Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

முற்போக்கு எழுத்தாளர் நீர்வை பொன்னையன்.
“இனவெறி தெற்கைப் போலவே வடக்கிலும், கடும்போக்கைக் கொண்டிருந்தது!”

விருதுக்காக எழுதுகிறார்கள். அது கிடைப்பதற்காக, புறக்கதவு வழியாகச் செல்கிறார்கள். கிடைத்ததும் காணாமல் போய்விடுகிறார்கள்.

21.10.2018  |  
கொழும்பு மாவட்டம்

ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வெகுண்டெழுந்த இளைஞனாக, தன்னை பொதுவுடமை கட்சிக்குள் இணைத்துக்கொண்டவர் நீர்வை பொன்னையன். தான் கொண்ட கொள்கையை எந்தவொரு சந்தர்ப்பமும் மாற்றிவிடாது என்பதில் இன்றுவரை உறுதியாக இருப்பவர். வேலை-தொழில்தான் இளைய சமுதாயத்தை என்றும் துடிப்புடன் வாழச் செய்யும், இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என்று பலமாக நம்பி இன்னமும் செயல்படுகிறார். 88கடந்த வயது வெறும் கணக்குக்காகவே தவிர, அவருடைய செயற்பாடுகளுக்கு அல்ல எனும்படி வாழ்ந்துவருகிறார். கலையும் இலக்கியமும் கூட பல்லின மக்களிடையிலான உறவுக்கு பெரும் பாலமாக அமையும் என்பதாலும் தனது இயக்கத்தின் சார்பில், மாணவர் நலன் கருதி, சில பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டவர், சிறுகதை கட்டுரை,பிறநாட்டு சிறுவர் கதைகள் உட்பட, சுயசரிதம் உள்ளிட்ட பல படைப்புகளை எழுதி வெளியிட்டவர். இவை அனைத்தும் கொம்யூனிசத்தைத் தாண்டி வேறு சிந்திக்கத் தெரியாதவர் என்றே அவரை அடையாளம் காட்டியிருக்கின்றன. கடந்த ஆண்டு ‘சாகித்திய ரத்னா’ விருது பெற்ற அவரை சந்தித்தபோது நடைபெற்ற உரையாடலின் ஒரு பகுதி இது.

இலங்கை ஜனாதிபதியிடம் இருந்து விருது பெறும் நீர்வை
தகட்டுமரன்: ஒரு பொதுவுடமைவாதியாக, இதுவரை நீங்கள்
எதையெல்லாம் எட்டியிருப்பதாக திருப்தியடைகிறீர்கள்?

முழுமையாக இல்லையென்றாலும் பொதுவுடமைவாதிகள் நடத்திய தொடர் போராட்டங்கள் இலங்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஒடுக்குமுறையும் சாதி பேதமும் தம்வீரியத்தை இழந்துள்ளன. தொழிலாளர் நல உரிமைகள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. சுரண்டும் வீதம் குறைந்திருக்கிறது. விவசாயிகள் நலன் பேணப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படை மாற்றங்கள் அனைவருக்கும் நன்மையளிப்பவையே.

தகட்டுமரன்: ஆனாலும், ‘இலங்கையில் பொதுவுடமை’ இதுவரை வெற்றிபெறவில்லையே!?

எந்தக் கோட்பாடும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதல்லவே. பொதுவுடமைக் கட்சிக்குள் இதுவரை ஏற்பட்ட பல்வேறு பிளவுகளை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் இதைக் கேட்கக்கூடும். ஆனால், அதன் வளர்ச்சி கண்கூடாகத் தெரியாமல் இருக்கிறது. கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு வேறு கட்சிகள் தோற்றம் பெற்றாலும் அவர்களும் பொதுவுடமை கொள்கையையே கொண்டிருக்கிறார்கள். இதனை வைத்துப் பார்த்தால் பொதுவுடமை கொள்கை வெற்றியடைந்திருக்கிறது. அதன் தோற்றநோக்கம் பின்னடைவை சந்திக்கவேயில்லை என்பதே உண்மை. எதிர்காலத்தில் இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே பொதுவுடமைவாதம்தான் பரவும் என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விட்டதை அவதானிக்கிறேன்.

