Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

பெண்களின் உணவகம்
பாரம்பரிய உணவுகளை நாடும் மக்கள் !

“கொழும்பில 250 ரூபாக்கு விக்கிற பழச்சாறு இங்க வெறும் 40 ரூபாய் தான். இதால ஒவ்வொரு நாளும் சந்தோசமா ரெண்டு தரம் பழச்சாறு குடிக்கிறன்” என்கிறார் குருநாகலைச் சேர்ந்த சதுர நுவான்.

11.11.2016  |  
கிளிநொசசி மாவட்டம்
பெண்கள் இணைந்து நடத்தும் உணவகம்.

“புல்லுச் செருக்கியும் கல் சுமந்தும் கொழுத்துற வெயிலில கூலி வேலை செய்துகொண்டிருந்த நான், இப்ப நிழலில இருந்து வியாபாரம் செய்யிறன். எனக்குத் தெரிஞ்ச வேலையைச் செய்யுறதோட அன்றாட செலவுக்கும் காசு கிடைக்கிறது சந்தோசமாயிருக்கு” என்று கூறுகிறார்; தர்சிகா சத்தியரூபன்.

மரக்கறி புட்டு அவிக்கும் தர்ஷிகா
மரக்கறி புட்டு அவிக்கும் தர்ஷிகா

கிளிநொச்சி மாவட்டம், இயக்கச்சி பகுதியில் உள்ள சங்கத்தார் வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்சிகா சத்தியரூபன். கடந்த 2009-ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின்போது முள்ளிவாய்க்கால் செல்வீச்சுக்கு கணவர் பலியாக, காலில் காயமடைந்த தர்சிகா தனது ஐந்து வயது மகன் மற்றும் ஒரு வயது மகளுடன் முகாமுக்குள் தஞ்சம் அடைந்தவர். கணவனை இழந்த சோகத்துடனும் காலின் ரணத்துடனும் குழந்தைகளுடன் ஒரு வருடத்தை முகாமுக்குள் கழித்தார். வருமானத்திற்கு வழிதெரியாத நிலையில் குழந்தைகளை வளர்க்கவேண்டிய பொறுப்பு, குருவியின் தலைமேல் பனங்காயாக தர்சிகாவின் தலையிலும் கனத்தது. வேறு வழியின்றி கூலி வேலைக்குப் போனார். வெயிலில் நிற்கவும் பாரம் சுமக்கவும் முடியாமல் அவதிப்பட்டார். சில மாதங்களிலேயே அதை விடுத்து ஆடை தொழிற்சாலையொன்றில் பணிக்குச் சேர்ந்தார். காலில் உள்ள காயம் காரணமாக, அங்கும் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மீண்டும் கூலி வேலைக்குத் திரும்பினார். உடல் நிலை சீராகவிருந்த நாட்களில் மட்டும் வேலைக்குப் போனதால் வறுமை தர்சிகாவையும் குழந்தைகளையும் விரட்டிக்கொண்டே இருந்தது.

இந்த நிலையில்தான், தற்போது தனக்கு நன்கு தெரிந்த சமையல் வேலை செய்து பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது அவருக்கு! முன்பு சாதாரண புட்டு அவிக்கத் தெரிந்திருந்த தர்சிகா தற்போது அம்மாச்சி உணவகத்தில் மரக்கறிப்புட்டு அவித்து விற்பனை செய்கிறார். கோவா, கரட், வெங்காயத் தாள் மற்றும் விதவிதமான கீரைகள் சேர்த்து அரிசி மாவில் அவர் தயாரிக்கும் புட்டின் சுவை, சிறுவர்களை மட்டுமின்றி பெரியவர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. இதன்மூலம், தினமும் 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். காலை 6.00 மணிக்கு தனது வேலைகளைத் தொடங்கும் தர்சிகா, மதியம் 1.00 மணிக்கு வேலை முடிந்;து பணத்துடன் வீடு திரும்புகிறார். இதன் மூலம் குழந்தைகளைப் பட்டினி போடவேண்டிய தேவை இல்லை என்று சற்றே நிம்மதியுடன் தெரிவிக்கிறார் தர்சிகா.

“வீட்டில சுத்தமாவும் ருசியாவும் இருப்பது மாதிரியே இங்கயும் சாப்பாடு கிடைக்கிறதால, இப்ப நான்; வேற ஹோட்டலுக்குப் போறதில்லை, இஞ்சதான் ஒவ்வொரு நாளும் சாப்பிட வாறனான்” என்கிறார் வி.கண்ணன். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர், வேலை நிமித்தம் கிளிநொச்சியில் வாடகை அறையில் தங்கியிருப்பவர்.

