மதம் - மொழி
மதரீதியான பிரிவினைவாதம் பாடப்புத்தகங்களில் ஆரம்பிக்கிறது.
சிங்களப் பாடசாலைக்குச் செல்லும் தமிழ் மாணவர்கள் பௌத்த சமயம் படிப்பது தவிர்க்க முடியாததாக மாறிவிடுகிறது. அதைவிட்டால், இஸ்லாம் அல்லது கிறிஸ்தவம் படிக்கவேண்டும். ஏனெனில் இவை இரண்டும் சிங்கள மொழியில் படிப்பிப்பதற்கான வாய்ப்பு உண்டு. அதாவது சிங்கள மொழிமூலத்தில் அவை எழுதப்பட்டுள்ளன. இந்துமதத்திற்கு அவ்வாறில்லை.
இலங்கையில் பேசப்படும் மொழிகள், பின்பற்றப்படும் மதங்கள் ஆகியன குறித்து அவதானித்துவரும் தர்மலிங்கம் மனோகரன், இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத் தலைவராகவும் கல்விக் குழு செயலாளராகவும் செயற்படுகிறார். தவிரவும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் உதவி செயலாளராகவும் சேவையாற்றி வருகிறார். முன்னர், இலங்கை கைத்தொழில் நீதிமன்றம், பரீட்சைத் திணைக்களம் கைத்தொழில் திணைக்களம் ஆகியவற்றில் எழுதுவினைஞராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர் இவர். தனது தாய்மொழியான தமிழும், தான் பின்பற்றும் இந்து மதமும் தன்னிரு கண்களெனக் கூறுகிறார். அவ்விரண்டும் பற்றி, தான் ஆய்ந்தறிந்த உண்மைகளைப் பதிவுசெய்து பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். அந்தப் பதிவுகளை இன,மத பேதமின்றி இன்றைய இளைய தலைமுறையினர் மட்டுமின்றி, தன்னுடைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளவேண்டும் என்பது அவரது அவா. முக்கியமாக ஒவ்வொரு மதத்தினதும் வழிகாட்டிகள், வரலாற்று உண்மைகளை மறுதலிக்காமல் ஏற்றுக்கொள்வார்களானால், முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்பது இவரது நம்பிக்கை. ஓய்வுக்குப் பின்னரும் ஓய்வாக இருக்க விரும்பாமல், ஓர் இளைராக ஓடிக்கொண்டிருக்கும் மனோகரனை கட்டுமரனுக்காக சந்தித்தோம்.
கட்டுமரன்: சமயம், மொழி ஆகிய இரண்டு பிரிவுகளிலும் சேவையாற்றுகிறீர்கள், இலங்கையில் இனமுரண்பாடுகளுக்கு மத வேறுபாடோ அல்லது மொழி பேதமோ முக்கிய காரணமாக இருக்கிறதா?த.மனோகரன் : ஆம், நிச்சயமாக இருக்கிறது. சிங்களவர்கள் தமிழர்களைப் பகைமையுணர்வோடு பார்க்கவில்லை. ஆனால் தமிழ் மொழியையும் அவர்கள் சார்ந்திருக்கிற இந்து சமயத்தையும் அதிகாரம் கொண்ட பௌத்தர்கள் பயத்துடன் பார்க்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இந்தப் பயம் தான் தமிழர்களுடன் சிங்களவர்கள் முரண்படுவதற்கு முக்கிய காரணம் என்று நான் கருதுகிறேன்.