தகட்டுமரன்: அது குறித்து சற்று விரிவாகக் கூறுங்கள்.

பொதுவுடமை நாடுகளில் இது குறித்து இன்னமும் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பொதுவுடமைவாதக் கல்வியில் இளைஞர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகிறார்கள். இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பொதுவடமைக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகள் அல்லது உடைவுகளுக்கான காரணங்களையும்கூட பாடமாகக் கற்றுக்கொண்டு அவர்கள் சிறந்த தலைவர்களாக உருவாவார்கள்.

தகட்டுமரன்:சரி உங்கள் எதிர்பார்ப்பு அல்லது நம்பிக்கையுடன் உடன்பட்டுக் கேட்கிறேன்… இனஇ மத பேதம் கடந்துஇ பொதுவுடமையின்;பால் இளைஞர்களை விரைந்து ஈடுபடுத்தஇ யார் என்ன செய்தால் தகும்?

சாத்தியமான ஒவ்வொரு நபரும் உழைப்பில் ஈடுபடத் தயாராகவேண்டும். இதற்கு ஸ்தாபன ரீதியாக மக்கள் திரட்டப்படவேண்டும். அவர்கள் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும். சாத்தியமான ஒவ்வொரு மனிதனும் உழைப்பதில் கவனம் செலுத்தினால் உருப்படியான எண்ணங்கள்தான் தோன்றும். இன மத பேதம் உள்ளிட்ட முரண்பாடான சிந்தனை தோன்றாது. அவ்வாறு ஓன்றுபடும் சமூகத்தினால் பெறக்கூடிய இந்த பொருளாதார வளர்ச்சி சமூகத்தையும் நாட்டையும் விரைந்து முன்னேற்றும். அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி அனைவரையும் உந்திச் செல்லும். வேலைவாய்ப்பு பெருகும். எனவே மனித மனங்களை செம்மைப்படுத்த தொழில்தான் மிகச்சிறந்த ஊக்கி என்பதை ஆள்பவர்களும் ஆளப்படுபவர்களும் ஒருசேர மனதில் கொண்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.

தகட்டுமரன்: இலங்கையில் ‘விபவி’ மாற்று கலாச்சார மையத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளீர்கள். இந்த அமைப்பு ஏன் தொடங்கப்பட்டது? அது அதன் இலக்கை எட்டுவதற்குள் ஏன் மூடப்பட்டது?

தமிழ் சிங்கள இலக்கியவாதிகளை ஒன்றிணைத்து இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் மூலம் ‘இலக்கியம் சமூகத்திற்காகவே’ என்பதை அழுத்தி உரைத்தோம். முதல்படியாக தமிழ் சிங்கள பாடசாலை மாணவர்களுக்கு கலை இலக்கியப் பயிற்சி அளித்தோம். அவர்களின் படைப்புகளை சமூகம் இலகுவில் புரிந்துகொள்ளவேண்டும் பேதம் களைந்து அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும். என்பதில் கவனமாக இருந்தோம். குறிப்பாக பின்தங்கிய மாவட்ட மாணவர்கள் மீதே அதிக கவனம் செலுத்தினோம். அதில் வடக்கு கிழக்கு தவிர்ந்த பிற மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் பங்குபற்றி பயன்பெற்றனர். ‘விபவி’ என்ற பெயரில் ஒரு இலக்கிய மடலையும்கூட நடத்தினோம். ஆனாலும் நிதி உள்ளிட்ட சில பிரச்சினைகளால் விபவியின் இயக்கம் 1997 இல் முற்றாக நின்றுபோனது.

