Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

நானும் யோசிக்கின்றேன் :
“நாம் ஏன் இந்த கறுப்புநிற ஆடையைத் தெரிவு செய்து அணிந்தோம்…?”

எங்கட ஆட்டோ ஒரு சிங்களவர். அந்த ஐயாவைத்தான் எல்லா இடங்களிற்கும் நாம் அழைத்துச்செல்வோம். எங்கு போகச்சொன்னாலும் கேள்விகேட்காது போவார். காசும் கொஞ்சமாகத்தான் எடுப்பார். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நாங்கள் கொட்டாராமுல்லைக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் ‘இப்போதைய சூழ்நிலையில் வெளியில் நடமாடவும் சரியான பயமாக இருக்கின்றது…?’ என்றேன். அவர் சொன்னார்….

02.07.2019  |  
புத்தளம் மாவட்டம்
இஸ்லாமியப் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் பணிப்பாளருமான ஜுவைரியா முகைதீன்

“இலங்கையில் நல்லிணக்கம் கொஞ்சமாவது இருக்கப் போய்தான் நாங்கள் இவ்வளவு தூரம் என்றாலும் இருக்கின்றோம். அல்லாவிட்டால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மாபெரும் அழிவை இந்த நாடு எதிர்கொண்டிருக்கும். நல்லிணக்கமானது எந்த எந்த உள்ளங்களில் இருக்கிறது என்பதை இனங்கண்டு அந்த உள்ளங்களை ஒன்று சேர்த்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவையும் நோக்கும் எமக்குள்ளது.” என்கின்றார் புத்தளம் பெண்கள் வலுவூட்டல் மற்றும் குடும்ப உளவளத்துணை ஆலோசகரும் இஸ்லாமியப் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் பணிப்பாளருமான ஜுவைரியா முகைதீன். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அவரின் அனுபவத்தை கட்டுமரத்திற்கு அவர் வழங்கிய செவ்வியினூடாக பகிர்ந்துகொண்டார்.

தகட்டுமரன் : நல்லிணக்கம்… நல்லிணக்கம்.. என்று கொஞ்சம் 
சொஞ்சமாக கட்டிசேர்த்த தேன்கூட்டில் யாரோ கல்லெடுத்து 
எறிந்துவிட்டதைப்போலாகிவிட்டது இன்றைய இலங்கை நிலை. 
நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

ஜுவைரியா முகைதீன்: எங்கட ஆட்டோ ஒரு சிங்களவர். அந்த ஐயாவைத்தான் எல்லா இடங்களிற்கும் நாம் அழைத்துச்செல்வோம். எங்கு போகச்சொன்னாலும் கேள்விகேட்காது போவார். காசும் கொஞ்சமாகத்தான் எடுப்பார். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நாங்கள் கொட்டாராமுல்லைக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் ‘இப்போதைய சூழ்நிலையில் வெளியில் நடமாடவும் சரியான பயமாக இருக்கின்றது…?’ என்றேன். அவர் சொன்னார், ‘எங்கட உயிர் போகின்றவரை நாங்கள் உங்களுக்கு ஒன்றும் நடக்க விடமாட்டோம்… இந்தப் பகுதியில் வாழ்பவர்கள் அப்பாவிகள், ஏழை எளிய மக்கள் நாங்கள் எதுவும் நடக்கவிடமாட்டோம்.”என்றார். நல்லிணக்கம் இருக்கிறபடியால்தான் இப்படி அவரால் பேசமுடிகிறது. இதுமட்டுமல்ல, போகின்ற வழியில் பொலிஸ்காரர் எங்களை சோதனை செய்தாலும் இவர் அதை பார்த்துக்கொண்டிருப்பதில்லை. உடனே தான் முன்வந்து கதைப்பார். ‘இவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவுகின்றவர்கள். இவர்களை போய் சோதனை செய்கின்றீர்களே…! இவர்கள் அவசரமாக நீதிமன்றத்துக்கு… பொலீசுக்கு எல்லாம் மக்களின் சேவைக்காக போகின்றவர்கள்….’ எனக் கதைப்பார். அப்போது பொலிஸீசாரோ, ‘அவர்களை விடவும் சாரதியான உனக்குத்தான் அவசரம்’ என ஏசுவார்கள். எங்கள் ஆட்டோஐயா கல்வியறிவில் குறைந்தவர்தான் ஆனால் அவர்போன்றவர்களிடம் ‘மனிதம்’நிறைந்திருக்கிறது. அதனால் தான் நாங்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறம்.

