Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

பணத்தைப் பெருக்கும் கொண்டாட்டம்.!

  அன்பு டையீர், நிகழும் பார்த்திப வருடம் ஆடி மாதம் 14ஆம் நாள்(30.07.2005) சனிக்கிழமை வரும் சுபவேளையில் எமது இல்லத்தில்  நடைபெறவிருக்கும்   பண வரவு வைபவத்தில்  தாங்களும் தங்கள் குடும்ப சகிதம்   வருகை தந்து சபையைச் சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கிறோம். மு.கு – 1998ஆம் ஆண்டு நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொள்ளாதவர்களும் இவ்வைபவத்தில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்படி ஒரு  அழைப்பிதழ்!   யாழ்குடாநாட்டின் சிலபகுதிகளில் இப்படி ஒரு வைபவம்  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ‘பண வரவு வைபவம்’ என்கின்ற […]

14.10.2016  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்

 

அன்பு டையீர்,

நிகழும் பார்த்திப வருடம் ஆடி மாதம் 14ஆம் நாள்(30.07.2005) சனிக்கிழமை வரும் சுபவேளையில் எமது இல்லத்தில்  நடைபெறவிருக்கும்   பண வரவு வைபவத்தில்  தாங்களும் தங்கள் குடும்ப சகிதம்   வருகை தந்து சபையைச் சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கிறோம்.

  • மு.கு – 1998ஆம் ஆண்டு நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொள்ளாதவர்களும் இவ்வைபவத்தில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படி ஒரு  அழைப்பிதழ்!

 

யாழ்குடாநாட்டின் சிலபகுதிகளில் இப்படி ஒரு வைபவம்  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ‘பண வரவு வைபவம்’ என்கின்ற இந்த வழக்கு குறிப்பாக வடமராட்சியின் நெல்லியடி பகுதியின் கீழ்வரும் உடுப்பிட்டிப் பிரதேசத்தில் இலகடி,இலந்தைக்காடு, கொற்றாவத்தை, சமரவாகு நவிண்டில் போன்ற பல கிராமங்களில் இருந்து வருகிறது.


வீரப
செல்லன் வீரபத்திரன்

“நான் இதுவரை 9 ‘பண வரவு வைபவங்களை நடத்தியுள்ளேன். அதனூடாக என் தந்தை பெற்ற கடன், வீடு கட்டல், பிள்ளைகளின் திருமணம், பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பல் என பல்வேறு  தேவைகளையும் நிறைவுசெய்துள்ளேன்.” என்கிறார் 67 வயதான கொற்றாவத்தையைச் சேர்ந்த செல்லன் வீரபத்திரன்.

இவரது பேரன் காலத்தில்  இருந்தே இந்த சடங்கு நடந்து வருவதாக குறிப்பிடும் இவர் அந்தக் கிராமத்தில்  இந்த நடவடிக்கைகளுக்கு தலைவராகவும் பின்னர் பொருளாளராகவும் இருந்துள்ளார்.

“எனது தாய் தகப்பனுக்கு இருந்த கிணறு வெட்டிய கடனைத் தீர்ப்பதற்காக, நான் முதன்முதலாக 1969ஆம் ஆண்டு,  பணவரவு சடங்கை நடத்தியபோது 2,3 ரூபாவாக போடப்பட்டு சேர்ந்த காசு, ஆறாயிரம் ரூபா . அப்போது அது அறுபது லட்சத்திற்குச் சமம். அன்று ஆறாயிரம் ரூபா என்பது ஊரே  வியக்கும் வண்ணம் மிகப்பெரியதொகையாக  இருந்தது.” என்கிறார் செல்லன்  வீரபத்திரன்.

இந்த மாதிரி ‘பண வரவு’ விருந்துபசாரத்திற்கு கூடுதலாக அந்தக் கிராமத்தில் இருந்தும் அயல்  கிராமங்களில்  இருந்தும் ஆக்கள்   அழைக்கப்படுகின்றனர். 100 ,200 பேர் வரையில்  அழைக்கப்படுகின்றனர். இறைச்சி  மீன் மரக்கறி என தேவைக்கேற்ப  உணவு பரிமாறப்படுகிறது. இதற்காக பந்தல்போட்டு  அலங்காரங்கள் செய்து பணவரவுவைபவம்  திருமண  வீடுகள் போல் கோலாகலமாக நடத்தப்படுகிறது.