தகட்டுமரன்:உங்கள் நோக்கில் பார்த்தால்இ விபவி தொடர்ந்து இயங்கியிருந்தால்இ மூவின இளைஞர்களுக்கும்இ அவர்கள் மூலம் சமூகங்களுக்கும் இடையே ஓரளவேனும் நல்லிணக்கம் ஏற்பட்டிருக்குமோ?

நிச்சயமாக. இன முரண்பாடுகளை இலக்கியத்தின் வழிநின்று தீர்ப்பதே விபவியின் முதல் நோக்கமாக இருந்தது. ஏனென்றால் இனவெறி தெற்கைப் போலவே வடக்கிலும் கடும்போக்கைக் கொண்டிருந்தது. இதை யாராலும் மறுக்கமுடியாது. இனங்களுக்கிடையிலான பரஸ்பர புரிதலுக்கு கலை இலக்கியங்கள் வழிவகுக்கும் என்பது யதார்த்தம். ஆனால் அப்படியொரு புரிதல் ஏற்படக்கூடாது என்பதற்காகவே ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் கலையோ இலக்கியமோ கட்டாய பாடம் ஆக்கப்படவில்லை. இது அவருடைய திட்டமிடல். மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் உலகளவில் ஏற்படுத்திய மாற்றத்தை அறிவீர்கள். இளைஞர்களை எது நோக்கியும் இலகுவாக திசை திருப்ப முடியும். ஆனால் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் யாரும் அனைவருக்கும் பொதுவான நலன் கருதி இளைஞர்களை இயக்குவதில்லை. இனம் அல்லது மதம் சார்ந்துதான் இளைஞர்கள் இயக்கப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் துர்லபமானவை. இந்த நிலை மாறினாலே எல்லாம் சரியாகிவிடும்.

தகட்டுமரன்: பொதுவுடமையைத் தாண்டி உங்களால் இலக்கியம் எழுதமுடியாது என்கிற விமர்சனத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?

இது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையும் நேர்மையுமான இந்தக் கருத்தை உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். நான் தேர்ந்தெடுத்த பாதையிலிருந்து இன்னமும் விலகாமல் செல்கிறேன் என்பதற்கான அங்கீகாரமல்லவா இது.

தகட்டுமரன்: ஈழத்தில் சமகால படைப்பாளிகளுடைய எழுத்துக்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

விருதுக்காக எழுதுகிறார்கள். அது கிடைப்பதற்காக, புறக்கதவு வழியாகச் செல்கிறார்கள். கிடைத்ததும் காணாமல் போய்விடுகிறார்கள். கவிதை கட்டுரை சிறுகதைஇ நாவல் என்று அனைத்துப் பிரிவிலும் ஒருவர் தொடர்ந்து சாகித்திய விருது பெற்றார். அதன் பிறகு அவரைக் காணவில்லை. தற்போது எழுதிக்கொண்டிருக்கிற பெரும்பாலான இளைஞர்களுக்கும் கூட விருதே நோக்கம். சமூக அக்கறையுடன் யாரும் எழுதுவதாக எனக்குத் தெரியவில்லை.

தகட்டுமரன்: விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தவர் நீங்கள். உங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டபோது அதை எதிர்க்காமல் பெற்றுக்கொண்டீர்களே.?

நான் இந்த விருதுக்காக விண்ணப்பிக்கவில்லை. விருதுத் தெரிவுக்குழுவில் இருந்தவர்கள் யார் என்பதையும் அங்கீகரித்தவர்கள் யார் என்பதையும் அறிந்துகொண்ட பின்னர்தான் இந்த விருதினைப் பெறத் தீர்மானித்தேன். அந்தக் குழுவில் சிங்கள தமிழ் முஸ்லிம் புத்திஜீவிகள் பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி சாமானிய வாசகர்களும் இருந்திருக்கிறார்கள்.

தகட்டுமரன்: ஈழத்தில் பொதுவுடமை முற்போக்கு என இரண்டு தளங்களிலும் ஒருசேரப் பயணித்த இலக்கியகாரர்களுடனும் நீங்கள் சுமுகமான நட்புறவைக் கொண்டிருக்கவில்லை. இதுபற்றி ‘நினைவுகள் அழிவதில்லை’ என்ற உங்கள் நூலில் நீங்களே குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது குறித்து… ?