கட்டுமரன்: இதுபற்றி மேலும் விளக்கமாகக் கூறுங்கள்.முதலில் மதத்தை எடுத்தீர்களானால், உலகிலேயே முதலில் தோன்றியது இந்து மதம்தான் என்பதற்கு வரலாறு நெடுகிலும் சான்றுகள் கிடைத்துள்ளன. புத்தர் இந்து மதத்தில் பிறந்து இந்து முறைப்படி வாழ்ந்து துறவியானவர். இதனால், பௌத்தம் இந்து மதத்துடன் பின்னிப் பிணைந்தது என்பதொன்றும் பௌத்தமத வழிகாட்டிகளுக்கு வியத்தகு வரலாறு அல்ல. அவர்கள் அனைத்தையும் அறிந்தே உள்ளனர். ஆனால் இந்த வரலாற்றை மறைத்து தனித்து நிற்கவே அதிகாரம் உள்ளோர் விளைகிறார்கள். அதேபோல் தமிழர்களையும் சைவ சமயத்தை மட்டும் பின்பற்றிப் பிரிந்துபோக மறைமுகமாக வற்புறுத்துகிறார்கள். இதன்படியே பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. நான் படித்தபோது ‘இந்து சமயம்’ என்றிருந்த சமய பாடம், பின்னர் ‘சைவ சமயம்’ என்று மாறியது. அதுவே, பின்னர் ‘சைவ நெறி’ (சைவம் என்பது சிவனை மட்டும் முழுமுதற் கடவுளாகக் கொண்டது.) என்று வலுவற்றதோர் பாடமாக மாற்றப்பட்டமை இதற்கு மிக நல்ல உதாரணம். நெறி என்பதற்கு ஒழுக்கம் என்று பொருள். ஆக ‘இந்து மதம்’ என்கிற பெருங்கடலை, ‘சைவ ஒழுக்கம்’ என்றொரு சிறு புள்ளியாகக் குறுக்கி இந்துக்களை அதற்குள் மட்டும் நிற்கச் சொல்கிறார்கள். அடுத்து மொழியை எடுத்துக்கொண்டால் வேறெந்த மொழிக்கும் இல்லாத
/
இரண்டு மதங்களையும் திட்டமிட்டுப் பிரித்து வைத்திருக்கிறது எமது கல்வித் திட்டம்!
பெருஞ்சிறப்புகள் தமிழுக்கு மட்டுமே உள்ளது. உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பதும், உலகின் அனைத்து மதங்களையும் உள்வாங்கியது தமிழ் இலக்கியம் என்பதும் பௌத்த மத கல்விமான்களுக்கும் மத வழிகாட்டிகளுக்கும் புதிய விடயமல்ல. தமிழில் இருந்து எடுத்துக்கொண்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சொற்கள் இன்று சிங்களத்தில் உண்டு.
இந்த உண்மைகளை நன்கறிந்த பௌத்த மத வழிகாட்டிகள், இலங்கைக்கு அருகில் தமி;ழ்நாட்டில் உள்ள தமிழர்களின் பெரும் எண்ணிக்கையை (ஏழு கோடிக்கும் அதிகம்); பார்த்து அஞ்சுகிறார்கள். மேலும், தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள ஏனைய மாநிலங்களையும் சேர்த்தால், இந்து மதத்தைப் பின்பற்றுகிற திராவிடர்களின் எண்ணிக்கை 20 கோடிக்கும் மேல் இருக்கலாம்.. ஆக, இந்தப் பெரும்பான்மையைக் கண்டு பௌத்தர்கள் பயப்படுகிறார்கள். இதன் விளைவாகவே தமிழ் – சி;ங்கள முரண்பாடுகள் முளைக்கின்றன.
தமிழர்கள் தங்கள் சமயத்தையும் சரி மொழியையும் சரி விட்டுக்கொடுத்திருக்கிறார்கள் என்பதை சிங்கள பௌத்த அதிகாரம் புரிந்துணரவேண்டும். நம்முடன் சேர்ந்ததுதான் பௌத்தமும் என்பதை தமிழ் அதிகாரம் விளங்கிக்கொள்ளவேண்டும். இவ்விரண்டு மதங்களுக்கும் ஒரே மாதிரியான உயரிய பண்புகள் உள்ளன. யாரையும் மதமாற்றம் செய்வதும் இல்லை, அதேபோன்று மதத்திலிருந்து யாரையும் நீக்குவதும் இல்லை. பௌத்தர்கள் இந்து மதக் கடவுள்களான சிவன், விஷ்ணு, அம்மன், முருகன், பிள்ளையார் ஆகியோரை பயபக்தியுடன் வணங்குகிறார்கள். ஆனால், இந்துக்கள் புத்தரை பெரிதாக வணங்குவதில்லை. இந்துக் கோயில்களின் அருகில் புத்தர் சிலை வைக்கப்பட்டால் எதிர்க்கத்தேவையில்லை. வணங்குங்கள். ஏனென்றால், புத்தரும் இந்துவே! அவருடைய போதனைகள் அனைவரது வாழ்க்கைக்கும் அவசியமானவை. இதனை சாமான்ய மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால், மதவாதிகளும் சமயம் மற்றும் மொழி சார்ந்த அமைச்சின் அதிகாரிகளும் மக்களிடையே இந்தப் புரிதலை ஏற்படுத்தவேண்டும். ஆனால், அவர்கள் அதைச் செய்யாமல், பிரிவினைகளை ஏற்படுத்துவதில்தான் குறியாக இருக்கிறார்கள் என்பது சகப்பான உண்மை.
