தேர்தல் கண்காணிப்பினர்:
“தேர்தல் வன்முறைகளைத் தடுக்கும் முழுப்பொறுப்பும் மக்களுக்குள்ளது!”
எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி அபேட்சகர் நேரடியாக வன்முறையுடன் தொடர்புபடுவதில்லை என்பது எமது கடந்த கால தேர்தல் அவதானத்தின் போது கண்ட அனுபவம். மக்களது நாளாந்த நடவடிக்கையுடன் தொடர்புபடுகின்ற மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி உறுப்பினர்கள் ஊடாகத்தான் வன்முறைகளைத் தூண்டுகின்ற விடயங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன….
“அரசாங்க அதிகார பலமுடையவர்கள் அரச சொத்துக்களைப் பிரசார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றியீட்ட முயற்சிக்கின்றார்கள். இவ்வாறானவர்கள்தான் தொடர்ச்சியாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுகின்றனர். ஆனால் அரசியல் செயற்பாட்டுக்கு மேற்கூறப்பட்ட பலங்கள் இல்லாமல் ஆர்வத்துடன் வருபவர்கள் மக்களிடம் தமது கொள்கைகள் கொண்டு செல்ல முடியாமல் பின்தள்ளப்படுகின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகளை தவிர்ப்பது தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் பணியாகவுள்ளது” என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் ((CaFFE)) பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மகீன் தெரிவிக்கிறார். அவருடன் தகட்டுமரன் மேற்கொண்ட நேர்காணல் விபரமாக கீழே தரப்படுகிறது.
த கட்டுமரன்: இந்தத் தேர்தலில் ‘நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின்’ ((CaFFE)) பங்கு என்னவாக இருக்கின்றது?பதில்: கபே எனும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பானது ஒவ்வொரு தேர்தலும் சுதந்திரமானதும் நீதியானதுமான முறையில் நடாத்தப்பட வேண்டுமென்பதற்காக நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. அந்த கண்காணிப்பு ஊடாக ஒவ்வொரு அபேட்சகர்களுக்கும் சம அளவிலான பிரச்சார சூழ்நிலை, தேர்தல் நடவடிக்கைகளுக்குரிய ஏற்பாடுகள் போன்றவற்றைப் பெற்றுக் கொடுக்கின்ற அமைப்பாகவும் செயற்படுகின்றது. வேட்பு மனு தாக்கல் செய்ததிலிருந்து தேர்தலுக்கு முன்தினம் வரையான செயற்பாடுகளை கண்காணிக்க 175 கண்காணிப்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். அத்தோடு தேர்தல் தினத்தில் வாக்களிப்பு நிலையம் மற்றும் அதன் சூழலையும் கண்காணிப்பதற்காக மொத்தமாக எமது அமைப்பினூடாக 2000 நேரடி கண்காணிப்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.
த கட்டுமரன்: இதற்கு தேர்தல் ஆணைக்குழு இருக்கும்போது, சிவில் அமைப்புக்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் தேவை ஏன் ஏற்படுகின்றது?பதில்: தேர்தலை நடத்துவதற்கான முழு அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிடம் காணப்படுகின்றது. தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீரிக்கப்பட்ட 7 கண்காணிப்பு அமைப்புக்கள் இலங்கையில் காணப்படுகின்றன. தேர்தல் காலங்களில் தேர்தல் ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் வேலைப்பழு மிக்கவர்களாக காணப்படுகின்றனர். அவர்களுக்கும் முறைப்பாடுகள் கிடைக்கக்கூடியதாகத்தான் இருக்கின்றது. ஆனால் கபே போன்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கு முறைப்பாடுகள் கிடைக்கின்ற போது நீண்டகால, குறுங்கால கண்காணிப்பாளர்கள் ஊடாக அந்த முறைப்பாடுகள் தொடர்பாக சரியாக விசாரித்து உறுபடுத்திக் கொண்டுதான் அதனை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்புகின்கின்றோம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் தேரதல் ஆணைக்குழுவுக்கு மிகவும் இலகுவாக நடவடிக்கை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
தேர்தல் ஆணைக்குழுவுடன் வேறு எத்தகைய தொடர்புகள் பேணப்படுகின்றன?