ஈழத்து இலக்கியவாதிகளில் பலர் பொதுவுடமைக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டே இலக்கியம் படைக்கத்தொடங்கியவர்கள். ஆனால் பின்னாளில் அவர்களில் பலர் அதிகாரத்தின் பின்னாலும் பணம் புகழின் பின்னாலும் சென்றதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இவ்வாறானவர்களுடன் ஒருபோதும் என்னால் உடன்படமுடியாது.

தகட்டுமரன்: அதிகாரமும் பணமும் இல்லாமல் இலக்கியத்தை மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் இடர்ப்பாடுகள் உள்ளது வெளிப்படைதானே.

பணத்திற்கு விலைபோகிறவர்களாலும் அதிகார அடிமைகளாலும் சமூக நலன்கொண்ட இலக்கியத்தை எழுத்தை மக்களிடம் கொண்டுசேர்க்க முடியாது.

தகட்டுமரன்: நீங்கள் கடவுள் மறுப்பு கொள்கையாளனா? பொதுவுடமைவாதிக்கு மத ஈடுபாடு இருக்கக்கூடாது என்றா கருதுகிறீர்கள்?

நான் கடவுளை மறுக்கவில்லை. பொதுவுடமையாளனுக்கு பக்தி இருக்கக்கூடாது என்றும் கருதவில்லை. பொதுவுடமை ஒரு கோட்பாடு என்பது போல் மதமும் ஒரு கோட்பாடே. ஒருவர் இரண்டு கோட்பாடுகளைப் பின்பற்றக்கூடாது என்பது எங்கும் விதிப்பல்ல. ஆனால் எனக்கு மதம் ஒரு அதிகார கட்டமைப்புடன் செயல்படும்போதுதான் பிரச்சினை எழுகிறது. அதனால் மதமோ அல்லது அதுசார்ந்த கடவுள் வழிபாடோ குறித்து எனக்கு அக்கறையில்லை. அவ்வளவுதான்.

தகட்டுமரன்: இந்துசமயம் ஆழ வேரூன்றித் தளைத்த வடக்குப் பகுதியில் பிறந்து வளர்ந்து மிக நீண்ட காலமாக அங்கேயே வாழ்ந்தவர் நீங்கள். இந்த ‘அக்கறையின்மை’க்கு ஏதாவது காரணம் அல்லது சம்பவம் பின்புலமாக இருக்கிறதா?

மதம் தன்னிச்சையாக அன்றி அதிகார கட்டமைப்புடன் செயற்படும்போது முரண்பாடு ஏற்பட்டேயாகும். சிறு வயதில் கோயிலுக்குச் சென்றுவந்தவன்தான் நான். அறிவு தெளிந்த பராயத்தில் கோயிலில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளைக் கண்டு கொதிப்படைந்தேன். சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அது மனுதர்மமோ மனுநீதியோ அல்ல என்பதை உணர மறுத்த பூசாரிகள் ஐயர்மார் மற்றும் கோயில் முதலாளிகளை வெறுத்தேன். இதைவிட முக்கியமாக எனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்கள் பிராமணர்கள் மீது பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது. இதனால் கோயிலுக்குப் போவதை அறவே தவிர்த்தேன். இன்றுவரைகூட மத வழிபாட்டிடங்களில் ஐயர் மற்றும் பூசாரிகளால் பேதம் தானே பாராட்டப்பட்டு வருகிறது.

தகட்டுமரன்: நீங்கள் குற்றம் சாட்டியவர்கள் அனைவரும் மத வழிகாட்டிகளே அன்றி மத ஸ்தாபகர்கள் அல்ல. அவர்களுடைய நடவடிக்கைகள் தவறு என்பதற்காக மனித மேம்பாட்டுக்காக உயர்ந்த கருத்துக்களைக் கொண்டிருக்கிற இந்து மதத்தை ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ளுவது சரிதானா?

