சர்வமத சரஸ்வதி
மதம் என்பது மனம் தான்!
“பொய் சொல்லமாட்டேன், எவ்வளவு பசி எடுத்தாலும் சாப்பாடு தாங்கன்னு கேட்கவும் மாட்டேன், சலிக்காமல்; வேலை செஞ்சிட்டே இருப்பேன்… இதனாலயே என்னை எல்லோருக்கும் புடிச்சிடும்… யாரும் வெறுக்கமாட்டாங்க. ரொம்ப வயசுக்குப் பிறகுதான் கலியாணம் முடிச்சேன். புருசன் பேரு பொடி அப்பு ஆமி-சிங்களவர். துப்புரவுத் தொழிலாளியா வேலை பார்த்தாரு. …..
அன்று வெள்ளிக்கிழமை, முற்பகல் 10.30 மணியிருக்கும், மயூராபதி அம்மன் கோயில் ஜெகஜோதியாகக் காட்சியளித்தது. வயது பேதமின்றி, ஆண்களும் பெண்களும் கோயிலுக்குள் திரண்டிருந்தனர். நீல வண்ணப் பட்டுடுத்திய இளமங்கை ஒருவர் அங்கு காரில் வந்திறங்கினார். கால் கழுவப் போன அவரைப் பார்த்த மாத்திரத்தில், “ஹாய் டார்லிங்… யூ ஆ கமிங் ஆஃட எ லோங் டைம்…..” என்று கூறி அவரிடம் நலம் விசாரித்தார் ஒரு நடுத்தர வயதுப் பெண்!
கோயில் வாயிலுக்கு அருகில் இருந்தது அவருடைய பணியிடம்! மெல்லிய உடல்வாகு, கருப்பு நிறம், ஆனாலும் களையான முகம், சிரித்த முகத்துடன் அனைவரையும் ஒரேவிதமாய் வரவேற்றும் வழியனுப்பியும் கொண்டிருந்தார் அவர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முதலில் அந்தப் பெண்ணைத் தரிசித்து விட்டுத்தான் கோயிலுக்குள் செல்வதுபோல எங்களுக்குப் பட்டது.
அங்கு அவர் செய்துகொண்டிருந்த வேலைக்கும் பேசிய ஆங்கிலத்திற்கும் எப்படித் தொடர்பு ஏற்பட்டிருக்க முடியும் என்கிற கேள்வி, புதிதாக கோயிலுக்கு வரும் எல்லோருக்கும் போலவே எமக்கும் எழுந்தது. அந்தப் பெண்மணியை நெருங்கி நின்றோம். “ஆ யூ கமிங் ரு திஸ் டெம்பிள் ஃபெஸ்ட் டைம்?”என்று கேட்டார். இ;ல்லை என்பதாகத் தலையாட்டிவிட்டு, “உங்களைப் பற்றிக் கூற முடியுமா” என்றோம்.
“என்னோட பெயர் சரஸ்வதி! சொந்த இடம் மட்டக்களப்பு, அப்பா பெயர் வேலு, அம்மா பெயர் செல்லாச்சி. இந்து மதத்தைச் சேர்ந்தவங்கதான் நாங்க. ஏன்னோட கூடப் பிறந்தவங்க நாலு ஆண் சகோதரர்கள், மூன்று பெண் சகோதரிகள். எங்களுக்கு சின்ன வயதிலயே அப்பா இறந்திட்டாங்க. அம்மாவால எங்கள வளக்க முடியல. எங்க எல்லோரையுமே கிறிஸ்தவ மடங்கள்ல சேர்த்திட்டுப் போயிட்டாங்க. நாங்க ஒவ்வொருவரும் வௌவேறு இடங்கள்ல தான் வளர்ந்தோம். அப்பா அம்மா பாசம் இல்லாமல் போனது போலவே சகோதர பாசமும் கிட்டாமப் போயிட்டு. அவங்கள்லாம் இப்போ எங்கிருக்கிறாங்களோ தெரியாது. ஒரு தங்கச்சி கொழும்பிலதான் இருக்கிறதா கேள்ளிப்பட்டேன். ஆனா, இதுவரை நாங்க சந்திச்சதில்லை” என்றார்.
