'வீட்டில் இருங்கள்!'
வீட்டுக்கு போகமுடியவில்லை…. இதுதான் வீடு!
கையில் காசிருந்தும் வெளியில் போக முடியவில்லை. அரிசி, பருப்பு, சோயாமீட் என்பன குறிப்பிட்டளவே உள்ளன. மூன்று நேரமும் அல்ல ஒரு நேரம் சமைத்து சாப்பிடுகின்றோம். எமது முதலாளி அவ்வப்போது குறிப்பிட்டளவு பொருட்களை வாங்கி அனுப்புகின்றார். நிலைமையை உணர்ந்து இப்போது காலை சாப்பாட்டை தவிர்த்துவிட்டு இரண்டு வேளை மாத்திரமே சாப்பிடுகின்றோம். காலை சாப்பாட்டை தவிர்ப்பதற்காக காலையில் எழும்பாமல் தூங்குவோம்….
‘வீட்டில் இருங்கள்! வீட்டில் இருங்கள்’ எல்லோரும் உச்சரிக்கும் வார்த்தை இது. இலங்கை மார்ச் மாத ஆரம்பத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தது. அப்படி அப்படியே எல்லாவற்றையும் போட்டுவிட்டு போனதுபோல் எல்லோருக்கும் ஒரு உணர்வு. மார்ச் 12ஆம் திகதியில் இருந்து பாடசாலைகள் அனைத்தும் மூடப்படும் என அறிவித்தபோது அது வியாழக்கிழமையாக இருந்தது. ‘ஐயயையோ…வெள்ளிக்கிழமை விட்டிருக்கலாமே என்ர நண்பர்களுக்க சொல்லாமல் வந்திற்ரனே…என்ர கொப்பி ரீச்சரிட்ட இருந்து எடுக்கவில்லையே என்று’ புலம்பிய சிறுவர்கள் முதல்கொண்டு ‘ஐயையோ நான்போகாவிட்டால் கோடிக்கணக்கில் நட்டமே என புலம்பம் பெருவர்த்தக முதலீட்டாளர்கள் வரை உள்ளனர். இது இலங்கையில் மட்டுமல்ல உலகொங்கும் கேட்ட குரல்கள். இந்த குரல்களை கொரோனா கேட்டுக்கொண்டிருக்காது. அதனால் அரசுகள் உடனடி நடவடிக்கைகளை எடுத்தன. ஐரோப்பிய நாடுகள் தேவையில்லாமல் நீங்கள் வீட்டைவிட்டு வந்தால் தண்டப்பணம் கட்டவேண்டும் என்றகூற இந்தியாஇ இலங்கை போன்ற நாடுகள் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி அதை மீறுவோரை தண்டிக்க தயாரானது.
இந்த நிலையில்,
‘வீட்டில் இருங்கள்’ என்பதற்கிணங்க தத்தமது வீடுகளில் இருக்கமுடியாதுஇ போன போன இடங்களில் தங்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் பலர் இருக்கின்றனர். அவர்களின் நிலையினை த கட்டுமரன் அவதானித்ததில் இருந்து…..
அவரது வேலைக்கால ஒப்பந்தம் முடியும்வரை அவர் நாட்டிற்கு வர முடியாது.
‘’என் பிள்ளையை நினைக்கும்போது சாப்பாடு உடம்பில் ஒட்டுதில்லை. வேலைக்காக குவைத்தில் நிற்கிறார். அங்கு என்ன ஏதோ…..என் பிள்ளை தனியாக இருக்கின்றார். கொரோன நோய் யாருக்கு எப்போது வரும் என்று தெரியவில்லை. இப்போது வெளிநாட்டில் உள்ளவர்களை நாட்டிற்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். என்ன நடக்குமோ என ஒவ்வொரு நொடியும் நினைக்க நினைக்க பயமாக இருக்கிறது. என்கிறார் பதுளை ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த கந்தையா மகேஸ்வரி. மகன் இடையிடையே போன் எடுத்து கதைத்தாலும் இந்த பேரிடர் காலத்தில் தன்னுடன் மகன் இல்லையே என்ற கவலை. எல்லோரும் குடும்பமாக இருந்தால் பயத்தின் பலம் குறைந்ததுபோல் அவர் உணருகிறார்.