அக்கறையின்மை புறந்தள்ளுவது ஆகாது. நான் பிறந்து வளர்ந்த மதம் பற்றிஇ சிந்திக்க மறுக்கிறேன் அல்லது தேவையில்லை என்று விடுக்கிறேன். அறிவு தெளிந்து நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட பொதுவுடமைக் கொள்கைக்காகவே என் முழு நேரத்தையும் ஒதுக்கவிரும்புகிறேன். ஆனாலும் மத வழிபாட்டாளர்கள் என் மதிப்புக்கு உரியவர்கள். அவர்களை நானும் என்னை அவர்களும் ஒருபோதும் தொந்தரவு செய்வதில்லை.

தகட்டுமரன்:சரி அக்கறையில்லை அல்லது தேவையில்லை என்று நினைக்கிற ஒன்றைப் பற்றி கருதுகோள் கொண்டிருப்பது தவறா என்ன? நான் கேட்பதுஇ மதம் குறித்து நீங்கள் கொண்டிருக்கிற ஆணித்தரமான கருத்தை.

ஒவ்வொரு கோட்பாடும் அங்கீகாரம் பெற்றதுதான். எதை யார் வேண்டுமானாலும் ஏற்றுக்கொண்டு பின்பற்ற முடியும். இந்துமதம் என்றில்லை எல்லா மதங்களும் மனித மேம்பாட்டுக்கான கருத்துக்களையே கொண்டிருக்கின்றன. ஆனால் அதைக் கையில் எடுத்துக்கொள்கிற வழிகாட்டிகள் ஒருபோதும் அதன்பால் செயல்பட்டதில்லை. அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பக்தனுக்கு உரிய முறையில் இவர்கள் வழிகாட்டியதில்லை. இந்த மதவாதிகளால் சமூகத்தில் படுமோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. வன்முறைகள் வெடித்திருக்கின்றன. இலங்கையில் பௌத்த மதம் என்ன செய்கிறது? சுதந்திரத்திற்கு முன்பு கிறிஸ்தவம் என்ன செய்தது? இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். என்ன செய்துகொண்டிருக்கிறது? உலகளவில் இஸ்லாம் மதத்தால் இஸ்லாமியர்கள் நிம்மதியாகவா இருக்கிறார்கள்? மதவாதிகளால் நன்மையை விட தீமையும் பேரழிவும்தான் ஏற்பட்டது ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். இந்த இடைத் தரகர்களைப் புறந்தள்ளி மதக் கருத்துக்களை சுயமாக உள்வாங்கும் ஆற்றல் பெற்றீர்களானால் மன அமைதி கிட்டும்.

தகட்டுமரன்: இதை அனுபவ ரீதியாக உணர்ந்தா கூறுகிறீர்கள்?

நிச்சயமாக. திருவாசகத்தை அடிக்கடி விரும்பிப் படிக்கிறேன். திருமந்திரம் மற்றும் திருப்புகழும் எனக்கு மனநிறைவைத் தருகின்றன. திருக்குறளில் சொல்லப்படாத ஏதாவதொரு விடயம் நம் வாழ்க்கையில் இருக்கிறதா என்ன?

தகட்டுமரன்:ஆக, மதவாதிகள் மற்றும் மத வழிகாட்டிகளின்மீது வெறுப்படைந்த நீங்கள் ஒடுக்கப்பட்ட மக்களைக் காக்கத்தான் பொதுவுடமைக்குள் விரைந்து நுழைந்தீர்கள் என்று கொள்ளலாமா?

நிச்சயமாக. கண்ணுக்கு முன்னால் நடைபெற்றுக்கொண்டிருந்த ஒடுக்குமுறைகளையும் பாரபட்சங்களையும் களையவே என்னை பொதுவுடமைக்குள் ஈடுபடுத்திக்கொண்டேன். அதுவே எனக்கு முழுநிறைவைத் தந்தது. தந்துகொண்டும் இருக்கிறது.