சட்ட அனுமதி இல்லை
இந்தியாவின் செல்லாக் காசு இலங்கையில் !?
“ஒரு கும்பல் 50 சதவீத கமிஷனுடன் இந்தியப் பணத்தை மாற்றிக் கொடுக்கிறார்கள், வந்தது வரைக்கும் லாபம் என்று மக்களும் அதற்கு உடன்பட்டு மாற்றிக்கொள்கிறார்கள்”
இந்திய நிலைமை
இந்தியாவின் பொருளாதார வரலாற்றில், அந்நாட்டின் கறுப்பு பண முதலைகள் தூக்கம் தொலைத்த நாள் – 8 நவம்பர் 2016! ஏனெனில், “இன்று நள்ளிரவு 12 மணிமுதல் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படும்” என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அன்றுதான் அறிவித்தார். இவ்வாறு, ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது இந்தியாவில் ஒன்றும் முதல் முறையாக நிகழ்ந்துவிடவில்லை. ஏற்கனவே பலமுறை இடம்பெற்றுவிட்டது. சுமார் 16 வருடங்கள் இந்தியாவின் சாதாரண குடிமக்கள் கைகளில் புழங்கியும், கறுப்புப் பண முதலைகளின் அகழிகளில் பதுங்கியும் கிடந்த 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளுக்கு தற்போது வேட்டு வைத்துள்ளது நரேந்திர மோடி அரசு!
/
இதனால் இந்திய மக்களின் கையிருப்பில் எவ்வளவு பணம் வைத்திருப்பினும் அவற்றை நிலையான அல்லது சேமிப்பு கணக்கில் வைப்பு செய்யலாம். ஆனால் நிலையான வைப்பில் 2.5 லட்சத்திற்கு அதிகமானால், அதற்கான வரியுடன் அந்த வரியின் 200 சதவீதத்தையும் சேர்த்து தண்டமாக செலுத்தியாக வேண்டும். சேமிப்பு வைப்பில் இட்டால், நாளொன்றுக்கு4,500ரூபாய் மட்டுமே மீளப் பெறமுடியும். ஏடிஎம் இயந்திரம் மூலம், நாளொன்றுக்கு 2,500 ரூபாய் எடுத்துக்கொள்ளலாம். நடைமுறைக் கணக்கு வைத்திருப்பவர்கள் நாளாந்தம் 10,000 ரூபாயும் வாரத்தில் 50,000ரூபாயும் மீளப் பெறலாம் என்பன போன்ற நிபந்தனைகளுடன் இந்த பண வாபஸ் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இது, கறுப்புப் பணக்காரர்களுக்குஎதிரான சரமாரி தாக்குதல் நடவடிக்கை என்று கருதப்பட்டாலும், இதனால் அடித்தட்டு மக்களின் இயல்பு வாழ்க்கைதான் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு முன்பாக நீண்ட வரிசையில் பலமணி நேரம் மக்கள் காத்து நிற்கின்றனர். இதனால் இரவு பகலாக தெருக்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. டெல்லியில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றம் அமைந்துள்ள வீதியில் உள்ள அரசாங்க வங்கியொன்றின் முன்பாக மக்களோடு மக்களாக நின்று 4,000 ரூபாயை மாற்றிச் சென்றுள்ளார். சாமான்ய மக்களின் துயரம் இன்னதென்று அறிந்து கொள்வதற்காக தானும் வரிசையில் நின்றதாக அவர் பத்திரிகைக்காரர்களுக்கு பேட்டியளித்தார்.
குறைந்த விலையில் அன்றாடம் வாங்கவேண்டிய பால், மரக்கறி உள்ளிட்ட பொருட்களைக்கூட மக்கள் வாங்க முடியாத அளவுக்கு பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சிறிய மற்றும் பெரிய வர்த்தக நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. பேருந்து மற்றும் ரயிலில் பயணம் செய்ய சில்லறையின்றி மக்கள் தவிக்கின்றனர்.
அதேநேரம், ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறுவதற்கான அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, நாட்டின் பல இடங்களிலும் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள் தீயிட்டு எரிக்கப்பட்டதும் குப்பைத் தொட்டிகளிலும் கூவம் ஆறு உள்ளிட்டநீர் நிலைகளிலும் கூட பணநோட்டுகள் தாராளமாக அள்ளி வீசப்பட்டதும் செய்திகளாக வந்துள்ளன.