“மகன் இயலுமான நேரத்தில் அழைப்பெடுப்பார். அங்கும் இப்போது வேலைசெய்ய முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. தாம் தங்கியுள்ள இடத்தில் நண்பர்களுடன் இருக்கின்றாராம். அவரது வேலைக்கால ஒப்பந்தம் முடியும்வரை அவர் நாட்டிற்கு வர முடியாது. அப்படி வரவேண்டுமானால் அவர் பணம் செலுத்தியே வரவேண்டும். ஆகவே நிலைமை சீராகியவுடன் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றே என் மகன் கூறினார்” என்கிறார் அந்த தாய்.
இவ்வாறில்லாமல்இ தற்காலிக நிகழ்வொன்றுக்காக வெளிநாடு சென்றவர் கராத்தே ஆசிரியர் அன்டோ தினேஸ். இப்போது நாட்டிற்கு திரும்பி வர முடியாமல் உள்ளார்.
‘’பொதுவாக என்னுடைய கராத்தே கலையின் நிகழ்வுகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். இம்முறை கனடாவில் அமைந்துள்ள ஒரு கராத்தே கலையகம் என்னை அழைத்திருந்தது. நான் மார்ச் மாதம் 7ஆம் திகதி கனடா வந்தேன். திரும்பி செல்லமுடியாத நிலை. இந்த நேரத்தில் எனது குடும்பத்துடன் இல்லையே என்ற கவலை உள்ளது. வீசாக்காலம் இன்னும் எனக்க முடிவடையவில்லை. ஆனாலும் நான் நீண்டநாள் தங்குவதற்கான ஏற்பாடு இருக்கவில்லை. ஆயினும் இங்குள்ள கராத்தே பயிற்சியாளர் ஒருவரின் வீட்டில்தான் தங்கியுள்ளேன். ஆகையால் விரைவில் நாடு திரும்ப வேண்டும். இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு அறிவித்துள்ளோம். அவர்களும் எம்மை இப்போதைக்கு இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்குமாறும் நிலைமை சீரானதும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவித்துள்ளனர்.” என்கிறார் யோசனை கலந்த குரலுடன். தொலைபேசி மூலமாக அவருடன் உரையாடியபோது எதையும் செய்யமுடியாத கையறு நிலையில் இருப்பதாக கூறினார். ஆத்துடன் இலங்கையில் உள்ள தனது குடும்பத்தினருக்கு உறவினர் ஒருவர் உதவிவருவதாகவும் கூறினார். “என் தாய்நாடு இலங்கை. குடும்பம் அங்கே. ஏதாவது ஆனால்…. நான் அங்குதான் இருந்திருக்கவேண்டும்.” என்கிறார். இந்த சூழ்நிலையில் மன ரீதியாக அவர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கொவிட்19 தாக்கம் நாளாந்தம் அசுர வேகத்தில் அதிகரிக்கின்றது. துரதிஷ்வசமாக இலங்கையில் நால்வர் (3.04.2020)மரணித்துவிட்டனர். இந்நிலையில்இ உலகநாடுகள் அனைத்தும் தமது எல்லைகளை மூடி தம்மை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளன. வெளிநாட்டில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு வரவேண்டாம் எனவும் நிலைமை சீராகும்வரை அங்கேயே தங்கியிருக்குமாறும் இலங்கை அரசாங்கமும் அறிவுறுத்தியுள்ளது. கடந்த மார்ச் 26ஆம் திகதி இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சும் தகவல் மற்றும் தொடர்பாடல்இ தொழிநுட்ப நிறுவனமும் இணைந்து இதற்கென ஒரு தரவுத்தளத்தை ஆரம்பித்துஇ வெளிநாட்டிலுள்ளவர்களை அதில் பதியுமாறு கோரியது. அந்தவகையில் இதுவரை சுமார் 17இ000 பேர் தமது தரவுகளை பதிவுசெய்துள்ளனர். இவ்வாறு தற்காலிக பயணங்களை மேற்கொண்டு சென்றவர்கள் அந்த அந்த நாட்டிலேயே தங்கியுள்ளனர். இது ஒருபுறம் இருக்க நாட்டுக்குள்ளேயே பலர் மாவட்ட எல்லைக்குள் முடக்கப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக கொழும்பு பெருநகர் அதி உச்ச பட்ச ஆபத்தான இடமாக உள்ளது. வேலைக்காக வேறு தேவைகளுக்காக இங்கு வந்தவர்கள் திரும்பிச்செல்லமுடியாத சூழலில் உள்ளனர். கொழும்பு நகரில் ‘வீட்டில் இருங்கள்’ என்பது அவர்களை எத்தகைய இக்கட்டுக்குள் கொண்டுவந்ததுள்ளது என்பதை அறிய முடிந்தது. த கட்டுமரனிற்காக அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.
