குருநாகல்:
எல்லோருக்குமான பொது எதிரி ‘கொரோனா’! ஆனால்…..?
கொரோனா நோயின் பரவலால் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் பலனளிக்கின்றனவா? என்ற கேள்வி இவர்களைப்பார்க்கும்போது ஏற்படுகிறது. ஆனால், அன்றாட வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டும் இவர்களைப்போன்றவர்கள் என்ன செய்வது?
கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் இலங்கையில் பரவுவதை தடுக்க மார்ச் 12ஆம்திகதி பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. தொடர்ந்து மக்கள் கூடும் இடங்கள் முடக்கப்பட்டன. மார்ச் 20ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மார்ச் 26ஆம்திகதி காலை ஆறு மணிக்கு கொழும்பு கம்பஹா புத்தளம் மற்றும் வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு தளர்த்தப்பட்டிருந்தது. அதுவும் 8மணித்தியாலமே தளர்த்தப்பட்டது.
மக்ககள் அவசர அவசரமாக பொருட்களை வாங்குவதும் அதை விற்பவர்களும் அவசர அவசரமாக விற்பதும் என குருநாகலில் இருக்கும் அந்த சிறிய நகரான பரகஹதெனிய இயங்கிக்கொண்டிருந்தது. மூவின மக்களும் வாழும் அந்த ஊரில் அனைவரது முகங்களிலும் ஊரடங்கு பதட்டத்தை விட நாளாந்த வாழ்வாதார பிரச்சினையே சிந்தனைகளாகியிருந்தன. அன்றன்றே உழைத்து உண்ணும் மக்கள் பலர் பரகஹதெனியவில் அன்று குழுமினர்.
பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் அந்த சந்தியில் வியாபாரிகளும் மக்கள் கூட்டமும் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் கொடுத்த முக்கியத்துவம் அருகில் நிற்போர், தமது பாதுகாப்பு என எதையுமே யோசிக்காதவர்களாக பொருட்கொள்வனவில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். ஒரு சிலர் முகக் கவசங்களை அணிந்திருந்தனர். அங்குதான் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இருந்த சின்ன மீன்கடை மரக்கறிக்கடையாக மாறியிருந்தது. மீன் விற்ற மொஹமட் அதுனான் (வயது 41) மும்மரமாக மரக்கறிகளை விற்றுக்கொண்டிருந்தார்.
இங்கு யாரும் யாரையும் கூவிக் கூவி அழைக்கவில்லை. கிடைக்கும் பொருட்களை வாங்கி பைகளை நிரப்பிக்கொண்டிருந்தனர். “இந்த குறித்த மணித்தியாலத்திற்குள் என்னால் மீனை விற்கமுடியாது. விற்பனைக்காக வாங்கிய மீன்கள் விற்பனை செய்யமுடியாது போனால் எனக்கு நட்டம். அதனால் நான் மரக்கறி விற்கதொடங்கினேன்” என்கிறர் மொஹமட் அதுனான்.
அவருக்கு கிடைத்த அந்த மணித்தியாலங்களுக்குள் அவர் பொருட்களையும் விற்றுமுடித்து தன் குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்கிச் செல்லவேண்டும்.
மொஹமட் அதுனானின் உதவிக்கு அவரது மகன் ரஜ்ஹான் அஹமட் (வயது 14) என்பவர் கூடவே நிற்கிறார். பாடசாலைகள் மூடப்பட்டதனால் தந்தையுடன் வியாபாரத்தில் அவரும் மும்மரமாகிவிட்டார். கொரோனா நோயின் பரவலால் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் பலனளிக்கின்றனவா? என்ற கேள்வி இவர்களைப்பார்க்கும்போது ஏற்படுகிறது. ஆனால், அன்றாட வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டும் இவர்களைப்போன்றவர்கள் என்ன செய்வது?
“பரகஹதெனியவில் இருந்து 24 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கட்டுகஸ்தொட்ட எனும் இடத்துக்கு அதிகாலையில் ஒரு லொரியில் சென்று மரக்கறிகளை வாங்கிவந்துதான் இங்கு விற்கிறேன். ஒவ்வொருநாளும் இப்படி விற்க முடியுமோ தெரியாது. அதனால் அதிக மரக்கறிகளை வாங்கி விற்றுக்கொண்டிருக்கிறன். மக்களும் 2,3 நாளுக்கு தேவையான மரக்கறிகளை வாங்குகின்றனர். ஒரு சிலர் ஒரு வாரத்திற்கு தேவையானவற்றை வாங்கிச்செல்கின்றனர். நானும் எனது வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கவேண்டும். அதுதான் அவசரமாக செய்யவேண்டியுள்ளது.” என்கிறார் தன்மகனை அங்கு அதை செய் இங்கு இதை செய் என ஏவியவாறே.
“ என்ன ஜயா…மீன் இல்லையா?” என்று கேட்டுக்கொண்டே சிங்கள இனப்பெண் கீதாஞ்சலி (வயது 37) மரக்கறிகளை தெரிந்தெடுத்துக்கெண்டிருக்கிறார். மீன்களை பரப்பி வைத்திருந்த அந்த அலுமினியத் தட்டில் இப்போது மரக்கறிகள்!. மீன் வெட்டப்பயன்படுத்திய மரக்கட்டையில் இப்போது மரக்கறிகளை நிறுக்கும் இலத்திரனியல் தராசு!.
