தபால் அதிபர்.
கைநாட்டு வைத்து சம்பளம் பெறுகிறார்!
வீட்டுக்குள்ளயே கந்தோர் நடக்கும்… சிங்களம், தமிழ், ஆங்கிலம் எண்டு மூண்டு பாசையிலும் யாரோடயோ கதைக்கிற மாதிரி சத்தம் கேட்கும். நான் எட்டிப் பாத்திட்டு வந்திடுவன். படிச்சு பதவியில இருந்தவன்……
“நான் குளிக்கவேணும் அக்கா… தண்ணி அள்ளி விடுறியளே?” என்று ஒரு குழந்தையைப் போல அடம் பிடித்துக்கொண்டிருந்தார் 57 வயதான மாப்பாணபிள்ளை கதிர்காமநாதன். முல்லைத்தீவு மாவட்டத்தில், வன்னிவிளாங்குளம் என்ற இடத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவர். மாங்குளம், பூநகரி, கிளிநொச்சி ஆகிய பிரதான தபால் அலுவலகங்களில் தபால் அதிபராகப் பணியாற்றியவர்.
“கதிர்காமநாதன் எப்பேர்ப்பட்ட அறிவாளி தெரியுமா? முத்து முத்தான அவருடைய கையெழுத்தைப் பார்த்தாலே சொக்கிப் போவீர்கள். மற்றவர்களை மதிக்கும் நற்பண்பை நாதனிடமிருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்., அந்த அளவிற்குப் பண்பாளன், வேலையில் ஒரு சிறு பிழை கூடப் பிடிக்க முடியாது… அப்பேர்ப்பட்ட ஒரு ஆளுமை.. இன்டைக்கு….” என தனது உடைந்துபோன குரலில் வெளிப்படுத்தினார் வவுனிக்குளம் உப தபால் அலுவலகத்தில் பணியாற்றும் தபால் விநியோகஸ்தரான சின்னையா பத்மநாதன்.
அப்படி என்னதான் நடந்தது இந்த மாப்பாணபிள்ளை கதிர்காமநாதனுக்கு?
2000-ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாங்குளத்தில் தபால் அதிபராகப் பணியாற்றிக்கொண்டிருந்தவர். அவரது காதல் மனைவி மாலா கதிர்காமநாதன் இல்லத்தரசியாக குடும்பம் இன்புற்றிருந்தகாலம் அது. உள்நாட்டு போர் தொடங்கி உக்கிரமாகிய 2009 இல் ஊரே ஓடிக்கொண்டிருக்க இவரும் மாலாவுடன் ஓடிக்கொண்டிருந்தார். பல லட்சம் மக்களோடு மக்களாக சில நாட்கள் தொடர்ந்து நடந்து சென்ற அவர்களின் பயணம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்தது.
உயிருக்குப் பயந்த மக்கள் கும்பல் கும்பலாகக் கூடியிருந்தார்கள். குண்டு மழையும் துப்பாக்கி வேட்டுகளும் மக்களைப் பதம்பார்த்து பிணங்களைக் குவித்தது. கதிர்காமநாதனின் மனைவிக்கும் காலில் குண்டு துளைத்தது. அதனுடன் ஓட்டம் நின்றது. இராணுவத்தின் வருகையும் காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு ஏற்றும் அவர்களின் பணியும் துரிதமாக நடைபெற்றது. வைத்தியசாலைக்கு ஏற்றப்பட்டவர்களில் மாலாவும் ஒருவர். தன் மனைவியின் காயம் ஆறி விரைவிலேயே குணமாகி வந்துவிடுவார் என்கிற எதிர்பார்ப்புடன் கதிர்காமநாதன் முகாமுக்குச் சென்றார். மூன்று நாட்களாகியும் மனைவிபற்றி எதுவுமே அறியமுடியவில்லை. மனைவி எங்கு கொண்டு செல்லப்பட்டார், என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்றெதுவுமே அவருக்குத் தெரியவில்லை. யாரிடம் கேட்பது? கேட்டவர்கள் தெரியாது என கைவிரித்தனர். முகாமில் இருந்து வெளியில் செல்ல இவருக்கு அனுமதியில்லை. வைத்தியசாலையில் இருப்போரின் விபரங்களும் முகாமில் எவரிடமும் இல்லை.
அகதி முகாமுக்குள் இருந்தபோது அங்கு வரும் தொண்டு நிறுவன அதிகாரிகளிடம் விவரம் சொல்லி, மனைவியைத் தேடித் தருமாறு வேண்டினார். எதுவித பலனும் இல்லை. 6மாதங்களின் பின் முகாமுக்கு வெளியே வந்தபிறகு, அனைத்து பொது மருத்துவமனைகள், ராணுவ மருத்துவமனைகள் என்றெல்லா இடத்திலும் தேடி அலைந்தார். ஆனால் எங்கும் எந்த விவரமும் கிடைக்கவில்லை. காலில் காயம்பட்டு வைத்தியசாலைக்கு என்று இராணுவத்தால் ஏற்றிச்சென்ற மனைவிபற்றி எந்தவித தகவலும் இல்லாமல் மனம் உடைந்து போனார் தபாலதிபர் கதிர்காமநாதன்.