“நான் சிங்கள இனத்தவன். பொதுவா நான் மூன்று நேரமும் சோறுதான் சாப்பிடுறனான். ஆனால் கிளிநொச்சிக்கு வந்த பிறகு, தமிழர்களின் பாரம்பரிய உணவான புட்டு சாப்பிடப் பழகிட்டன். அதுவும் இந்த மரக்கறிப் புட்டு ரொம்பவே சுவையா இருக்கிறதால ஒவ்வொரு நாளும் காலையில புட்டை விரும்பிச் சாப்பிடுறன். ஏன் சில நேரங்களில ஊருக்குப் போகும்போதுகூட பார்சல் கட்டி எடுத்துட்டுப் போறனான்” என்று சிரிக்கிறார் எம்.என். சமந்த. குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கிளிநொச்சியில் பணிபுரிகிறார்.

கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்களம் அமைத்துக்கொடுத்துள்ள இந்த அம்மாச்சி உணவகத்தில், தரமான உணவு வழங்கப்படுவது போலவே, உணவகத்தின்; உள்ளேயும் வெளியேயும் சுகாதாரம் பேணப்படுகிறது. இதனால், பணி நிமித்தம் தங்கியிருப்பவர்கள் மட்டுமின்றி, கிளிநொச்சியில் வசிக்கின்றவர்கள், அந்த சாலை வழியாகப் பயணம் செய்பவர்கள் என அனைத்து தரப்பினரும் அம்மாச்சி உணவகத்தின் வாடிக்கையாளர்களாக மாறியுள்ளனர் என்பது கண்கூடே தெரிந்தது. வாடிக்கையாளர்கள் குவிந்துவருவதால், தர்சிகாவைப் போல் மேலும் பல பெண்கள் பம்பரமாகச் சுழன்று பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள்; இவர்கள். அங்கு 6,160 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளதாக, யாழ்ப்பாணம் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களைப் போன்று, குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களில், கணவர் விவசாயம் செய்ய, அந்த விவசாயப் பொருட்களை வைத்து உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ளனர் சில பெண்கள். முன்பெல்லாம் வீடுகளில் சுமாராக சமைக்கத் தெரிந்த இந்தப் பெண்கள், இங்கு தமது உச்சபட்ச திறமையைக் காட்டி அசத்தி வருகின்றனர்.

பழச்சாறு தயாரிக்கும் இந்திரகுமாரி
பழச்சாறு தயாரிக்கும் இந்திரகுமாரி

பரந்தன் என்ற இடத்தில் வசிக்கும் 42 வயதான முருகையா இந்திரகுமாரி இங்கு பழச்சாறு விற்பனையில் ஈடுபட்டுள்ளார். “விளாம்பழம், பப்பாளி, தோடை, எலுமிச்சை – இதெல்லாம் எங்கட தோட்டத்தில விளையுறதால, கடையில பழங்கள் வாங்கத் தேவையில்லை. இதன் மூலமா ஒவ்வொரு நாளும்; 2 ஆயிரம் ரூபாய்வரை சம்பாதிக்கிறன், என்றாலும், மழை காலத்தில 400 ரூபாய்க்கு கூட விற்பனை நடக்கிறேல்ல” என்று மகிழ்ச்சியையும் ஆதங்கத்தையும் ஒருசேர வெளிப்படுத்துகிறார்  முருகையா இந்திரகுமாரி.

இலங்கையில் செயற்கை குளிர்பானங்களால் சிறுநீரக நோயாளிகள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பாக நகரங்களில் 23 வீதத்தினர் இந்நோயால் பாதிக்கப்ட்டுள்ளதாகவும் இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றா நோய்ப்பிரிவு அறிக்கை தெரிவிக்கிறது. அதேவேளையில் கிராமங்களில் இயற்கையான பழச்சாறுகளை உட்கொள்ள முடிவதால் சிறுநீரக நோயின் தாக்கம் மிகக் குறைந்த நிலையிலேயே உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“என்ர கணவர் எப்பவும் பழத்தோட்டம் தான் செய்யிறவர். முந்தி நாங்கள் பழங்களை சந்தைக்குக் குடுக்கிறனாங்கள். குறைஞ்ச விலைக்குத் தான் எடுப்பினம். ஆனால், இப்ப நாங்கள் வெளியில விக்கிறேல்ல. இங்க பழச்சாறு செய்யுறதுக்கு பயன்படுத்துறம். சில நேரங்களில அதிகபட்சமாக 60 கிலோ பப்பாளிப்பழம் கூட ஒரு நாளைக்கு தேவைப்படும். இதனால் சந்தையில பழங்களின்ட விலை கூடினாலும், என்ர வருமானத்தை அது பெரிசா பாதிக்கிறதில்லை என்றும் விளக்குகிறார் முருகையா இந்திரகுமாரி.