இந்தியாவில் நிலைமை இவ்வாறிருக்க, இந்தசெல்லாக் காசுஅறிவிப்பு, இலங்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
இலங்கை நிலைமை“இந்தியாவில் அறிவிப்பு வெளியான நவம்பர் 8-ஆம் தேதியில் இருந்து ஒவ்வொரு நாளும் குறைந்தது 50 பேர் இந்தியப் பணத்தை மாற்றிக்கொள்வதற்காக இங்கு வந்துஏமாற்றத்துடனும் சோகத்துடனும் திரும்பிச் செல்கின்றனர். ஏனென்றால் இந்தியா, நேபாளம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சாக் நாடுகளின் கரன்சி நோட்டுகளை பரிமாற்றம் செய்துகொள்வதற்கு, இலங்கை மத்திய வங்கி எங்களுக்கு அதிகாரம் வழங்கவில்லை என்பதால், அவர்களுக்கு எந்த விதத்திலும் எங்களால் உதவ முடியவில்லை” என்கிறார் பெயர் குறிப்பிடவிரும்பாத, கொழும்பில் உள்ள பணப்பரிமாற்று நிலைய பொறுப்பாளர் ஒருவர்.
அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே, “இந்திய ரூபாய் மாற்றுவீர்களா” என்று கேட்டு வந்த இளைஞர் ஒருவரது கையில் 30,000 ரூபாய் இருந்தது. நிலையப் பொறுப்பாளரோ, இங்கு அந்தப் பணமே மாற்றுவதில்லை என்ற ரீதியில் தலையாட்டினார். நிலையத்திற்கு வெளியில் வந்து அந்த இளைஞனைச் சந்தித்தபோது, “முன்பெல்லாம் இவர்கள் இந்திய பணத்தை மாற்றித் தந்தார்கள். இப்போது தாங்கள் மாற்றுவதே இல்லை என்ற ரீதியில் தலையசைக்கிறார்களே” என்றார். அவரிடம் அவ்வளவு பணம் எப்படி உங்களிடம் வந்தது எனக் கேட்டபோது, தான் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணிபுரிவதாகவும், தங்கள் நிறுவனம் சார்பில், இந்தியாவில் நடைபெறும் மாநாடுகளுக்கு சக பணியாளர்கள் சென்றுவரும்போது மீதமான பணம் அதுவென்றும் கூறிச் சென்றார்.
“என்னிடம் 2 லட்சம் பெறுமதியான இந்தியரூபாய் நோட்டுகள் உள்ளன.”
அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த பெண்மணி ஒருவருக்கும் அதேநிலைதான். அவரைப் பின்தொடாந்து நாம் விசாரித்தபோது, “என்னிடம் 2 லட்சம் பெறுமதியான இந்தியரூபாய் நோட்டுகள் உள்ளன. இந்தியாவில் மருத்துவ செலவிற்காக நாலு நாட்களுக்கு முந்தித்தான் இந்தியப் பணமாக மாற்றினேன், இப்போது இதை மாற்றுவதற்கு முடியாதுள்ளதே”என அவர் கூறும்போதுகண்களில் கண்ணீர்.
இவ்வாறு, சாதாரண இலங்கை மக்களிடம் கணிசமானளவு இந்தியப்பணம் இருப்பது தெரிகிறது. இந்தியாவின் இந்த அறவிப்புக்கு முன், இந்தியப் பணத்தை பரிமாற்றம் செய்துவந்த இந்த நிலையங்கள், தற்போது அதை நிறுத்திக்கொண்டிருப்பதும் தெரிகிறது. இலங்கையில் பணப்பரிமாற்று நிலையங்கள் சாக் நாடுகளின் பணத்தை பரிமாற்றம் செய்ய முடியாது என்பது இலங்கை மத்திய வங்கியின் நிபந்தனையாகஉள்ளது என இன்னொரு பணப் பரிமாற்று நிறுவன முகாமையாளர் எமக்கு கூறியதுடன் தாம் இங்கு பணப்ப ரிமாற்றம் செய்யும் நாடுகளின் பட்டியலையும் ஆதாரம் காட்டினார்.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தகவலின்படி, (www.customs.gov.lk) இந்தியா, பாகிஸ்தானைத் தவிர ஏனைய நாடுகளின் பணங்களை எவ்வளவு வேண்டுமானாலும் இலங்கைக்குள் எடுத்து வரமுடியும். ஆனால் 15 ஆயிரம் அமெரிக்க டொலர் பணத்திற்குமேல் கொண்டுவரவேண்டுமெனில் அனுமதி பெறப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் சாதாரணமக்கள் மட்டுமன்றி பெரு வர்த்தகர்களும் இந்தியப் பணத்தை தம்வசம் வைத்துள்ளனர் என்று தெரிய வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் இரட்டைக் (இந்திய இலங்கை) குடியுரிமையைக் கொண்டவர்கள். அதேவேளை அடிக்கடி வர்த்தக நோக்குடன் இந்தியாவிற்கு சென்றுவரும் சிறு வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு வேலைத்ததிட்டங்களில் உள்வாகங்கப்பட்ட ஊழியர்கள் மூலமும் இந்தியப்பணம் இலங்கைக்குள் வருவது சர்வசாதாரணமாக உள்ளது.