இந்த வைபவத்திலே கலந்து கொள்ளும் ஒருவர் ஒரு ஆயிரம் ரூபாவைக்
கொடுக்கிறாரென்று வைத்துக்கொள்வோம், பின்னர் தான் அந்தவைபவத்தை நிகழ்த்தும் போது  அதை இரண்டாயிரமாக எதிர்பார்ப்பார். மீண்டும் அவரது முறை வருகின்றபோது இரண்டாயிரம் வாங்கியவர் இரண்டாயிரத்துக்கு நாலாயிரத்தைக்
கொடுக்கவேண்டியவராகிறார். இப்படியே படிப்படியாக வளர்ந்த பணவரவு இன்று
பன்மடங்காகப் பெருகி இதன் மொத்த வரவானது இன்று கோடி ரூபாக்களைத்
தாண்டிவிட்டது. என்பதை  அறிய முடிகிறது.

அத்துடன், அழைப்பிதழில் உள்ளடக்கப்பட்டிருக்கும் முக்கியமான விடயம் யாதெனில் தாம் எப்போதிலிருந்து மற்றவர்களுக்கு கொடுத்த பணம் திரும்பப்
பெறப்படவிருக்கிறது என்பது – மு. கு – (முக்கிய குறிப்பு) என குறிப்பிடப்பட்டு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அத்துடன்  ஒருவருக்கு அழைப்பிதழ் வழங்குகின்றபோதே அவர் கொடுக்கவேண்டிய பழைய கணக்குகள் எல்லாம் சேர்த்து கூட்டிக் ஒரு தொகை சொல்லப்படும். அதற்கேற்ப அவர்கள் அந்தப் பணத்தை பணவரவு வைபவத்தன்று கொடுப்பர்கள். ஒரு வகையில்  இதை ஒரு சேமிப்பு முறையாகவும் அதேநேரம் வங்கியில் கடனெடுக்கும் (Loan) முறைமையாகவும் இதைப் பார்க்கலாம். ‘சிறுதுளி பெரு   வெள்ளம் ‘ என்பதைப்போல்  சிறுதொகைப் பணத்தை பலருக்கும்கொடுத்து பின்னர்  அதை இரண்டு  மடங்காக  அறவிட்டுக் கொள்கிறார்கள். அன்று, வங்கி நடைமுறைகளுக்குள் வராத இந்தக் கிராமங்கள் தற்போது வங்கியில்  இருந்து பொலீஸ் பாதுகாப்புடன் வந்து பணத்தை எடுத்துச் செல்லும் கிராமங்களாகி விட்டனவாம்

இந்த  கொடுக்கல் வாங்கல் கணக்குகளை எழுதி வைப்பதற்கு ஒவ்வொருவரும் தனித்தனிப் பதிவேடுகள் வைத்திருக்கிறார்கள். அதில் ஒவ்வொரு ஊரைச் சேர்ந்தவர்களுக்கும் தாம் கொடுத்த தொகையினை மிகத் தெளிவாக நிரற்படுத்தி எழுதியிருப்பார்கள். பின்னர் தாம் பணவரவு வைபவம் நிகழ்த்துகின்ற தருணம் வரும்போது அந்தப் பதிவேட்டின்படி ஒவ்வொருவரும் தரவேண்டிய தொகையினைக் கணித்து    அழைப்பிதழ் கொடுக்கும் போது அவர்களிடம் சொல்வார்கள்.

இதில் முக்கியமான இன்னொரு விடயம் யாதெனில் ஆண் பெண் என இரண்டுவிதமான
பதிவேடுகளை வைத்திருப்பார்கள். ஆண் பதிவேடு என்பது குடும்பத் தலைவரின்
கணக்கைக் குறிப்பதாகும். இந்தக் கணக்கே கொடுக்கப்படும் அசல் தொகையினைக்
கொண்டிருக்கும். அந்த தொகையோடு சேர்த்துக் கொடுக்கப்படும் சிறு தொகை தான்
பெண் பதிவேட்டில் பதியப்பட்டிருக்கும். பெண் பதிவேடு என்பது மனைவியின்
பங்கைக் குறிப்பதாகும். இதன் நியமத் தொகை ஆயிரம் ரூபாவாகும். எவ்வளவுதான்
ஆண் தொகை அதிகளவில் காணப்பட்டாலும் பெண் தொகையானது ஆயிரத்தைக்
கடப்பதுமில்லை, ஆயிரத்திற்குக் குறைவதுமில்லை.