“40 வயசுக்குப் பிறகு சீனிவருத்தம் வருமோ எண்ட பயம் இருக்கு. அதனால நான் அப்பப்ப வந்து சீனி இல்லாம பப்பாளிச்சாறு கேட்டு வாங்கி குடிக்கிறன்” என்கிறார் துணிக்கடை ஒன்றில் பணிபுரியும் பெருமாள் சாந்தினி.

“கொழும்பில 250 ரூபாக்கு விக்கிற பழச்சாறு இங்க வெறும் 40 ரூபாய் தான். இதால ஒவ்வொரு நாளும் சந்தோசமா ரெண்டு தரம் பழச்சாறு குடிக்கிறன்” என்கிறார் குருநாகலைச் சேர்ந்த சதுர நுவான். இவர் கிளிநொச்சியில் உள்ள ‘சதோச’ வர்த்தக நிறுவனத்தில் முகாமையாளராகப் பணிபுரிகிறார்.

சதுர நுவானுடன் ரஞ்சித்
சதுர நுவானுடன் ரஞ்சித்

தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் பற்றி, அம்மாச்சி உணவகத்தின் நிரந்தர வாடிக்கையாளர்களாக மாறிவிட்ட சதுர நுவான் மற்றும் வி.ரஞ்சித் ஆகியோர் சிலாகித்துப் பேசினர். “முட்டை ஊத்திச் சுட்ட அப்பத்த, கட்ட சம்பலோட சாப்பிட்ட எங்களுக்கு, இங்க பால் அப்பத்தைக் கண்டதும் முதல்ல அருவருப்பா இருந்தது. ஒருநாள் அதை வாங்கி சாப்பிட்டுப் பாத்தம். இப்ப ஒவ்வொரு நாளும் பின்னேரத்தில பால் அப்பம் சாப்பிடேல்ல எண்டா எதையோ மிஸ் பண்ணின மாதிரி இருக்கு” என்று கூறிச் சிரிக்கின்றனர்.

‘த கட்டுமரம்’ இணைய தளத்திற்காக கதை தேடி வந்த நாமும்; அப்பத்தை ருசிக்கத் துவங்கினோம். அப்போது மழை லேசாக தூறத் தொடங்கியது. மழைக்கு ஒதுங்கியவர்கள், குளிரை சமாளிக்க சூடான உணவு தேடி வந்தவர்கள் என அந்த உணவகம் திடீரென மக்கள் கூட்டத்தால் நிறைந்தது. அதிலும் அப்பம் வாங்குவதற்கு பலர் முண்டியடித்தனர். வாடிக்கையாளர்களை சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார் அப்பம் சுடுவதில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த சத்தியராஜ் இந்திராணி.

Inthirani
சத்தியராஜ் இந்திராணி.

குருணாகல் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக கிளிநொச்சி, பாரதிபுரத்தில் வசிக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவரை கடந்த 1992-ஆம் ஆண்டு திருமணம் செய்தவர், குடும்ப தகராறு காரணமாக 2000-ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டார். மறுமணம் செய்ய விருப்பமின்றி, 2 குழந்தைகளையும் வளர்ப்பதற்காக கடந்த 15 வருடங்களாக கூலி வேலை செய்து சிரமப்பட்டுவந்த இந்த இவர், தற்போது அம்மாச்சி உணவகத்தில் பணிபுரிகிறார்.


“எட்டு மணித்தியாலம் வெயில்லயும் மழையிலயும் நின்று கூலி வேலை செய்தால் 500 ரூபாய் தான் வருமானம் கிடைக்கும். ஆனால் இங்க….”