கதிர்காமநாதன் எட்டு சகோதர சகோதரிகளுடன் பிறந்தவர். தகப்பனார் கோவில் பூசகராக இருந்தவர். தனித்துவிடப்பட்ட கதிர்காமநாதனுக்கு சகோதரி ஒருவர் உறுதுணையானார். ஆனால் வருடக்கணக்காக மனைவியைக் காணாது அவருக்கு என்ன நேர்ந்தது என்பதும் தெரியாது விரக்தியடைந்த கதிர்காமநாதன் குடிக்கு அடிமையானார். இதனால் அலுவலகத்திற்கு அடிக்கடி லீவு போட்டார். அல்லது நேரம் தவறிச் சென்று கடமையைத் தவறவிட்டார். அதுவே தொடர்கதையானதால், சக ஊழியர்களுடன் அடிக்கடி முரண்படவேண்டியேற்பட்டது. இதனால் ஓய்வு பெறுவதற்கு மூன்று வருடங்கள் முன்னதாகவே விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார்.
ஆனாலும் மனைவியை தேடுவதை அவர் நிறுத்தவில்லை. அப்போதுதான் அந்த கொடிய சம்பவம் நடந்தது….இந்த விடயங்களையெல்லாம் கதிர்காமநாதனின் தமக்கையாரிடம் கேட்டுப் பொற்றுக்கொண்டிருந்தோம்.
அப்போது குளித்துவிட்டு அங்கே வந்த கதிர்காமநாதன், “அக்கா… மாலா இன்னும் வரேல்லையா? பொழுதுபடுது… ஏன் இன்னும் காணேல்ல?” என்று கேட்டுக்கொண்டே அவரது மனைவியை வீட்டுக்குள் தேடத் தொடங்கினார் கதிர்காமநாதன்.
“பொஞ்சாதியை மட்டும்தான் நல்ல ஞாபகம் இருக்கு, அவளை தேடி அடிக்கடி றோட்டுக்குப் போயிடுவான். பேரன்தான் பிடிச்சு இழுத்திட்டு வருவான். அதால பேரனைக் கண்டாலே அவனுக்குக் கோவம் வருது… கல்லெடுத்து எறிகிறான்” என்று குஞ்சு சொல்ல, முகத்தில் எவ்வித உணர்வையும் காட்டாமல், ஒரு குழந்தையைப் போல அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார் கதிர்காமநாதன்.
சொந்த சகோதரங்களையே அடையாளம் தெரியவில்லை. ஆனா மனைவியை மட்டும் ஞாபகம் இருக்கு. இது விபத்தா அல்லது ஆராவது செய்திச்சினமா எண்டு எங்களுக்கு தெரியாது.
அதென்ன கொடிய சம்பவம்?
“ஏற்கனவே மனம் பேதலிச்சு மனைவியை தேடிக்கொண்டு திரிந்தவன், ஒருநாள் நல்ல மழை மாலை நேரம், கதிர்காமநாதன் அடிபட்டு தெருவில் கிடப்பதாக சிலர் சொல்லிச்சினம். போய் பாத்தால், தலையில் அடிபட்டு; இரத்த வெள்ளத்தில் தெருவோரம் விழுந்து கிடந்தான். ஊர் சனத்தின்ர உதவியோட கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோனம். அங்கு சிகிச்சையளிக்க முடியாது என்று மருத்துவர்கள் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு அனுப்பிவைச்சினம். தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். அவரால் நடமாட முந்தது. ஆனால் பல நினைவுகள் அவரிடமிருந்து போய்விட்டன. சொந்த சகோதரங்களையே அடையாளம் தெரியவில்லை. ஆனா மனைவியை மட்டும் ஞாபகம் இருக்கு. இது விபத்தா அல்லது ஆராவது செய்திச்சினமா எண்டு எங்களுக்கு தெரியாது. என்ன நடந்தது எண்டு அவனிட்ட கேட்டும் அறியமுடியவில்லை. கடவுளுக்கு தான் தெரியும்.” என்று கூறினார் கண்கலங்க.
மனைவியைத் தேடிக்கொண்டு வீட்டுக்குள் சென்ற கதிர்காமநாதன் மூன்ற மொழிகளிலும் ஏதேதோ கதைப்பது கேட்டது. நாம் அதற்கு காது கொடுத்தபோது, “ இப்பிடித்தான், கந்தோருக்குப் போற மாதிரியே காலைல குளிச்சு வெளிக்கிடுவான். பிறகு வீட்டுக்குள்ளயே கந்தோர் நடக்கும்… சிங்களம், தமிழ், ஆங்கிலம் எண்டு மூண்டு பாசையிலும் யாரோடயோ கதைக்கிற மாதிரி சத்தம் கேட்கும். நான் எட்டிப் பாத்திட்டு வந்திடுவன். படிச்சு பதவியில இருந்தவன். அவன்ர பொஞ்சாதியின்ர முடிவு ஏதும் தெரிஞ்சிருந்தா ஒரளவுக்காவது ஆறியிருப்பான்…கடைவரை அவாவுக்கு என்ன நடந்ததெண்டு எங்களுக்கும் தெரியேல்லையே….” என்று சொல்லிக்கொண்டே கண்களைத் துடைத்துக்கொண்டார் குஞ்சு.
காணாமல் போனோர் பட்டியலில் இந்த மாலாவும் சேர்க்கப்பட்டிருப்பாவா?