எனக்குப் படிப்பு சரியா வரல. கிறிஸ்தவ மடத்தில் பின்பற்றப்பட்ட சட்டதிட்டங்கள் எனக்குப் பிடிக்கல. அதுமட்டுமில்லாம, பிறந்ததில இருந்து கோயிலுக்குப் போய்வந்த நான் திடீரென்று யேசுவைக் கும்பிடவேண்டியிருந்தது.
அப்போது, நேர்த்திக்கடனுக்காக தேங்காய் உடைக்க வந்த இளைஞர் ஒருவர், அதை எவ்வாறு உடைக்கவேண்டும. ஏன்று சரஸ்வதியிடம் சிங்களத்தில் கேட்டார், அவருக்கு எழுந்து நின்று பொறுமையாகப் பதில் சொன்னார் சரஸ்வதி. எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்ற வந்த நடுத்தர வயது சிங்களப் பெண்மணி, அதைச் செய்யும் விதம் குறித்தும் சரஸ்வதியிடமே கேட்டுச் செய்தார்.
தடங்கலுக்காக ஆங்கிலத்தில் வருத்தம் தெரிவித்த சரஸ்வதி தன்னுடைய கடந்த காலத்தைக் கூறுவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். “ஏனக்குப் படிப்பு சரியா வரல. கிறிஸ்தவ மடத்தில் பின்பற்றப்பட்ட சட்டதிட்டங்கள் எனக்குப் பிடிக்கல. அதுமட்டுமில்லாம, பிறந்ததில இருந்து கோயிலுக்குப் போய்வந்த நான் திடீரென்று யேசுவைக் கும்பிடவேண்டியிருந்தது. அந்த வணக்க முறை எனக்கு ரொம்பவும் அந்நியமா இருந்திச்சு. அஞ்சாம் வகுப்பு படிச்சிட்டிருந்தப்ப ஒருநாள், என்னோட மூத்த அண்ணனைக் கண்டேன். அப்போ அவரோட கையைப் பிடிச்சிட்டு ஓ..ன்னு அழுதேன். என்னை அங்கிருந்து கூட்டிட்டுப் போகச்சொல்லி மன்றாடினேன். அவர் என்னைக் கொழும்புக்குக் கூட்டிட்டு வந்து ஒரு பணக்கார முஸ்லிம் வீட்டில வேலைக்குச் சேர்த்திட்டுப் போயிட்டாரு”.
“அவங்க என்னை நல்லாவே பாத்துக்கிட்டாங்க. பொய் சொல்லமாட்டேன், எவ்வளவு பசி எடுத்தாலும் சாப்பாடு தாங்கன்னு கேட்கவும் மாட்டேன், சலிக்காமல் வேலை செஞ்சிட்டே இருப்பேன்… இதனாலயே என்னை எல்லோருக்கும் புடிச்சிடும்! யாரும் வெறுக்கமாட்டாங்க!! அதுக்குப் பிறகும் சிங்கள, முஸ்லிம், தமிழ் வீடுகள்ல மட்டுமில்லாம பறங்கியர் வீடுகள்லயும் கூட வேலை செஞ்சிருக்கேன். இப்போ காரில வந்திறங்கின புள்ளயோட வீட்டிலயும் வேலை செஞ்சிருக்கேன். அவங்க பறங்கியர்கள். அந்தப் புள்ள ஞாயிற்றுக் கிழழை சர்ச்சுக்குப் போகும். வெள்ளிக்கிழமை இங்க வந்திடும். இன்னும் கல்யாணம் ஆகல. அதுக்கான பிரார்த்தனைக்காக இங்க வருது!” என்றார்.
சரஸ்வதி ரொம்ப வயசுக்குப் பிறகுதான் திருமணம் செய்துகொண்டாராம் – அதுவும் காதல் திருமணம்! “புருசன் பேரு பொடி அப்பு ஆமி-சிங்களவர். துப்புரவுத் தொழிலாளியா வேலை பார்த்தாரு. அவர் பன்சலைக்குக் கூட்டிட்டுப் போவாரு. பணக் கஷ்டம் இருந்தாலும் வாழ்க்கை சந்தோசமா இருந்திச்சு. ரெண்டு ஆம்பிளைப் புள்ளைகள் பிறங்தாங்க. அவங்களுக்குச் சின்ன வயசா இருந்தப்பவே புருசனுக்கு உடம்புக்கு முடியாமப் போச்சு. நடக்க முடியாம பத்து வருஷத்துக்கும் மேல படுத்த படுக்கையாயிட்டாரு. கடைசிவரை நான்தான் பராமரித்தேன். மூணு வருஷ்த்துக்கு முன்னாடிதான் இறந்தாரு” என்றார்.