“எட்டு மணித்தியாலம் வெயில்லயும் மழையிலயும் நின்று கூலி வேலை செய்தால் 500 ரூபாய் தான் வருமானம் கிடைக்கும். ஆனால் இங்க 6 மணித்தியால வேலை. அதுவும் நிழல்ல இருந்து நிம்மதியா வேலை செய்யுறன். 700 முதல் 800 ரூபாய் வரை சம்பாதிக்க முடியுறதால பிள்ளைகளின்ட படிப்புக்கு இந்த வேலை பெரிய உதவியா இருக்கு” என்று தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

அப்பத்திற்கு அருகிலேயே, குரக்கன் கூழ், இலைக்கஞ்சி, கீரை வடை, இடியப்பம் என விற்பனை சூடு பிடித்துக்கொண்டிருக்கிறது. ஒரே கூரையின் கீழ் தாம் விரும்பிய உணவை மக்கள் தெரிவு செய்து ருசிப்பதற்கான வாய்ப்பினை வழங்கிக்கொண்டிருக்கும் இந்தப் பெண்கள், சமூகத்தில் தங்களின் இருப்பை மேலும் ஆழமாக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று உணர முடிந்தது.

வீட்டில் அரை குறையாக சமைத்துக்கொண்டிருந்த இந்தப் பெண்கள், சமையலை தொழிலாக ஏற்று வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தரமான உணவுகளைத் தயாரிப்பதற்கு எவ்வாறு முன்வந்தார்கள்? அவர்களுக்கு ஊக்கியாக இருந்து இயக்குபவர்கள் யார்?? இதற்குப் பதில் அளித்தார் கிளிநொச்சி மாவட்ட பண்ணைப் பெண்கள் விவசாய விரிவாக்க உத்தியோகத்தரான கிருபாகரன் சுதர்சினி.

Sutharshini
பண்ணைப் பெண்கள் விவசாய விரிவாக்க உத்தியோகத்தரான கிருபாகரன் சுதர்சினி.

“பண்ணைப் பெண்கள் விவசாய விரிவாக்க அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பெண்கள் இவர்கள். சமையலில் எவ்வளவு கைதேர்ந்தவர்களாக இருந்தாலும், இரண்டு மாத காலம் பயிற்சி வழங்கிய பின்னரே அம்மாச்சி உணவகத்தில் அவர்களை பணிபுரிய அனுமதித்திருக்கிறோம்;” என்றார்.

இங்கு உணவு தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை அவர்களே கொண்டுவரவேண்டும். குளிர்சாதனப் பெட்டி, எரிவாயு அடுப்பு, மிக்சி, கிரைன்டர் உள்ளிட்ட உபகரணங்கள் விவசாயத் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளன. எரிவாயு முடிந்துபோனால், அவர்களே நிரப்பிக்கொள்ளவேண்டும். உபகரணங்கள் உடைந்தால் திருத்தம் செய்வது, உணவகத்தை சுத்தமாக வைத்திருப்பது உள்ளிட்ட பராமரிப்புச் செலவுகளுக்கென, தினமும் ஒவ்வொருவரும் 150 ரூபாய் செலுத்தவேண்டும். உணவின் தரம் மற்றும் உணவகத்தின் சுத்தம் ஆகியவை சரியாக உள்ளதா என்பதை பண்ணைப் பெண்கள் விவசாய விரிவாக்க அதிகாரிகள் அடிக்கடி பரிசோதிக்கிறார்கள்.

“பொம்பிளையள் வீட்டில இருந்த தொழில் செய்யிறமாதிரிதான் அனேகமான திட்டங்கள் இருக்கு. ஆனா அதில வருமானம் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் எண்டு சொல்ல ஏலாது. எங்கட வீட்டுக்கு கிட்ட பத்து பேரிட்ட தையல் மெசின் இருந்தா நாங்க ஆருக்கு உடுப்பு தைக்கிறது? தொகையா விக்கிறதுக்கும் எங்களுக்கு எந்த ஒழுங்கும் தெரியாது. ஆனால், அம்மாச்சி உணவகத்தில எங்கட முதலைப் போடுறம். லாபத்தையும் நாங்களே எடுக்கிறம். நடு டவுனில இருக்கிறதால நிச்சயம் தினமும் வருமானம் இருக்கும் என்ற நம்பிக்கை, எங்கட வாழ்க்கைக்கும் புது தைரியத்தை தந்திருக்கு” என்று ஒருசேர தெரிவிக்கிறார்கள் அங்கு பணியாற்றும் அனைத்துப் பெண்களும்!

இவர்களின் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில், இலங்கை மத்திய அரசாங்கத்தின் விவசாயம் மற்றும் கால்நடைகள் அமைச்சினால் இந்தத் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, வடக்கில் அம்மாச்சி உணவகம் என்றும்; தெற்கில் ஹெல போஜன் ஹல் என்றும் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.