுக்கும் கொடுத்ததை அங்கு கற்றுக்கொண்டேன். அதற்கு நானும் பழகிப்போனேன். அடுத்தது பெண்களுக்கு நேரம் என்பது கட்டுபாடானது. இரவு பெண்களுக்கு வெளியில் நடமாட தடு;க்கப்பட்டதாகவே இருந்தது. ஆனால், இங்கே இரவு பகல் வேறுபாடின்றி எந்த இடத்தையும் கடந்து செல்லும் துணிவு பிறந்தது.

இதற்கு அப்பால், எனது இலக்கிய வேட்கையைத் தீர்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. அனைத்துத் துறை சார்ந்த நூல்களையும் கொண்ட பெரும் அறிவுக் களஞ்சியம் அங்கு; இருந்தது. சேகுவராவையும், சீனப் போரையும் மற்றும் உலக இலக்கியங்களையும் அங்கிருந்தபோதுதான் படித்தேன். தமிழர்களின் கலையும் கலாசாரமுமும் இன்னதென்று துல்லியமாக அறிந்த இடமும் அதுதான். வானொலியல் தொலைக்காட்சியில், நாட்டாரியல், உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை வழங்கியிருந்தேன். அதற்காக கிராமம் கிராமமாக திரிந்திருக்கிறன். இவையெல்லாம் நான் பெற்றவை.
த கட்டுமரன் : ஒரு குழுவில் ஆழுமையுள்ள பெண்ணாக இருந்த நீங்கள்
மீண்டும்; சமூகத்துடன் இணைந்து வாழத் தொடங்கியபோது எதிர்கொண்ட
சவால்கள் எவை?

தமயந்தி :ஆரம்பத்தில் சமூகத்தில் நான் எங்கு சென்றாலும் புறக்கணிக்கப்பட்டேன். அது அவர்களுக்கு இரு;நத பயத்தினால் இருக்கலாம். என்னுடன் கதைப்பதர்ல தங்களுக்கு; ஆபத்து என அவர்கள் எண்ணியிருக்;கலாம். உறவினர்களின் சாவு வீட்டிற்குச் சென்றாலும்கூட யாரும் என்னுடன் பேச மாட்டார்கள். பேச முன்வருபவர்களையும் மற்றவர்கள் கண் ஜாடை காட்டி தடுத்துவிடுவார்கள். ஆனால், இப்பொழுது சமூகச் செயற்பாடுகளில் நான் வேலை செய்யத் துவங்கிவிட்ட பிறகு, மக்கள் என்னை நெருங்கி வருகிறார்கள். ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

த கட்டுமரன் : மக்களின் நம்பிக்கைக்கு ஆதாராமாக உள்ள, உங்கள் 
தற்போதைய இயங்கு தளம் பற்றிக் கூறுங்கள்.

தமயந்தி : வவுனியாவில், மகளிர் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான பாதுகாப்பு அமைப்பில் அங்கம் வகிக்கிறேன். சிவில் பாதுகாப்பு அமைப்பில் உறுப்பினராக உள்ளேன். வவுனியா நகரசபைக்குட்பட்ட 9-வது வட்டாரத்திற்கும் ஆலோசகராக உள்ளேன். நான் இயங்கும் தளம் மூலம் மக்களுக்குத் தேவையானவற்றை பெற்றுத் தரவே பாடுபடுகிறேன். மக்கள் என்னை ஏற்றுக்கொண்டதற்கு ஆதாராமான பதவிகள் தானே இவை.

த கட்டுமரன் : நீங்கள் வாழ்ந்த கிளிநொச்சி மாவட்டத்து மக்கள் 
போருக்குப் பின்னர் என்ன மனநிலையில் உள்ளார்கள்?

தமயந்தி :விரக்தி நிலையில்தான் இருக்கிறார்கள். யாரிடம் எது கேட்டும் கிடைக்கவில்லை என்ற விரக்தி வெப்பியாரமாகி அவர்களது வாழ்வே போராட்டமாக மாறி வருகிறது. அவர்களின் போராட்ட குணம் அன்று போலவே இன்றும் இருக்கிறது. அடிப்படை உரிமைகள் கிடைக்காததால்தான் ஆயுதப் போராட்டம் தொடங்கியது. பேரழிவுக்குப் பின்னர் போர் முடிவுக்கு வந்தாலும், மக்களுக்கான அடிப்படை உரிமைகளை வழங்க அரசு மறுக்கிறது. இன்று அனேகமாக அடிப்படைத் தேவைக்கும்(உணவு,உடை,உறையுள்) போராட வேண்டியுள்ளது. இதனால் போராட்டமே தமிழன் வாழ்க்கையாச்சு.

இன்னும் தளராத ஆர்வத்துடள் உரையாடும் தமயந்தி
இயற்பெயர்: தமயந்தி
பிறப்பிடம்: சின்னப்புதுக்குளம், வவுனியா 
பிறந்த ஆண்டு: 1947
தந்தை : கந்தப்பு
தாய்: லட்சுமி
பிள்ளைகள்: 06
படைப்புக்கள்
இனி வானம் வெளிச்சிரும் (வடக்கு கிழக்கு மாகாண பரிசு – 2002, தமிழ் 
எழுத்தாளர் சங்கத்தின் பரிசு)
இருள் இனி விலகும்,
ஊழிக்காலம் (தமிழியல் விருது - 2014)
பெற்ற விருதுகள்
வாழ்நாள் சாதனையாளர் விருது, சாதனைப் பெண் விருது – பெண்கள் சிறுவர் 
துஸ்பிரயோகத்திற்கு எதிரான அமைப்பினால்இ 2015 இல் வழங்கப்பட்டது. 
கலாபூ~ணம் விருது (2016)
த கட்டுமரன் : போராளிகளாக இருந்த இளம் பெண்கள் தற்போது சமூக
 இணைவில் என்ன நிலையில் உள்ளனர்?