இந்த பணவரவு சடங்கானது பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தினர் தமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு மூலோபாயமாக்கொள்கின்றனர்.. இதன்மூலம் சமூகத்தில் அடித்தட்டு மக்களாக இருந்தவர்கள் இன்று சொந்தக் காலில்
முன்னேறி பொருளாதார நிலையில் மேலேறிவிட்டனர் என்பதை இதை
முன்னெடுத்துவரும் மக்களது குடியிருப்புக்களைப் பார்க்கும்போது
புரிந்துகொள்ள முடிகிறது. இந்த சடங்கின் மூலம் அதிக பணத்தைச்
சம்பாதித்திக்கொண்டவர்கள் பலர் உள்ளனர்.

பணவரவு பதியும் கொப்பி
பணவரவு பதியும் கொப்பி

“ எனக்கு 10 பிள்ளையள். அவையளை படிக்க வைச்சதும், கலியாணம் கட்டிக் குடுத்ததும், சிலரை வெளிநாட்டுக்கு  அனுப்பியதும் இந்த தொழில்  மூலம் தான்” என்கிறார் வீரபத்திரன்.

இது தொழிலா? என்று நாம் வியந்தபோது,

“ ஆம், இது ஒரு நல்ல தொழில். ,இதற்கு நாணயம் முக்கியம். பணம் கொடுப்பதிலும் வாங்குவதிலும் நாணயமாக இருக்கவேண்டும். சிலர் அதிலிருந்து தவறிவிடுகிறார்கள். இந்த பணச் சடங்கிற்காக நாம் ஒவ்வொருவருக்கும்கொடுக்கும் பணத்தின் இருமடங்கை அவர்கள் திருப்பித் தரவேண்டும். சிலர் அதில் தவறிவிடுகின்றனர்.” என்கிறார் வீரபத்திரன்.இதை மீளப் பெறுவதற்கு ஏதாவது பிரத்தியேக வழி  முறைகள் உண்டா என அவரிடம் கேட்டபோது,

ஒரு  அழைப்பிதழைக் காட்டினார்.

அழைப்பிதழ்
அழைப்பிதழ்

தேனீர் விருந்துபசாரம் 

2016.05.28ஆம் திகதி எமது பணவரவு வைபவத்தில் தாங்கள் எமது கடனினைச் செலுத்த வில்லை. இக்கடனினை  மீள்ளிப்புச்செய்வதற்காக  2016,06,12 ஞாயிற்றுக்கிழமை எம்மால் ஒழுங்குசெய்யப்பட்ட  விருந்துபசாரத்தில் கலந்தகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

திருப்பிச்செலுத்தாதவர்களுக்கு இந்த  அழைப்பிதழ் வழங்கப்பட்டு பணம் வசூலிக்கப்படுகிறது. அதை சிற்றுண்டியுடனான தேனீர் விருந்துபாசாரமாகவே நடத்துகின்றனர். ஆயினும் ஒருவர் இந்த ‘பணவரவுச் சடங்கை’ தான் நினைத்த மாதிரி நடத்திவிட முடியாது. ஒருமுறை ‘பணவரவுச்சடங்கு’ செய்தால் அடுத் பணவரவுச் சடங்கை அவர்செய்வதற்கு 5 வருடங்கள் காத்திருக்கவேண்டும் என்பது இங்குள்ள விதி. பிரச்சினைக்காலகட்டங்களில் தாம் மிகவும் கஸ்ரப்பட்டதாகவும் தற்போது ஓரளவுக்கு நிமிர முடிந்தது இந்த பணச் சடங்கால்தான் என்கின்றனர். இக்கிராம மக்களில் பலர்.

இந்தக்கிராமத்தில், கணவனை இழந்த பெண் ஒருவர் தனது நான்கு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் முடிக்க முடியாது கஸ்ரப்பட்ட போது  தலைவர் என்ற வகையில் அதற்காக பணச் சடங்குக்கு அனுமதித்ததாகவும்  அதனூடாக அவருக்கு 20 இலட்சம் கிடைக்க அதை வைத்து 2 பிள்ளைகளுக்கு திருமணம் நடத்தியதாகவும் குறிப்பிட்டார் வீரபத்திரன்.

அதேநேரம் அந்த குறித்தபெண் 2இலச்சம் மட்டுமே ஊருக்குள் கொடுத்திருந்ததாகவும், ஆனால் அவருக்கு உதவிசெய்யும் நோக்கில் பலரும் அதிக தொகையை அவருக்கு கொடுத்து உதவியதால் 20 இலச்சத்தை திரட்ட முடிந்த்தென்று வீரபத்திரன் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு பணம் திரட்டும் இந்த சடங்கு வருடத்தில்  மே ,ஜூன், ஜீலை மாதங்களில் மட்டுமே நடத்தப்படுகிறது. குறிப்பாக இந்த சடங்கை நிகழ்த்தும் மக்கள் விவசாயம், தச்சுத்தொழில், கூலித்தொழில்,மேசன், வியாபாரம் எனதொழில் செய்பவர்களாக உள்ளனர். மிகச்சொற்ப எண்ணிக்கையானோர் அரசதொழில்களில் உள்ளனர்.