கொஞ்ச காலத்திற்குமுன் இதே மக்கள் எதிரும் புதிருமாக இருந்தார்கள். இஸ்லாமியரை தவிர்த்தார்கள். இன்று எல்லோருக்குமான பொது எதிரியாக கொரோனா நிற்கிறது. மக்கள் அந்நியோன்னியமாக கதைத்து தமது பொருட் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் இங்கே பணத்தை விட நேரத்தை கணக்கிட்டு செலவிட்டுக்கொண்டிருப்பதைதான் காண முடிந்தது.
‘இரண்டுதரம் நான் மீன் வித்து நட்டமாகிட்டன். குறிச்ச நேரத்துக்குள்ள விற்க முடியாத மீன்களை அடுத்த நாள் வைத்து வியற்க முடியாது. முரக்கறிகள் அப்படி அல்ல. மிஞ்சினால் பிறகும் விற்கலாம். ஆனா இந்த காலத்தை சொல்லமுடியாது. எப்ப எங்களால வீட்டவிட்டு வெளிக்கிட முடியாம போகுமோ தெரியாது. அதனால் இன்றைகே எல்லாதையும் வித்திரவேணும். எல்லோரும் நான் நிர்னயித்த விலையை ஏற்றுக்கொள்கின்றார்கள்.” என புன்னகையுடன் மொஹமட் அதுனான் தெரிவிக்கிறார்.
அதுனானிடம் உள்ள மரக்கறிகள் ஏனைய கடைகளில் உள்ள மரக்கறிகளின் விலையோடு ஒப்பிடும்போது மிகக்குறைவாகவே உள்ளது. ஓரளவு மலிவான விலையில் மரக்கறிகளை பெற்றுக்கொள்ள அவரால் முடிகின்றது. வீதியில் அவருக்கு மின்சார செலவுகள் கிடையாது. இலத்திரனியல் தராசுக்கு போதுமானளவு சார்ஜ் வீட்டிலிருந்து ஏற்றிக்கொள்கின்றார். இதனால் ஏனைய வியாபாரிகளை விட குறைந்த விலையில் அவரால் விற்க முடிகின்றது. ஏனைய கடைகளில் 180 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோ தக்காளி இங்கே 120 ரூபாயாகும். 220 ரூபாய்க்கு விற்கப்படும் போஞ்சி இங்கே 180 ரூபாயாகும். 100 ரூபாய்க்கு விற்கப்படும் ராபு 80 ரூபாயாகும். இப்படி எல்லா மரக்கறிகளை முடிந்த வரை குறைந்த விலையில் அவர் விற்கின்றார். மக்களும் அவரை சுற்றி குவிகின்றனர்.
“கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கதானே மக்களை வீடுகளில் இருகச் சொல்கிறர்கள். இங்க இப்பிடி மக்கள் குவிந்து நிற்கிறார்களே..” என்று நாம் கேட்டதற்கு,
“என்ன செய்யிறது கொரோனாவுக்கு பயந்து வீட்டில இருந்தால் பட்டினியால்தான் சாகவேணும். கொரோனாவும் பயம்தான். வெளிநாட்டில இருந்து வந்தாக்கள் தங்களை மறைக்காமல் வைத்தியரிட்ட காட்டி செக் செய்தால் எங்களுக்கு பயம் இருக்காது. ஆனா….ஆர் ஆருக்கு இருக்குதோ தெரியாது…” என்று கூறும்போது கொஞ்சம் கலவரமாகித்தான்போனார்.
ஒரு சில இடத்தில் மக்கள் வரிசையில் நின்றாலும் அது கொரோனா தொற்றை தடுக்கும் இடைவெளியைக் கொண்டிருக்கவில்லை. சில இடங்களில் மக்கள் குவிகிறார்கள். இவ்வாறு குவிவதால் ஆபத்து அதிகமாகிறது. ஆதனால் அரசு இதையும் தடுக்க ஆலோசித்து வருகிறது. அதற்காக அனுமதி பெற்ற சிலரின் மூலம் வீட்டுக்கு வீடு மரக்கறிகளை விற்பனை செய்வதைப்பற்றி சிந்திக்கிறது.
இந்நிலையில் பரகஹதெனிய வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் நிகால் கூறுகிறார். “ஏழு நாட்களுக்கு மேல் ஊரடங்குச் சட்டம் போடப்பட்டால் மக்கள் கஸ்டப்படுவார்கள். அதற்காக நடமாடும் மரக்கறி வியாபரத்தை பொலிஸாரின் அனுமதியுடன் முன்னெடுக்கவுள்ளோம். இது ஒரு இலாப நோக்கமற்ற செயற்பாடாகும். இந்தத் திட்டம் எல்லோருக்கும் பயனளிக்கும். இதை எல்லோரும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
ஆனாலும் மொஹமட் அதுனான் போன்றவர்கள் என்ன செய்வார்கள்?
“ஊர் மக்களுக்கு மரக்கறிகளை வாகனம் மூலம் விற்க ஊரில் உள்ள மொஹமட் அதுனான் போன்ற வியாபாரிகள் உதவுவார்கள். மரக்கறிகள் தவிர்ந்த ஏனைய அத்தியவசிய பொருட்களையும் இவ்வாறு வழங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.” என்கிறார் வர்த்தக சங்கத் செயலாளர். கொரோனா வைரஸில் இருந்து மக்களைப் பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கை நாளாந்த அடிப்படைத் தேவையை பாதிக்கும் நிலை எம்போன்ற மூன்றாம் உலக நாடுகளில் தவிர்கமுடியாதவைதான்.