கட்சித் தலைவர்கள், கட்சி செயலாளர்களின் கூட்டங்கள் நடைபெறுகின்ற போது தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகின்றது. நாங்களும் அந்த இடங்களுக்குச் சென்று பல்வேறு கருத்துக்களையும் பரிமாறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கின்றது. அதுமாத்திரமல்லாமல் கண்காணிப்பு அமைப்புகளுக்கு மாத்திரம் வெவ்வேறாக ஒன்றுகூடல்களை ஏற்படுத்தி அதனூடாகவும் பல ஆலோசனைகளையும் பரிமாறிக் கொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
பதில்: தேர்தலுக்கு முன்னரான, தேர்தல் தினம், தேர்தலுக்கு பின்னரான என மூன்று காலப்பகுதிகள் தேர்தலின் போது காணப்படுகின்றது. இம் மூன்று காலப்பகுதிகளிலும் இந்தக் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. தினந்தோரும் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமே இருக்கின்றன.
முறைப்பாடுகளில் சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பில் அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. கடந்த சில தினங்களில் களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது தொடர்பில் வெவ்வேறான வித்தியாசமான முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பெறுகின்றன.
குறிப்பாக கடந்த திங்கட்கிழமை (07) ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற சங்கைக்குரிய பத்தரமுல்ல சீலரத்தன தேரர் தொடர்பில் அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் குறிப்பாக முகப்புத்தகத்தில் குறிப்பிட்ட அபேட்சகரின் புகைப்படத்துடன் அவருடைய கொள்கைகள் தொடர்பாக ஒவ்வொருநாளும் நகைப்புக்கிடமான பதிவுகள் பரிமாறப்பட்டு வந்தன. இது தொடர்பில் குறிப்பிட்ட அபேட்சகரை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவருடைய கொள்கை தொடர்பில் எந்தவொரு பதிவையும் முகப்புத்தகம் வாயிலாக பதிவிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இனந்தெரியாத குழுவொன்று தேர்தலை திசைதிருப்ப வேண்டுமென்பதற்காகவும் குறித்த அபேட்சகரை நகைச்சுவைக்குட்படுத்த வேண்டும் என்பதற்காகவும் வித்தியாசமான பதிவுகளை பதிவிட்டுக் கொண்டிருந்தார்கள். இது தொடர்பான முறைப்பாட்டை தேர்தல் ஆணைக்குழுவுக்கும், ஊடகங்களுக்கும் அனுப்பியிருந்தோம்.
இவ்வாறான பொய்யான போலிப் பிரசாரங்கள் தவிர்க்கப்படவேண்டியவையாகும்.
பதில்: முறைப்பாடுகளை உடனுக்குடன் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்புகின்றோம்.
குறிப்பாக வேட்பு மனு தினத்தில் கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கிரிபத்கொட நகரிலே குறிப்பிட்ட அபேட்சகர் ஒருவரின் பாரிய பதாதை ஒன்றைக் காணக்கூடியதாக இருந்தது. அந்த முறைப்பாட்டினை புகைப்பட ஆதாரத்துடன் தேர்தல் ஆணைக்குழுவுக்கும், பொலிஸ் திணைக்களத்துக்கும் உடனடியாக அனுப்பிவைத்தோம். 24 மணித்தியாலத்துக்குள் அந்த பதாதையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை குறிப்பிட்ட சாரார் மேற்கொண்டிருந்தனர். நாங்கள் அனுப்பும் முறைப்பாடுகளுக்கு தீர்வைப் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்கின்றோம்.
நாம் கடந்த மாகாண சபை தேர்தலொன்றின்போது கிழக்கு மாகாணத்தில் தபால் திணைக்களத்துக்குச் சொந்தமான கட்டிடத்தை அரசியல் செயற்யாட்டுக்காக ஒரு அபேட்டசகர் பயன்படுத்தியபோது அதற்கெதிராக முறைப்பாடு செய்து அத்துஷ்பிரயோகம் இடம்பெறுவதை தடுத்து நிறுத்தினோம். இவ்வாறு பணபலமுடையவர்கள் அதிகமாக செலவு செய்து வாக்காளர் மத்தியிலே பிரபலமடையப் பார்க்கின்றார்கள். அரசாங்க அதிகார பலமுடையவர்கள் அரச சொத்துக்களைப் பிரசார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி விருப்பு வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றியீட்ட முயற்சிக்கின்றார்கள். இவ்வாறானவர்கள்தான் தொடர்ச்சியாக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுகின்றனர். ஆனால் அரசியல் செயற்பாட்டுக்கு மேற்கூறப்பட்ட பலங்கள் இல்லாமல் ஆர்வத்துடன் வருபவர்கள் மக்களிடம் தமது கொள்கைகள் கொண்டு செல்லப்பட முடியாமல் பின்தள்ளப்படுகின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகளை தவிர்ப்பதுதான் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் முக்கியமான பணி. அனைத்து கட்சிகளுக்கும், அபேட்சகர்களுக்கும் சம அளவிலான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் எமது எதிர்பார்ப்பாகும்.