தகட்டுமரன் :ஆனாலும் முறுகல் நிலைகளும் பாதிப்புக்களும் 
தொடர்கதையாகத்தானுள்ளது…

ஜுவைரியா முகைதீன்: இதுவரை காலமும், தமிழ் முஸ்லிம் மக்களிடம் பிரச்சினையிருந்திக்கின்றது…, சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சினை எழுந்திருக்கின்றது…, ஆனால் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இதுவரை காலமும் சிறியளவிலோ அல்லது பெரியளவிலோ கருத்து முரண்பாடோ பிரச்சினையோ இருந்ததாக நான் அறியவில்லை. அப்படியானதொரு உறவே ஏப்ரல் 21 ஆம் திகதியின் பின்னர் தகர்க்கப்பட்டது. ஆனாலும், புத்தளம் பகுதியை பொறுத்தமட்டில், தமிழ், கிறிஸ்தவ, முஸ்லிம் மக்கள் மத்தியிலான உறவு நிலையானது ஓரளவிற்கு நன்றாக இருக்கிறது. ஆனால், பௌத்த – முஸ்லிம் மக்களுக்கு இடையிலான இனவாதம் எங்கிருந்து தலைதூக்கியதோ தெரியாது. மிகமோசமான பாதிப்புகளை அது ஏற்படுத்துகிறது. 21 ஆம் திகதியை ஒரு சாட்டாகவைத்து ஒரு பூகம்பத்தை உருவாக்கும் முயற்சிகள்தான் இந்தக் கலவரங்கள். மிக நீண்ட நாட்களாக அவர்கள் மத்தியில் ஏற்பட்ட ஒரு வடுவே இந்த சந்தர்ப்பத்தில் வெளிப்பட்டதாக உணரமுடிகிறது.

தகட்டுமரன் :நீண்ட கால வடு என நீங்கள் குறிப்பிட விரும்புவது எதனை?

ஜுவைரியா முகைதீன்: முஸ்லிம்களினுடைய பொருளாதார, சனத்தொகை, கல்வி வளர்ச்சி, முஸ்லிம் அமைச்சர்களின் செயற்பாடுகள் என்பன சிங்கள, தமிழ் சமூகங்களின் மத்தியில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு மனநிலையை உருவாக்கியுள்ளது என்பதை கடந்த கால திகண, மாவனெல்ல என பல சம்பவங்கள் அதை வெளிப்படுத்தியது. அவைதான் நான் குறிப்பிட்ட நீண்ட கால வடுக்கள்.

தகட்டுமரன் :இஸ்லாமிய மக்கள் முன்னர் ஏனைய இனங்களுடன் 
சுமூகமான உறவை பேணியிருந்தனர். பிற்காலத்தில்தான் அவர்கள் 
தம்மை தனித்து வேறுபடுத்திக்கொண்டு வாழமுற்பட்டனர் என்ற 
குற்றச்சாட்டு உள்ளது. அதுபற்றி…

ஜுவைரியா முகைதீன்: ஆரம்பத்தில் அவர்களுக்கு இடையிலான உறவுமுறையானது நன்றாகத்தான் இருந்தது. அது பின்னர் வளர்ச்சியடைந்தும் வந்தது. திடீர் என்று முஸ்லிம் சமுகத்தினர் முகத்தினை மூடுகின்ற வகையிலான ஆடைகள், கறுப்பு நிற ஆடைகள் அபாயா, பர்தா போன்ற ஆடைகளை உள்வாங்கத்தொடங்கினர். இதுவொரு, பத்துப்பதினைந்து வருடங்களுக்குள் நடந்தது. அவர்கள் அதை ஒரு இனமத அடையாளமாகத்தான் ஏற்படுத்திக்கொண்டனர்.தம்மை தனிமைப்படுத்தவல்ல. இதை ஏனைய சமூகங்கள் ஏற்கவில்லைத்தான். ஆனால் அதைக்காரணமாக வைத்து ஒரு அடக்குமுறையினைப் பயன்படத்த முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தகட்டுமரன் :ஒரு பல்லின சமூகத்தில், முரண்பாடுகள் எழுந்துள்ள 
சந்தர்ப்பங்களில் முற்றுமுழுதாக தம் அடையாளத்தையே 
மறைத்துக்கொண்டு நடமாடுவதைத்தான் தடுப்பதாக கூறப்படுகிறது. 
அதுபற்றி ஒட்டுமொத்த சமூகமே கலவரமடைவது ஏன்?

