தாவூதி போறா சமூகம்.
இலங்கையில் அஷாரா முபாரக் இரண்டாவது முறையாகக் கொண்டாடப்பட்டது.!
இந்த விழாவை நாங்கள் உலகத்தில் வேறு எந்த இடத்திலாவது நடத்தியிருக்கலாம். போறா மக்களின் வருகையால் இந்த நாடு நன்மையடைகிறது. இம் மாநாடு இந்தத் தீவின் சுற்றுலாத் துறைக்கு மேம்பாட்டைத் தருகிறது. அவர்கள் ஒருசில நாட்கள் இங்கு தங்கியிருந்துவிட்டுப் பயணித்திருப்பர். ஆனால்….
இலங்கையில் போறா முஸ்லிம் சமூகத்தினரின் அஷாரா முபாரக் என்ற வருடாந்தப் பண்டிகை செப்ரெம்பர் 1 லிருந்து 10 வரை கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள ஹசேய்னி மஸ்ஜித் பள்ளிவாசலை மையமாக வைத்துக் கொண்டாடப்பட்டது. இப் பண்டிகையில் 40 நாடுகளிலிருந்து வருகைதந்த 21000 பேருக்கும் அதிகமான தாவூதி போறாக்கள் பங்குபற்றினர். ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சமூகத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மத்தியில் ஏற்பட்ட முஸ்லிம் விரோத உணர்வுகளுக்கு மத்தியில் இவ்விழா கொண்டாடப்பட்ட காரணத்தினால் இது பற்றிக் கவனஞ் செலுத்தப்பட்டது. அப்படியிருந்தபோதிலும் அஷாரா முபாரக் வழமையான சிறப்புடன் கொண்டாடப் பட்டதுடன் இதனை இந்த நாட்டில் நல்லிணக்கத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட ஒரு அடியெனக் கருதலாம்.
தாவூதி போறா சமூகத்தின் தலைவரும் அஷாரா முபாரக் பண்டிகையின் ஒழுங்கமைப்பாளருமான ஷாபிர் மெஹம்மது இப்பொழுது இருக்கும் நிலையிலும் இந்த விழாவினைக் கொண்டாடும் முக்கியத்துவம் பற்றி த கட்டுமரனுக்கு அளித்த செவ்வியில் விளக்குகிறார்.
த கட்டுமரன்: இலங்கையில் வாழும் சமூகங்களுக்கிடையில் இருந்த நம்பிக்கை உடைந்து போவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாயிருந்தது. இவ்வாறானதொரு நெருக்கடி நிறைந்த சூழ்நிலையில் தாவூதி போறா சமூகத்தினரின் பிரதான பண்டிகையை ஏன் இலங்கையிலே கொண்டடுவதற்குத் தீர்மானித்தீர்கள்?பதில்: இந் நிகழ்வை கொண்டாடுவதற்கான தீர்மானம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னராகவே செய்யப்பட்டு விட்டது. போறா சமூகத்தினருக்கு இது ஒரு வருடாந்தப் பண்டிகை என்பதுடன் நாங்கள் ஒரு குடும்பமாக இருந்து இதனைக் கொண்டாடக்கூடிய ஒரு நாட்டைத் தேர்வு செய்வோம். இலங்கையில் அஷாரா முபாரக் இரண்டாவது முறையாகக் கொண்டாடப்பட்டது. முதலாவது விழா 2008ல் கொண்டாடப்பட்டது. இது விடயமாக எங்களுக்கு ஐயப்பாடுகள்
இருந்தபோதிலும் தடைகள் ஏதுமின்றி எங்களால் கொண்டாட முடிந்தது. பாதுகாப்பையும் ஏனைய வசதிகளையும் எங்களுக்குத் தந்துதவிய அரசாங்கத்திற்கு எமது நன்றி உரித்தாகட்டும்.
த கட்டுமரன்: இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் முன்பின் தெரியாதவர்களல்ல. நாங்கள் அவர்களுடைய பண்டிகைகள் பற்றிப் பரிச்சயமானவர்கள். முஸ்லிம்களுடைய மத அனுட்டனங்களுக்கெனத் தேசிய விடுமுறை தினங்களுமுண்டு. இந்தப் பண்டிகை எப்படி வித்தியாசமான ஓன்றாகியது?பதில்: பரந்து பட்டுள்ள முஸ்லிம் சமூகத்தில் தாவூதி போறா ஒரு பிரிவு மட்டுமே. முஸ்லிம்கள் சுன்னி யா என இரு பிரதான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அந்த இரு பிரிவுகளும் மேலும் பல உப பிரிவு களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இலங்கை முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் சுன்னிகளாக இருக்கையில் தாவூதி போறக்கள் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களாய் இருக்கின்றனர். தாவூதி போறாக்கள் 2500 பேர்களைக் கொண்ட ஒரு சிறிய சமூகமாகவே உள்ளனர். அதன் காரணமாகத்தான் எமது மக்களும் எங்கள் பண்டிகைகளும் பிரபலமடையவில்லை.