அப்போது அவ்வழியாக பொலிஸ் வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதைக் கண்டதும் சட்டென்று எழுந்து அவர்களுக்கு சல்யூட் அடித்தார் சரஸ்வதி. கேள்வியாக அவரைப் பார்த்தேன். “அவங்க வெள்ளவத்தை பொலிஸ்காரங்க. அந்த ஸ்டேசன்லயும் தினமும் 4 மணி நேரம் வேலை பார்க்கிறேன் என்றார்.
நடுத்தர வயதென்று எல்லோரையும் நம்பவைக்கிற தோற்றம் கொண்ட சரஸ்வதிக்கு 17 மற்றும் 18 ஆகிய வயதுகளில் இரண்டு மகன்கள் இருக்கிறார்களாம். “பெரியவன் பெயர் ரொபின்சன் – கொழும்பில உள்ள கம்பனி ஒன்னில கிளீனிங் வேலை பாக்கிறான். சின்னவன் பிரின்ஸ் குமார் – அவனும் கொழும்பில ஒரு பாஸ்டர் கூட இருக்கிறான். ரெண்டு பேருமே ஒவ்வொரு நாளும் என்னய வந்து பாத்திட்டுத்தான் போவாங்க” என்றார்.
இடையிடையே தன் வாடிக்கையாளர்களைக் கவனிக்கவும் சரஸ்வதி தவறவில்லை. “அம்மா, ஐயா, நோனா, மாத்தையா, சேர், மேடம் என்று அவரவர் மதங்களுக்குத் தகுந்தவாறு பக்தர்களிடம் உரையாடினார். இளவயது பெண் பிள்ளைகளைக் கண்டால், டார்லிங் என்று அன்பொழுக அழைத்துப் பேசினார்.
பக்தர் கூட்டம் சற்றே குறைந்தது. “எனக்கு இப்போது 80 வயதாகுது” என்று கூறி எம்மை ஒரு கணம் அதிரவைத்தார். “கடவுள் புண்ணியத்தில இன்னமும் ஒரு நோயும் இல்லை. அதுதான் என்னோட சந்தோசம்” என்றவரிடம், “80 வயதா??” என்றோம். வெள்ளந்தியான அவர், “என்னோட அடையாள அட்டையைப் பாருங்க” என்று காட்டினார். 1958–ஆம் ஆண்டு தான் பிறந்திருக்கிறார். “உங்களுக்கு 64 வயதுதான் ஆகிறது” என்றேன். “அப்படியா? அவ்வளவுதான் ஆகுதா?” என்று சர்வசாதாரணமாகக் கேட்டவர், பின்னர் அதுபற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை.
“பிள்ளைகளும் நீங்களும் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். நீங்கள் மூன்று பேரும் ஏன் சேர்ந்திருக்கக் கூடாது, உங்கள் வீடு எங்கே இருக்கிறது?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டபோது, அவருடைய ஒரே ப
/
தில், “எங்களுக்கு இதுவரை வீடில்லை அரசாங்கத்துக்கு எத்தனையோ முறை கடிதம் எழுதியாச்சு. ஆனா, இன்னும் கிடைக்கல, ஆனால் கிடைக்கும் என்கிற நம்பிக்கை நூறு சதவீதம் இருக்கு” என்றார் கோயில் கோபுரத்தைக் காட்டியவாறு!
“காலைல அஞ்சு மணிக்கு இந்தக் கோயிலைச் சுத்திக் கூட்டிப் பெருக்குவேன். காலை 7 மணில இருந்து மதியம் 12 மணி வரைக்கும் இந்த வேலை. அப்புறம் 12 மணில இருந்து 4 மணி வரை வெள்ளவத்தை பொலிஸ் ஸ்டேசன்ல கிளீனிங் வேலை செஞ்சிட்டு திரும்பவும் மாலை 5 மணிக்கு இங்க வந்திடுவேன். சாப்பாட்டுச் செலவு இல்லை. மதியம் பொலிஸ்காரங்க குடுப்பாங்க. காலை
லயும் இரவிலயும் கோயில்ல தினமும் ஏதாவது கிடைக்கும்” என்றார் திருப்தியாக.