ஏனைய சடங்குகளைப் போலன்றி வந்தோமா வயிறாற உண்டோமா
பரிசுப் பொருள் கொடுத்தோமா சந்தோசமாகப் போனோமா என்றில்லாமல் பணவரவு
வைபவத்துக்கு வந்தவர்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு அந்த வரவின் மொத்தத்
தொகை அறிவிக்கப்படும்வரை காத்திருக்கிறார்கள். இரவு பத்துமணிவரை நடைபெறும் இவ் வைபவத்திலே அந்த நேரம்வரை அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் வந்துகொண்டேயிருப்பார்கள். இறுதியாக பணம் எண்ணப்பட்டு இவ்வளவுதான் சேர்ந்ததென்று அவர்கள் எல்லோர் முன்னிலையிலும்
பகிரங்கமாக அறிவிக்கப்படும். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து வந்தவர்கள் கலைந்துசெல்வர்.

ஊருக்குள் இந்தச் சடங்கை ‘தட்டுக் கலியாணம்’ என்றேசொல்கிறார்கள்.  இற்றைக்கு 50 வருடத்திற்கு முன் ‘இலம்பைச் சடங்கு’ என  அழைத்தனர் என வீரபத்திரன் குறிப்பிடுகிறார். அதேவேளை இந்தியாவிலும்  “மொய் விருந்து” என்றபெயரில் கொண்டாடப்படுகிறது என அறிய முடிகிறது. அதுமட்டுமல்லாமல் கனடாவில் வெடிங் சோசல்’(‘ Wedding social” ) என்ற கொண்டாட்டம்  இதேபோல் உள்ளதாக இணையத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

 

சரி, இந்த சங்கிலித் தொடரானகொடுக்கல் வாங்கலை ஒருவர் எப்போது முஇவுக்குக் கொண்ட வருவார்?

மு.கு – 2008 ஆம் ஆண்டு தொடக்கம் சகல வைபவங்களுக்கும் கொடுத்த பணமும் வாங்கப்படும். புதிய வரவுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 

வீரபுத்திரனிடமிருந்த  அழைப்பிதழ்களில் இந்தக் குறிப்புக்களைக் கொண்ட  அழைப்பிதழும் இருந்த்து.

இதன் விபரத்த்தை வீரபத்திரனிடம் கேட்ட போது,

“இந்த குறித்த குடும்பத்தினர் இத்துடன் இந்த வைபவத்தை நிறுத்திக்கொள்ள விரும்புகின்றனர். அதனால் புதிய வரவுகளை அவர்கள் ஏற்பதில்லை.” என்றார்.

இந்தியாவில் ‘மொய் விருந்து விழா சுவரொட்டி -நன்றி- http://tamil.thehindu.com/

யாழ்ப்பாணக்குடாநாட்டின் ஏனைய ஊர்களான குருநகர்,
பாஷையூர், சாந்தை, பல்லசுட்டி, பொன்னாலை போன்றவற்றில் கொண்டாடப்பட்டாலும்
உடுப்பிட்டிப் பிரதேசத்திலேயே வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள் என மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஜூன் ஜூலையிலும் இது கொற்றாவத்தையில் கொண்டாடப்பட்டுள்ளது. ஆனாலும்  இனி வரும் காலத்தில் தன்னால் இதில் ஈடுபட முடியாது என வீரபத்திரன் கவலையுடன் தெரிவிக்கிறார்.

“வெளி நாட்டில் இருக்கும் எனது  பிள்ளைகள்  இதை  விரும்புகிறார்கள் இல்லை. என்னதான் இருந்தாலும் இந்தப் பிள்ளைகள் இந்தளவுக்குப் படித்து முன்னேறி
சமூக அந்தஸ்தோடு வாழ்வதற்கு இந்த பணவரவு தானே கைகொடுத்தது.”

இதைச் செய்யவிடாது பிள்ளைகள் தடுப்பது வீரபத்திரனுக்கு  பெரும் கவலைதான். இந்த  வயசில்(67) 2,3 இலச்சங்கள்  கையில் புரள்வதை அவர் எப்படி  இழப்பார்?