ஜுவைரியா முகைதீன்: அப்படிச் சொல்லமுடியாது, இந்த அறிவித்தலுக்குப் பின் சாதாரண மக்களும் கறுப்பு, தலைமூடல் என்கண்டவுடனேயே தீண்டத்தகாதவர்களாக பார்ப்பதும், அலுவலகங்களில் தலைமூடலையே நீக்கும்படியும் பணிக்கிறார்கள். அது நியாயமற்றது. அதை ஏற்றுக்கொள்ளமுடியாது. உண்மையில், திடீரென ஒரு பதினைந்து, இருபது வருடங்களுக்கு இடையில் முஸ்லீம்கள் முகம் மூடியவுடன் ஏனைய இன மதத்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் ஒரு திரையொன்று எழுகின்றது… யார்…? ஏன்…? இவர்கள் எதற்காக இப்படி முகத்தினை மூடுகின்றார்கள்…? ஏன்ற கேள்விகளுடன் அன்னியமாகிறார்கள்.

இஸ்லாமியப் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் பணிப்பாளருமான ஜுவைரியா முகைதீன்.

இனவாத சக்திகளால் அந்நிய கலாச்சாரத்தினை உதாரணமாக சவுதி அரேபிய நாடுகளின் கலாச்சாரத்தினை இங்கு கொண்டுவந்துவிட்டார்கள். என்ற ஒரு பயம், பதற்ற உணர்வுவொன்று மத்தியில் எழுந்திருக்கலாம். நினைக்கின்றேன். பயங்கரவாதிகளும் அந்த ஆடைக்குள் மறைத்து ஏதாவது கொண்டுவந்துவிடுவார்களோ என்று அச்சமடைபவர்களும் உள்ளனர். ஒரு விடயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியதாக உள்ளது. முஸ்லிம்கள்தானே இந்த படுகொலை நிகழ்வுடன் தொடர்புபட்டது. அந்த வகையில் அவர்கள் பயப்படுவதும் நியாயம் உள்ளது. என்றாலும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சிவில் சமுகத்தில் உள்ளவர்களை அதே வலியிலும் வேதனையிலும் வைத்திருப்பது என்பது நியாயமற்ற செயற்பாடு. இதனால்தான்மக்கள் கலவரமடைகிறார்கள்.

தகட்டுமரன் :இந்த பதினைந்து இருபது ஆண்டுகளுக்குள் 
வந்த இந்த ஆடை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஜுவைரியா முகைதீன்: உடையென்பது அவரவர் அடிப்படை உரிமையே… என்றாலும் நானும் யோசிக்கின்றேன் பல்லின கலாச்சாரத்தினை பின்பற்றுகின்ற நாடொன்றில் நாங்கள் வசிக்கின்றோம். நாம் ஏன் இந்த கறுப்புநிற ஆடையைத் தெரிவு செய்து அணிந்தோம்;…? ஏன் இந்த முகத்தை மூடினார்கள்…? அது அவங்கட மார்க்கம்… அவங்கட கலாச்சாரம்… என்று சொன்னாலும் இந்த ஆடையை அணிவதற்கு முன்னரே முஸ்லிம் பெண்கள் யோசித்திருக்கலாம். இந்த ஆடை நமக்கு நம்முடைய நாட்டுக் கலாச்சாரத்துக்குப் கால தட்ப வெப்ப நிலைக்கு பொருத்தமானதா என்பது பற்றி, கொஞ்சம் யோசித்திருக்கலாம். இப்ப கழற்ற முடியவில்லை. அந்த ஆடையின்றி பலரால் வெளியில் வரமுடியவில்லை. வீடுகளிலேயே அவர்கள் முடங்கி கிடக்கின்றனர். இன்னும் சிலர் முகம் மூடும் நாடுகளுக்குச் செல்வதற்கென தஞ்சம் கோருகின்றனர். பாடசாலைக்குச் செல்கின்றார்கள் இல்லை, பதவிகளை இராஜனாமா செய்கின்றார்கள், மதரஸாக்களுக்குப் போக மறுக்கின்றார்கள். சில ஆண்கள் முகம் மூடாமையின் காரணமாக நீங்கள் வெளியில் போகத் தேவையில்லை வீட்டுக்குள்ளேயே… இருங்கள் என வற்புறுத்திறார்கள்…இதை அணிவது அணியாதிருப்பது அவரவர் விருப்பம். ஆனால் இதெல்லாம் ஒரு பாரிய பிரச்சினையாக தற்போது உருவெடுத்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டிருப்பது பெண்கள். அதுதான் கவலையாக உள்ளது.