கட்டுமரன்: இந்தப் பிரிவினை செயல்பாடுகள் எவ்விதம் நடத்தப்படுகிறது?மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களில் இந்து சமயம் சார்பாக, முன்பு அடக்கப்பட்டிருந்த விடயங்களில் பல காலப்போக்கில் நீக்கப்பட்டாயிற்று. மீண்டும் மாற்றம் செய்ய அமைச்சு மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அவ்வப்போது நான் தலையிட்டு அவற்றைத் தடுத்திருக்கிறேன்.
மொழி ரீதியில், இந்தியத் தமிழ், இலங்கைத் தமிழ் என்று பிரித்துவைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகள். யாழ்ப்பாணத்தில் பேசப்படுவது மட்டும்தான் சுத்தமான இலங்கைத் தமிழ் என்றும் எல்லோரும் அதைப் பின்பற்றவேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறோம். இதை மலையகத் தமிழர்கள் எதிர்ப்பார்கள் என்றும் அவர்களுக்குத் தெரியும். ஆனால், இலங்கைத் தமிழர்கள் தமக்கென்றொரு தமிழையும், தமக்கென்றொரு சமயத்தையும் உருவாக்கிக் கொண்டால், இலங்கையில் அவர்கள் மிகவும் சிறுபான்மையான தமிழர்கள் ஆகிவிடுவார்கள் என்பது அதிகாரத் தரப்பின் எதிர்பார்ப்பு. தவிரவும், பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ள இந்தியத் தமிழ்க் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் ஆக்கங்களை நீக்கவேண்டும் என்றும் தீர்மானித்திருக்கிறார்கள். அவற்றுக்குப் பதிலாக இலங்கை ஆளுமைகளின் ஆக்கங்கள் சேர்க்கப்படவேண்டும் என்கிறார்கள். அவ்வாறு சேர்க்கப்பட்டால், அவற்றில் பெரும்பாலானவை இஸ்லாம் மற்றும் சிங்கள படைப்பாளிகளுடைய ஆக்கங்களின் மொழிபெயர்ப்பாக இருக்காது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. இவ்விதம் இனங்;களுக்கிடையில் குழப்பம் விளைவிக்கும் வேலைகளைத் தான் பொறுப்பான அமைச்சுகளும் அதிகார மையங்களும் செய்துகொண்டிருக்கின்றன. தமிழர்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டிருக்கும் தரப்பினரும் இந்த கல்வி விடயத்தில் தமது கவனத்தைச் செலுத்துவதாகத் தெரியவில்லை.
இன்று உலகின் பல நாடுகளில் தமிழின் தேவை உள்ளதை அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அரச பணியாளர்களுக்கும் அவர்களது பணி நிமித்தம் தமிழ் தேவைப்படுகிறது. இதனால் பலர் தமிழ் கற்கிறார்கள். உதாரணமாக, குறித்த அரச நிறுவனம் ஒன்றின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு நான் தமிழ் கற்பித்தேன். அவர்கள் எழுத்தில் மட்டும்தான் அதிக ஆர்வம் காட்டினார்கள். நான் பேசுவதற்கு கற்றுக்கொள்ளுமாறு அறிவுரை சொன்னதை அவர்கள் கேட்கவில்லை. பின்னாளில் அவர்கள் சிங்கப்பூர் சென்று வந்தனர். அப்போது தமி;ழில் பேசமுடியாமல் போனதால் ஏற்பட்ட இழப்பு குறித்து என்னுடன் பகிர்ந்துகொண்டார்கள். அரசாங்கப் பாடசாலைகளில் சிங்கள மாணவர்கள் தமிழும் தமிழ் மாணவர்கள் சிங்களமும் படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தின் தேவையை நன்கறிந்துதான் போலும், மாணவர்களும் விரும்பிப் படிக்கிறார்கள். இது எதிர்கால வேலைவாய்ப்பு மட்டுமல்ல இணக்கப்பாட்டுக்கும் ஒரு உந்துசக்தியாக இருக்கும் என நம்பலாம்.