த கட்டுமரன்: தாவூதி போறா சமூகத்தின் பின்னணி பற்றிய விளக்கத்தைத் தரமுடியுமா?பதில்: இஸ்லாத்தின் தீர்க்கதரிசியான நபி முகம்மது சல்ல்லாஹூஅலய்ஹிவா சல்லாம் இறைவனின் நற் செய்தியை மக்கள் மத்தியில் பரப்பினார். இமாம் ஹூசேய்ன அலேய்ஹி வாசல்லாம் இந்தத் தீர்க்க தரிசியின் பேரனாவார். ஈராக்கிலுள்ள கபாலாவில் அவரையும் அவருடைய குடும்ப உறுப்பினர்களையும் எதிரிகள் மிகவும்; இரக்கமற்ற முறையில் வெட்டிக் கொன்றார்கள். அவருடைய தியாகத்தை நினைவு கூருமுகமாக அஷாரா முபாரக் கொண்டாடப்படுகிறது. இதுவே தாவூதி போறா சமூகத்தின் பிரதான பண்டிகையாகும். அஷாரா முபராக்கின் போது நாங்கள் 10 நாட்களுக்கு குடும்ப மற்றும் வணிக செயற்படுகளைத் தவிர்த்து மத நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.
த கட்டுமரன்: ஏனைய முஸ்லிம் பிரிவுகளிலிருந்து தாவூதி போறா சமூகம் எவ்வாறு வேறுபடுகின்றது?பதில்: தாவூதி போறா என்ற பிரிவு நவீனகால சூழ்நிலைகளுக்கு எற்ப இஸ்லாத்தைப் படித்துப் பொருள் கொள்ளும் ஒரு பிரிவினராகும். போறா பெண்களுக்கு மதரீதியாகச் சமத்துவமான உரிமைகள் உண்டு. அவர்கள் பள்ளிவாசலுக்கு ஆண்களுடன் சென்று அவர்கள் கூடவேயிருந்து வழிபடுவார்கள். சமத்துவமான கல்வி பெறுவதற்கும் அவர்களுக்கு உரிமையுண்டு. நாங்கள் ஆடை அணியும் விதிமுறைகள் மற்றைய பாரம்பரிய முஸ்லிம்களைக் காட்டிலும் வேறுபட்டவை. இப் பெண்கள் கண்ணுக்கு உவப்பூட்டும் வெளிர் நிறங்களை அணிவார்கள். தாவூதி போறா சமூகம் உலகம் எங்கும் பரவி வாழ்கின்றது. ஆனாலும் நாங்கள் எந்தவிதமான தீவிரவாதக் கருத்தையும் ஆதரிப்பதில்லை. பயங்கரவாதக் குழுக்களுடன் எங்களுக்குத் தொடர்புகள் இல்லை. வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் மத்தியில் நாங்கள் அதியுயர் மட்டத்தில் இருக்கின்றோம். எங்கள் சமூகம் நவீன தொழில் நுட்ப அறிவுத்திறன் உடையவர்களாயுள்ளது.
த கட்டுமரன்: மத போதனைகள்தான் அஷாரா முபராக்கின் பிரதான குணாம்சமாய் இருந்தது. அவைகளில் உள்ளடக்கப்பட்டிருந்தவை எவை?இம் மாநாடு நடைபெற்ற நாட்கள் முழுவதிலும் காலை நேரக் கூட்டங்கள் மதபோதனைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. ஒரு தொடர் விரிவுரைகளின் முதலாவதாக போறா ஆன்மீகத் தலைவர் செய்த்னா முபடால் செய்புதீன் அவர்களினால் பம்பலப்பிட்டியிலுள்ள ஹூசேய்னி மஸ்ஜித் பள்ளிவாசலில் மத போதனை வழங்கப்பட்டது. கடந்த காலத்தில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் இத் தொடர் விரிவுரைகள் ஒரு விடயம் பற்றி, அதாவது அலி பின் அபி தலிம் மற்றும் அவருடைய மகன் இமாம் ஹஸன் ஆகியவர்களின் போதனைகள் பற்றியதாகவே இருக்குமென அவர் கூறினார். ஒரு மகன் மீது தந்தைக்கு இருக்கும் பாசம், தனது மகனை ஒரு நேர்மையான அறநெறி உடையவனாக்க வேண்டுமென்ற தந்தையின் நோக்கம் நல்லொழுக்கமும் அதற்கான வழிகாட்டலும் அறிவுறுத்தலும் ஆகிறவற்றின் அடிப்படையிலே அவை இருந்தன.