பதில்: தேர்தல் வன்முறைகளை தடுக்கின்ற முழுமையான பொறுப்பு பொதுமக்களைத்தான் சாருகின்றது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலே போட்டியிடுகின்ற 35 வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கி பிரச்சார நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபடுகின்ற குழுவினர்களாக 225 பாராளுமன்ற உருப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் காணப்படுகின்றனர்.
எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி அபேட்சகர் நேரடியாக வன்முறையுடன் தொடர்புபடுவதில்லை என்பது எமது கடந்த கால தேர்தல் அவதானத்தின் போது கண்ட அனுபவம். மக்களது நாளாந்த நடவடிக்கையுடன் தொடர்புபடுகின்ற மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி உறுப்பினர்கள் ஊடாகத்தான் வன்முறைகளைத் தூண்டுகின்ற விடயங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. இவர்களது ஆதரவாளர்களுக்கு வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்கள் வித்தியாசமான முறையில் அணுகப்பட்டு வன்முறைகள் அதிகரிப்பதைக் காண்கின்றோம்.
சிறிய கருத்து முரண்பாடுகள், நிரந்தர அங்கவீனம் மற்றும் உயிரிழப்புக்களையும் உண்டாக்கும் வன்முறைகள் ஆதரவாளர்கள் மத்தியிலே உருவாகின்றன. இந்த விடயத்தில் ஆதரவாளர்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
தேர்தல் என்பது இரண்டு மாதங்களுக்குள் நிறைவடையும் ஒரு செயற்பாடு. இக்காலப்பகுதியில் ஆதரவாளர்கள் தங்களது ஏனைய அபேட்சகர்கள் தொடர்பில் ஆதரிக்காவிட்டாலும் அவர்கள் தொடர்பில் வெறுப்புப் பேச்சுக்களை பேசாமல் விடுவது வன்முறைகளைக் குறைக்க வழிவகுக்கும்.
பதில்: தேர்தலில் பிரதான மோசடியாக கள்ள வாக்களித்தல் என்ற விடயம் காணப்படுகின்றது. கள்ளவாக்குப் போடுகின்றவர்களை பிடியாணையின்றி கைது செய்யும் அதிகாரம் சட்டத்தில் காணப்படுகின்றது.
இறந்தவர்கள் மற்றும் வெளிநாட்டிலுள்ளவர்களது வாக்காளர் அட்டைகளை எடுத்துக் கொண்டு வாக்களிக்க முற்படுவதை வாக்காளர்கள் முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று வாக்காளர்களைக் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகளை தேர்தல் ஊழல் செயற்பாடுகளாக நாங்கள் பார்க்கின்றோம்.
கேள்வி: தேர்தல் முடிந்த பிறகு வாக்கு எண்ணும் வரையான காலப்பகுதி வரை எவ்வாறான கண்காணிப்பு நடைமுறைகள் உள்ளன?
பதில்: இவ்விடயத்தில் வாக்காளர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு காணப்படுகின்றது. பொதுவாக அனைவரும் கண்காணிப்பாளர்களாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் செயற்பாடுகள் அனைத்தையும் அவர்கள் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வாக்களிப்பு நிலையத்தில் தேர்தல் அதிகாரிகள், அபேட்சகர்களின் முகவர்கள், கண்காணிப்பு அமைப்புக்களின் பிரதிநிதிகள் அங்கு கண்காணிக்கின்றனர். தேர்தல் நடவடிக்கைகள் மாலை 4.00 மணிக்கு முடிவடைந்தால் இவர்களின் முன்னிலையில் தான் வாக்கு எண்ணும் நிலையத்துக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதன்போது கையொப்பங்கள் இடப்பட்டு பல உபாய முறைகள் கையாளப்பட்டுத்தான் அவை அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் வாக்களிப்பு நிலையத்தில் எத்தனை வாக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன என்ற ஆவணங்ககள் அவர்களின் கையில் காணப்படுகின்றன. வாக்களிப்பு நிலையத்தில் அளிக்கப்பட்ட வாக்குக்கும் எண்ணப்படுகின்ற வாக்குக்குக்கும் வித்தியாசங்கள் காணப்பட்டால் தேர்தல் ஆணைக்குழுவால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பதில் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை நாட்டின் எந்தவொரு பிரஜையும் எமக்கு வழங்க முடியும். எமது தொலைபேசி 0114341524 எனும் இலக்கத்துக்கு அல்லது 0112866224 எனும் தொலைநகல் இலக்கத்துக்கு முறைப்பாடுகளை வழங்கமுடியும். அந்த முறைப்பாடுகளை உறுதிப்படுத்திய பின்னர் நாம் உரிய நடவடிக்ககைகளை மேற்கொள்வோம்.