கடந்த மூன்று வருடங்காக கொழும்பில் கடையொன்றில் பணியாற்றிவரும் கே.பிரசாத்இ பதுளையை பிறப்பிடமாகக் கொண்டவர்.
‘’இவ்வாறு தனித்து விடப்படுவேன் என கனவிலும் நினைக்கவில்லை. ஊரடங்குச் சட்டம் போட்ட அன்று கடையை மூட நேரமாகவிட்டது. அதற்கு பின்னர் வீட்டிற்கு போக கையில் பணம் இருக்கவில்லை. 3 நாட்கள் ஊரடங்குச் சட்டம் முடிந்த பின்னர் கடை உரிமையாளரிடம் சம்பளம் பெற்று வீடு செல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் இப்போது தொடர்ந்து இங்கிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. ஊரடங்கு சட்டம் பிறப்பித்த அன்றைய நாள் இரவு எனது மாமா ஒருவர் (அப்பாவின் தங்கையின் கணவர்) இறந்துவிட்டார். அதற்குக்கூட போகமுடியவில்லை. அன்றைய தினம் நான் தனித்துவிடப்பட்டேன். மிகவும் பயமாக இருந்தது. இப்போது உங்களைப் போல தொடர்புகொள்ளக்கூட யாரும் இருக்கவில்லை” என கவலையுடன் தெரிவிக்கிறார்.
இப்போது அவருடன் பதுளைஇ நுவரெலியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 8 பேர் தற்போது தங்கியுள்ளனர். உணவுக்கான பொருட்களை ஓரளவு வாங்கி வைத்துள்ளோம். வீட்டிற்கு போகவேண்டும் என்ற துடிப்பு இருந்தாலும்இ இப்போது போக வேண்டாம் என கூறுகின்றனர். எமக்கு நோய்த்தொற்று இருந்தால் அது வீட்டிலுள்ளவர்களுக்க பரவிவிடும் தானே? எனினும்இ பாதுகாப்பான முறையில் எம்மை சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க உதவுங்கள். அங்கு எனது அம்மாவும் தம்பியும் தங்கையும் தனியாக உள்ளனர்” என்றார். இப்படி இந்த கொடூர நோயின் தாக்கத்தை அறிந்த ஒவ்வொருவரும் தம் குடும்பத்துடன் சேர்ந்துவிட துடிப்பம் அடுத்த கணம் நோயின் குணம் தமக்கிருந்தால் குடும்பமே பாதிக்கும் என எண்ணி தமைமை தனிமைப்படுத்தி வாழ்வதும் நடந்துகொண்டிருக்கிறது.
இவ்வாறு வாழ்பவர்கள் இங்கு வீடுகளில் அல்ல ஒரு சிறிய அடை என்ற சொல்லப்படும் அடைப்புகளில் வாழ்வதுதான் சோகம். அங்கே தம்மை தனிமைப்படுத்திக்கெண்டு வாழும் வாழ்வு நகரத்தின் நரக வாழ்வுதான்.
“நாம் வேலைசெய்யும்போது எமக்கு சமைத்த உணவே வழங்கினர். இப்போது நாமாக சமைத்து உண்ணவேண்டிய நிலை. நல்லவேளை எமது கடை முதலாளி கடையை மூடிவிட்டு செல்லும்போது சமையலறையின் சாவியை தந்துவிட்டு போனார். அதில்தான் நாம் சமைத்து சாப்பிடுகின்றோம். அவ்வப்போது வீட்டிலுள்ளவர்களுடன் கதைப்போம்.” என்கிறார் கே.பிரசாத்
இதேபோன்று கொழும்பு 14இல் அமைந்துள்ள விடுதியொன்றில் கடந்த 9 வருடங்களாக பணியாற்றும் காளிமுத்து தினேஸ்குமார் தன்னைப்போன்ற 5 இளைஞர்களுடன் அறையொன்றில் முடங்கியுள்ளார். இவருடைய சொந்த இடம் டிக்கோயா – தரவளை பிரதேசமாகும். இவர் தன்னுடைய நிலை பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்.