த கட்டுமரன்: இந்த மாநாடு பற்றித் தவறான கருத்துகள் நாட்டிலே பரப்பப் பட்டிருந்தன. அவைககள் இப் பண்டிகைக்குப் பாதிப்பை ஏற்படுத்தினவா?பதில்: இப்படிப் பல தவறான செய்திகள் பரப்பப்பட்டிருந்தன. அவற்றையிட்டு நாங்கள் வருத்தமடைகிறோம். பல்வேறு நாடுகளிலிருந்து 21000 பேர் வரையான மக்கள் இந்த மாநாட்டிற் பங்குபற்றினர். அவர்களிற் பலர் தங்கள் நாடுகளில் வலுவாக ஸ்தாபிதமடைந்த, இந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டுமென்ற நோக்கமில்லாத வர்த்தகப் பிரமுகர்களாயுள்ளனர். இந்த விழாவை நாங்கள் உலகத்தில் வேறு எந்த இடத்திலாவது நடத்தியிருக்கலாம். போறா மக்களின் வருகையால் இந்த நாடு நன்மையடைகிறது. இம் மாநாடு இந்தத் தீவின் சுற்றுலாத் துறைக்கு மேம்பாட்டைத் தருகிறது. அவர்கள் ஒருசில நாட்கள் இங்கு தங்கியிருந்துவிட்டுப் பயணித்திருப்பர். ஆனால் தவறான கருத்துகளால் இந் நாட்டில் உருவாக்கப்பட்ட சூழ்நிலை காரணமாக மாநாடு முடிவடைந்தவுடனேயே வருகை தந்தவர்களில் பலர் நாட்டைவிட்டுச் சென்றுவிட்டனர். இது நாட்டிற்கு ஒரு இழப்பாகும்.
த கட்டுமரன்: காவல் துறையினரின் சீருடைகளை ஒத்த உடைகளுடன் போறா நபர்கள் சிலபேர் தொருக்களில் வாகனப் போக்குவரவைக் கட்டுப்படு;துவதிலும் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் புகைப் படங்கள் சமூக வலைத்தளங்களிற் பரவலாயின. இதன் உண்மையென்ன?பதில்: பம்பலப்பிட்டியிலுள்ள பிரதான பள்ளிவாசலை மையமாக வைத்தே மாநாடு நடைபெற்றது. 21000 பேர் வரையிலான கூட்டமொன்று ஒழுங்கான முறையில் வழிநடத்தப்படாவிடின் அந்த ஒரு சிறிய நிலப் பரப்பினுள் பெருங்குழப்பமான நிலையொன்று தோன்றியிருக்கும். ஆகவே ஏற்பாட்டாளர்கள் அதற்கான முன்னேற்பாட்டைச் செய்திருந்ததுடன் போறா சமூகத்தவரிலிருந்து தொண்டர்களையும் ஒழுங்கு செய்திருந்தனர். அங்கு பலவேறு நாடுகளிலிருந்து மக்கள் வந்திருந்ததுடன் தாங்கள் சார்ந்த நிறுவனங்களின் சீருடைகளையும் அணிந்திருந்தனர். இது செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்கள் தங்கள் சீருடையை அணிவதை ஒத்ததாகும். காவல் துறையினரும் கடமையில் அமர்த்தப் பட்டிருந்தனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை போதாமலிருந்தது.
த கட்டுமரன்: இப் பண்டிகையின்போது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மாடுகள் வெட்டப்பட்டதாகச் சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. கன்றுக்குட்டிகளும் நோயுற்ற பசுக்களுங்கூட வெட்டப்பட்டதாக அவைகள் கூறின. அந்தச் செய்தி அறிக்கைகள் பற்றிய உங்கள் கருத்தென்ன?பதில்: பங்குபற்றியவர்களுக்குச் சிறந்த தரத்திலான உணவு வழங்கப்பட்டது. நோயுற்ற மிருகங்களின் இறைச்சியை உண்பதை நாங்கள் விரும்புவதில்லை. நாங்கள் உணவு விடயத்திலும் அவற்றைச் சாப்பிடும் முறையிலும் கரிசனை உடையவர்களாயிருந்தோம். எதுவும் வீணாக்கப்பட வில்லை. எங்களுக்கென நாங்களே பரிமாறிக்கொண்ட உணவைச் சாப்பிடுவதே எங்கள் பாரம்பரியமாகும்.
த கட்டுமரன்: மாநாட்டின்போது வேறு என்னவெல்லாம் செய்தீர்கள்?போறா சமூகத்தினர் கலாசார நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். பலவேறு நாடுகளையும் சேர்ந்த மக்கள் இச் செயற்பாடுகளில் ஈடுபட்டனர். வெவ்வேறு நாடுகளில் நாங்கள வாழ்கின்றபோதிலும் எங்கள் சமூகம் ஒரே மொழியையே பேசுகின்றது. எங்கள் திருமணங்களும் எங்களுக்குள்ளேயே நடைபெறுகின்றன. வர்த்தக நடவடிக்கைகளுக்கும் எங்கள் சமூகத்திலுள்ள மக்களுடனேயே பங்காளர்களாகச்சேர்வோம். ஆகவே எங்கள் சமூகத்திற்குள்ளேயே எங்களை அடையாளப்படுத்திக் கொண்டு ஒரு வலை அமைப்பாக இருக்க வேண்டியுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் அவ்வாறான செயற்பாடுகளுக்கு வசதியளிக்கின்றன.