“வீடுகள்ல வேலை செய்தால், அங்கே நீங்கள் பாதுகாப்பாக தங்கலாம் இல்லையா?” என்றபோது, அவசரமாக மறுத்தார். எல்லா வகையான வீடுகள்லயும் வேலை செஞ்சிட்டேன். அப்போதான் ஆங்கிலமும் கத்துக்கிட்டேன். படிப்புதான் வரல்ல. பாi~யாவது வந்திருச்சு. மற்றவங்களோட சந்தோசத்தையோ துக்கத்தையோ பகிர்ந்துக்கற அளவுக்கு சிங்களமும் ஆங்கிலமும் கத்துக்கிட்டேன். இந்த வேலை திருப்தியாவே இருக்கு…” என்றார்.
“இப்பல்லாம் கோயிலுக்கு வந்தாதான் மனசு நிறைவா இருக்கு. முன்பு இங்க பக்கத்திலதான் புருசன் புள்ளைகளோட ஒரு வீட்டில கூலிக்கு இருந்தோம். அப்ப சர்ச்சுக்கு அடிக்கடி போவேன். புருசனுக்காக பன்சலைக்கும் போனதுண்டு. ஆனாலும், தினமும் இந்தக் கோயில் மணிச் சத்தத்தைக் கேட்கக் கேட்க, எனக்கு அம்மன் மேல ஏதோ ஒரு ஈர்ப்பு வந்திடுத்து” என்று கூறினார் மெலிதான சிரிப்புடன்.
“திடீரென்று ஒருநாள் இந்தக் கோயிலை இடிச்சாங்க. அம்மன் சிலையை சாக்கில போட்டு இங்கிருந்து அங்க இழுத்திட்டுப் போனாங்க. அதைக் கண்டதும் ஓ…ன்னு அழுதிட்டேன். (ஐந்தாறு வருடங்களாக மயூராபதி அம்மன் கோயில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது). அதுக்குப் பிறகு இங்க வரலன்னா ஏதோ போல இருக்கு. இங்க தமிழர்களைவிட சிங்களவர்கள் தான் அதிகமா வர்றாங்க. அதுமட்டுமில்லாம, கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் கூட வர்றாங்க. கருப்புத் துணி உடுத்தாமல், முக்காடு போடாமல் தலையில் ஒரு துணியைப் போட்டுட்டு வந்து முஸ்லிம் பொம்பிளைகள் கூட சாமி கும்பிட்டு தேங்காய் உடைச்சிட்டுப் போவாங்க. எப்பிடி செய்றதுன்னு என்கிட்ட கேப்பாங்க. அதைச் சொல்றதில எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சி கோடி ரூபாய் கிடைச்சாலும் வராது.” ஏன்று தன்னுடைய கதையைக் கூறி முடித்தார் சரஸ்வதி. ஆனால், கதையோட்டத்தின் எந்தவொரு சர்ந்தர்ப்பத்திலும் துக்கத்தில் அவர் குரல் பிசிறவில்லை. துயரத்தில் பெருமூச்சும் வரவில்லை. ஏன் கண்களில் இருந்து கண்ணீரும் வரவில்லை அவருக்கு! இழப்புகளும் இல்லாமைகளும் தொடர்ந்தாலும், மனதில் நம்பிக்கையைத் தக்கவைத்து மகிழ்ச்சியுடன் வாழ, சரஸ்வதியால் மட்டும்தான் முடியும் போல!
சரி, தமிழ், சிங்களம் ஆகியவற்றுடன் ஆங்கிலமும் பேசி வாடிக்கையாளரைக் கவரும் சரஸ்வதி, கோயில் அருகில் என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா?? பக்தர்களின் செருப்புகளைப் பராமரிக்கிறார்.
தான் எப்போதும் கோயில் அருகில் அமர்ந்திருப்பேன் என்றும் எமக்காகவும் தான் பிரார்த்தனை செய்வதாகவும் ஆங்கிலத்திலேயே கூறியபடி கை குலுக்கி அனுப்பி வைத்தார்.
இந்து, மதத்தில் பிறந்து… கிறிஸ்தவ மடத்தில் வளர்ந்து… பௌத்த மதத்தவரை மணம் புரிந்து… இஸ்லாமியர்களின் வீடுகளில் பணியாற்றி…. மீண்டும் இந்துவாக மாறிவிட்டிருக்கிறார் இந்த சர்வமத சரஸ்வதி!