கட்டுமரன்: இங்கு தமிழர்கள் பலர் சிங்கள மொழிமூலம் கல்வி கற்கிறார்கள். அதன்போது அவர்கள் இஸ்லாமியராக அல்லது கிறிஸ்தவரான இருந்தால் சிங்கள மொழியில் அவர்களது மதத்தைக் கற்க அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்துக்களாக இருக்கின்ற போது பௌத்த மதத்தைக் கற்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுகிறார்கள். ஏன் இந்த நிலை?முதலில், தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியில் கற்பதற்கான நிர்ப்பந்தத்திற்கு, வடக்கு கிழக்கு தவிர்ந்த மற்ற மாகாணங்களில் தமிழ்ப் பாடசாலைகள் மிகக் குறைவாக உள்ளதே முதலாவது காரணம். அடுத்தது, தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை அல்லது ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட முக்கிய வசதியீனம் உள்ளதால், தமிழ் மாணவர்கள் சிங்களப் பாடசாலைகளுக்குச் செல்ல நேர்கிறது. சிலர் சிங்களத்தில் படித்தால் வேலைவாய்ப்பு இலகுவாக கிடைக்கும் என்று நம்பியும் சிங்கள மொழிமூலம் கற்கிறார்கள். கண்டியில் ஏராளமான தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் முறையான தமிழ்ப் பாடசாலை இல்லை. கொழும்பின் நிலையும் இதுதான். எனவே சிங்களப் பாடசாலைக்குச் செல்லும் தமிழ் மாணவர்கள் பௌத்த சமயம் படிப்பது தவிர்க்க முடியாததாக மாறிவிடுகிறது. அதைவிட்டால், இஸ்லாம் அல்லது கிறிஸ்தவம் படிக்கவேண்டும். ஏனெனில் இவை இரண்டும் சிங்கள மொழியில் படிப்பிப்பதற்கான வாய்ப்பு உண்டு. அதாவது சிங்கள மொழிமூலத்தில் அவை எழுதப்பட்டுள்ளன. இந்துமதத்திற்கு அவ்வாறில்லை. இந்த நிலைமை தமிழ் மொழி மூலம் படிக்க நேரும் சிங்கள மாணவர்களுக்கும் உள்ளது. ஏதாவதொரு காரணத்தால், சிங்களப் பிள்ளையொன்று தமிழ்ப் பாடசாலையில் படிக்க நேர்ந்தால், அதற்கு தமிழ் மொழியில் தனது சமயத்தைப் படிக்க முடியாது. இவ்வாறு இரண்டு மதங்களையும் திட்டமிட்டுப் பிரித்து வைத்திருக்கிறது எமது கல்வித் திட்டம்!
கட்டுமரன்: இந்து சமயத்தை கட்டிக் காக்கிறோம் என்று கூறி, இலங்கையில் இயங்கிவருகின்ற இந்து மதம் சார்ந்த நிறுவனங்கள் கல்விமான்களின் துணையுடன் ஏன் இந்த மொழிபெயர்ப்பு வேலைகளைச் செய்யக்கூடாது?(சிரிக்கிறார்) கல்விமான்களா? அவர்கள் இருந்தால் இன்று வரை தழிழும் இந்துமதமும் இவ்விதம் சிதைந்திருக்காது. அடுத்தது, இந்த முயற்சியை இலங்கை கல்வி அமைச்சும் விரும்பவே இல்லை. இந்து மதம் இந்தியாவிற்கு உரியது என்றும் சைவம் மட்டுமே இலங்கைக்கு உரியது என்றும் அவர்கள் ஆணித்தரமாக நிறுவ முயல்கிறார்கள். இதைவிட முக்கியமான விடயம் என்னவென்றால், இந்து மதம் மற்ற மதங்களைப் போல் எளிதானதல்ல. மிகவும் ஆழமானது. தேவாரங்களையும் பாசுரங்களையும் மிக எளிதாக மொழிமாற்றம் செய்ய முடியாது. அவ்வாறு செய்யக்கூடிய அறிவுஜீவிகளும் நம்மிடம் இல்லை.
சமீபத்தில் கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரிடம் இது குறித்துப் பேசியபோது அவர் சொன்ன பதில் என்னை வியக்கவைத்தது: “இலங்கையில் உள்ள இந்து மத வரலாறு இந்தியாவின் அடிப்படையில் உள்ளது. அது இலங்கைக்குப் பொருந்தாது. எனவே, இலங்கைக்கு ஏற்றதாக இந்து சயம வரலாறு மாற்றப்படவேண்டும் என்றார். பௌத்த மத வரலாற்றை நாங்கள் இலங்கைக்கு ஏற்றவாறு மாற்றிவிட்டோம்” என்கிற உண்மையையும் அவர் அப்போது உறுதிபடத் தெரிவித்தார்.
நாங்கள் ஏன் இந்தப் பதவியில் இருக்கிறோம் என்று தமிழ் அரசியல்வாதிகளும், உயர் பதவிகளில் இருக்கிற ஒவ்வொரு தமிழனும் சிந்திக்கத் தொடங்கினால் இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியும் என்று நினைக்கிறேன். அவர்கள் என்றும் போல செயற்படமுடியாதவர்களாகவே இருப்பார்களானால், மக்கள் சுயமாக விழித்துக்கொள்ளவேண்டும.