‘’கையில் காசிருந்தும் வெளியில் போக முடியவில்லை. அரிசி, பருப்பு, சோயாமீட் என்பன குறிப்பிட்டளவே உள்ளன. மூன்று நேரமும் அல்ல ஒரு நேரம் சமைத்து சாப்பிடுகின்றோம். எமது முதலாளி அவ்வப்போது குறிப்பிட்டளவு பொருட்களை வாங்கி அனுப்புகின்றார். நிலைமையை உணர்ந்து இப்போது காலை சாப்பாட்டை தவிர்த்துவிட்டு இரண்டு வேளை மாத்திரமே சாப்பிடுகின்றோம். காலை சாப்பாட்டை தவிர்ப்பதற்காக காலையில் எழும்பாமல் தூங்குவோம். பகல் சமைத்து அதனையே இரவும் சாப்பிடுவோம்.” என தமது ‘வீட்டில் இருப்போம்’ நிலையை விளக்குகிறார்.
அதே நேரம் இங்கிருக்கும் சிலரது ஊர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
“தரவளையில் இப்போது கொரோனா அச்சம் ஏற்பட்டு மக்களை தனிமைப்படுத்தியுள்ளார்கள். ஆகவே இப்போது எமக்கு அங்கு போகவும் பயமாக உள்ளது. இங்கேயே இருக்கவும் முடியாதுள்ளது. இப்போது எமது உணவுக்கான தேவையை மாத்திரம் பூர்த்திசெய்தால் போதும் என்ற நிலைதான்.” என்கிறார்.
தினேஸ் கூறும் தரவளையிலுள்ள வணக்கஸ்தலமொன்றில் நடைபெற்ற ஆராதனையில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதியிலுள்ள மூன்று தோட்டங்களைச் சேர்ந்த 200 குடும்பங்கள் தற்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்பு – தெஹிவளைக்கு கட்டடத் தொழிலுக்காக வந்த சிலர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் உள்ளனர்.
இவர்களில் நீலாவணையைச் சேர்ந்த ரொபின்சனை கட்டுமரன் தொடர்புகொண்டது.
எமக்கு இங்கு தங்குவதற்கென பிரத்தியேக அறைகள் இல்லை. வேலைசெய்யும் கட்டிடத்திலேயே சிறு சிறு கூடாரங்களை அமைத்து தங்கியுள்ளோம். வேலைசெய்யும் போது நாமாகவே சமைத்து சாப்பிட்டோம். அதேபோல்தான் இப்போதும் சாப்பிடுகின்றோம். ஆனால் பொருட்கள் தட்டுப்பாடாக உள்ளது. மா சற்று அதிகமாக வாங்கி வைத்துள்ளோம். ஆகவே இரண்டு நேரம் ரொட்டியும், ஒரு நேரம் சோறும் சாப்பிட்டும் வாழ்கின்றோம்.” என்கின்றார்.
இங்கிருக்கும் ஆறுபேரும் திருமணம் முடித்தவர்கள். வேலைசெய்த பணத்தை தமது குடும்பத்திற்காக அனுப்பிவைப்பர். இப்போது வேலையும் இல்லை பணமும் இல்லை. அது பற்றி அவர்கள் விபரிக்கையில்இ
“இப்போது கட்டிட வேலையை நிறுத்திவிட்டு இங்கு காணப்படும் சுத்தம் செய்தல் போன்ற சிறு சிறு வேலையை செய்கின்றோம். அதுவும் 6 பேருக்கும் வேலையில்லை. ஒரு நாளைக்கு ஒருவர் மாத்திரமே வேலை செய்யலாம். ஆகவே 6 பேரும் மாறி மாறி வேலை செய்கின்றோம். ஒரு நாளைக்கு 1600 ரூபாய் வரை கிடைக்கும் அதில் எமது 6 பேருக்குமான சாப்பாட்டு செலவை சமாளிக்கின்றோம்.” என்கிறார்.
ஆனாலும் இவர்கள் இப்போதைக்கு தமது இடங்களுக்க செல்லமுடியாது. கொழும்பு தொடர்ந்தும் காலவரையறையற்ற ஊரடங்கில் உள்ளது. ஏனைய மாவட்டங்களில் இருந்து யாரும் வரவும் முடியாது. இங்கிருந்து யாரும் செல்லவும் முடியாது. இந்நிலையில் இவர்களுக்கு தொழில் தருநர்களும் சுற்றியிருக்கும் சமூகமும் உணவைப் பெறுவதற்கு உதவவேண்டும். அது சமூகக் கடமை.
சமூக இடைவெளியை பேணி எம்மை நாமே காத்துக்கொள்வதோடு, எம்மால் வேறு எவருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டுவிடக் கூடாதென்பதில் தெளிவாக இருப்போம்.