அவர்களுக்கும் இதே நிலைமைதான் உள்ளது. அத்துடன், போராளிகளாக இருந்த பெண்களில் இருவர் ஒருவரையொருவர் காணும்போது வெறும் புன்னகையுடன் கடந்து செல்கின்றனரே தவிர, கூடிப் பேசினால் ஆபத்து ஏற்படுமோ என்கிற அச்சம் இன்னும் அவர்களுக்கு உள்ளது.

மேலும் பல பெண்கள் 40 வயதைக் கடந்தும் இன்னமும் திருமணம் செய்ய முடியாமல் முதிர் கன்னிகளாகவே இருக்கிறார்கள். பெற்றோரை, குடும்பத்தை இழந்த பல பெண்கள், உறவினர்களச் சார்ந்து வாழ்கிறார்கள். பண்ணை வேலை, கார்மென்ட் வேலை என கிடைத்த வேலைக்குச் செல்கிறார்கள். உறவினரைச் சார்ந்து வாழ்வதால், இவர்களில் பெரும்பாலானோரின் உழைப்பு சேமிப்புக்கு வழிவகுக்கவில்லை. பாதுகாப்புக்காக, தமக்கென ஒரு வாழ்க்கை வேண்டும் என்கிற தவிப்பு அவர்களிடம் உள்ளது.

த கட்டுமரன் : தமிழர்களின் போராட்ட வாழ்க்கை மாறாமலே இருக்க, நல்லிணக்க 
முயற்சிகளில் அரசும் நிறுவனங்களும் ஆர்வம் காட்டியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் 
இதை எப்படி உணர்கிறார்கள்?

தமயந்தி :நல்லிணக்கம் என்பது என்ன? இரு தரப்பினருக்கும் சமநிலை அந்தஸ்து வழங்கும்போதே நல்லிணக்கம்பற்றி பேச முடியம். அவர்கள் உயரமான இடத்திலும் நான் பள்ளத்திலும் நினறுகொண்டு ; நல்லிணக்கம் பேசமுடியாது. ஊர்களில் இராணுவ பிரசன்னத்தின் மத்தியில் இன்னும் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அது எப்போதும் போரையே நினைவுறுத்திக்கொண்டிருக்கிறது. அத்துடன் மக்களின் இழப்பும் அதற்கான நிவர்த்தியும் சரிவர செய்துகொடுக்கப்படாமல் இருக்கும் போது, நல்லிணக்கம் பற்றி அவர்களால் எப்படி சிந்திக்க முடியும்.? நல்லிணக்க முயற்சிகள் என்பதே வெறும் கண்துடைப்பு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

த கட்டுமரன் : தற்போது வடக்கு கிழக்கில் உள்ள சிங்கள மக்கள் 
தமிழர்களின் பிரச்சினை இன்னதென்று புரிந்துகொண்டுள்ளார்களா?

தமயந்தி :மக்களை நாம் எந்த விதத்திலும் குறை சொல்வதற்கில்லை. அவர்கள் எங்களைப் புரிந்துகொள்ளும் வகையில் எந்தவொரு புத்தகமோ, பத்திரிகையோ வேறெந்தவொரு ஊடகமோ அவர்களிடம் எம் பிரச்சினைகளை கொண்டு சேர்க்கவில்லை. சேர்க்க வேண்டும் என்பதிலும் எங்கள் அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லை. தமிழர்களுக்கு முறையான தலைவர்கள் இல்லை என்பதன் விளைவுகள் இவை.

த கட்டுமரன் : சிங்கள மக்கள் சிறந்த தலைவர்களைக் 
கொண்டிருக்கிறார்கள் என்று நம்புகிறீர்களா?

தமயந்தி :நிச்சயமாக! தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு அவர்கள் நல்ல தலைவர்களாகவே இருக்கிறார்கள். தமிழர்களுக்குத் தான் எதுவுமே செய்யமாட்டார்களே தவிர, சிங்கள மக்கள் மத்தியில் அவர்கள் சிறந்த தலைவர்களாகவே வலம் வருகிறார்கள்.

த கட்டுமரன் : ஊழிக்காலம் என்ற நாவல் எழுத உந்துதலக இருந்தது 
எது? ஏவை?

தமயந்தி :போர் முடிந்த பின் ஒரு வருடமும் 9மாதங்களும் புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டேன். அங்கு எனக்கு சிந்திப்பதற்கு அதிக நேரம் இருந்தது. பழைய நினைவுகளில் உழன்று உழன்று சம்பவங்களை மீட்டுக்கொண்டிருந்தேன். போரின் சிதிலங்களும் அதனால் மக்களின் பாடுகளும் என் மனதை அதிகமாகப் பாதித்திருந்தது. அந்த மனச் சுமையை சற்றேனும் இறக்கி வைக்க நான் எடுத்த முயற்சி தான் ‘ஊழிக்காலம்’ என்ற எனது நாவல். ஆம் தடுப்பு முகாமில் இருந்தபோது நான் பிரசவித்த குழந்தை அது!