இந்த நிலையில் இவர்கள் எப்படி இதை மாற்றிக்கொள்ளமுடியும்? “சாதாரணமாக ஒருவர் 25 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான இந்தியப் பணத்தை நாட்டுக்கு வெளியே கொண்டு செல்லமுடியாது. இங்குள்ள மக்கள் எவரேனும் அவ்வளவு பணம் வைத்திருந்தால் அந்த தாள்களை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டு சென்று மாற்றலாம்” என்று கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆனால் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் சட்டவிதிகளின்படி, இலங்கையில் இருந்து பணத்தைக் கொண்டு செல்வதற்கு அனுமதியில்லை.
இந்நிலையில் அதே பணப் பரிமாற்று நிலையத்திற்கு “உங்களிடம் இந்தியப் பணம் உள்ளதா” என ஒரு இளைஞர் கேட்டுவந்தார். அவருடைய கையில் இலங்கையின் நூறு ரூபாய் நோட்டுகள் பெருமளவிலும் 500 ரூபாய் நோட்டுகள் சிலவும் இருந்தன. “மக்கள் இந்தியப் பணத்தை மாற்றிக்கொள்ள முடியாமல் பரிதவிக்கும் நிலையில், இவருக்கு மட்டும் இந்தியப் பணத்திற்கு என்னதான் தேவை?” எங்களுக்கு எழுந்த இந்த சந்தேகத்திற்கு நாணயப் பரிமாற்று நிலைய பொறுப்பாளர் அளித்த பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. “ஒரு கும்பல் 50 சதவீத கமிஷனுடன் இந்தியப் பணத்தை மாற்றிக் கொடுக்கிறார்கள், வந்தது வரைக்கும் லாபம் என்று மக்களும் அதற்கு உடன்பட்டு மாற்றிக்கொள்கிறார்கள்” என்றார்.
“இந்தியா சென்று பொருட்களைப் பெற்றுவரும் வர்த்தகர்களின் நிலையும் பரிதாபத்திற்குரியதே! ஏனென்றால், அவர்களுக்கு இந்திய வங்கிகளில் கணக்கு இருக்காது. எனவே கையிருப்பில் உள்ள பணத்தை வைத்து என்ன செய்வதென்று தெரியாமல் கவலையடைந்துள்ளனர்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிற நாட்டு கரன்சி நோட்டுகளை கையிருப்பில் வைத்திருப்பதற்கு எந்தவொரு நாட்டின் சட்டமும் இடமளிப்பதில்லை என்று நன்கே தெரிந்த படித்தவர்களும் கூட, இலங்கையில் ஏராளமான இந்தியப் பணத்தை கையில் வைத்திருக்கின்றனர். இதுவும் ஒருவகையில் கறுப்புப் பணம் தான் என்பதால், அவற்றை இலங்கையில் சட்ட ரீதியாக தற்போது மாற்றிக்கொள்ள வாய்ப்பில்லை என்று தெரிகிறது. எனவே, பகல் கொள்ளையர்களாக செயல்படும் கமிஷன்காரர்களையே இவர்களும் நாடிச் செல்லக்கூடும்!
இந்தியாவில் பங்குச் சந்தையில் தான் அதிகளவு கறுப்புப் பணம் புரள்வதாக தெரிவித்துள்ள பொருளியல் நிபுணர்கள் நிலம் மற்றும் கட்டிடங்களை கொள்முதல் செய்வதில் பெருமளவு பணக்காரர்கள் தங்கள் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளனர் என்றும் கூறியுள்ளனர். எனவே, பண நோட்டுகளை வாபஸ் பெறுவதன் மூலம் மட்டும் கறுப்புப் பணத்தை ஒழிக்கமுடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள அவர்கள், மக்களின் சொத்துவிபரங்கள் வங்கிகள் மூலம் நிர்வகிக்கப்பட்டால் மட்டுமே கறுப்புப் பணத்தை ஒழிக்கமுடியும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.