தகட்டுமரன் :இந்த சவால்களுக்கெல்லாம் முகம்கொடுத்துக்கொண்டு 
சகவாழ்வை கட்டியெழுப்ப சமூகச்சொயற்பாட்டாளர் என்ற வகையில் 
எவ்வாறான செயற்பாடுகளை செய்யவேண்டும் என எண்ணுகிறீர்கள்?

ஜுவைரியா முகைதீன்: இது சார்ந்த ரீதியில் நிறைய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. முதலில் பாதிக்கப்பட்ட இரு சமூகத்தவர்களிடமும் அந்தந்த சமூகம் சார்ந்த நீதி, நியாயமான எண்ணங்களைக் கொண்டவர்கள் இது சார்ந்த ரீதியில் நிறைய உரையாடலை நிகழ்த்த வேண்டும். அது தனியாள், குழுவாக இணைத்து இந்த கலந்துரையாடலை நிகழ்த்த வேண்டும். ஆறுமாத காலத்தின் பின்னர் முஸ்லிம்களில் பாதிக்கப்பட்ட ஒருவர் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்;களிடையேயும்; இதேபோன்று பாதிக்கப்பட்ட முஸ்லிம்களிடம் சிங்கள இனத்தவரும் சென்று கதைக்கவேண்டும். பின் இந்த நான்கு தரப்பிலும் இருந்து தெரிவுசெய்யப்பட்டவர்கள் ஒரு இடத்தில் சந்தித்து ஒரு கலந்துரையாடலைக் கட்டியெழுப்ப வேண்டும். இழப்புக்களில் வலி வேதனைகளின் வரலாறுகளை தொகுத்து சொல்லக் கூடியதாக, அதாவது எந்தளவிற்கு நாங்கள் வலியையும் வேதனையையும் இரண்டு பக்ககளாலும் அனுபவிக்கின்றோம் என்பதை ஒரு ஒழுங்கான தரப்படுத்தலான உளவளத்துணையாளரால் அது செயற்படுத்தப்பட வேண்டும். மூவினத்தைச் சேர்ந்த உளவளத்துணையாளர்கள் அங்கிருப்பார்களேயானால் அவர்கள் முதலில் ஒருங்கிணைந்து அவர்களுக்குள் தனித்தனிக் கலந்துரையாடல்களை நிகழ்த்தி அதன் பின்னர் ஓரளவிற்கேனும் ஒன்றிணைக்கின்ற ஒரு நிலைமைக்குக் கொண்டு வரவேண்டும். இதை ஏற்கனவே காணமலாக்கப்பட்ட உறவுகளை ஒன்றிணைப்பதற்காக நாம் இதை நடைடுறைப்படுத்தியுள்ளோம். அது வெற்றியளித்துள்ளது. இதற்கு ஊடகங்களும் உதவவேண்டும். ஊடகங்களின் வாயிலாக இவ்வாறான கலந்துரையாடல்களைக் கொண்டுவருகின்ற போது இப்படியான வலிகளைக் பலமடங்கு குறைக்கலாம். இருதரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கின்றோம்… எங்களுக்கும் வலியிருக்கின்றது அதே வலி அவர்களுக்கும் இருக்கின்றது இந்நிலையில் இதையும் தாண்டி நாங்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதை தமிழ் சிங்கள ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தத் தொடங்கினோமேயானால் நிறைய மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.